நாட்டின் மொத்த சனத்தொகை 2 கோடி 2இலட்சத்தை தாண்டியுள்ளது. அறிக்கை ஜனாதிபதியிடம்
நாட்டின் மொத்த சனத்தொகை 2 கோடி 2 இலட்சத்தை தாண்டியுள்ளதென ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட குடிசன மதீப்பீட்டு புதிய அறிக்கையில் தகவல்கள் குறிப்பிட்டுள்ளதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தெரிவித்துள்ளது.
30 ஆண்டுகளுக்கு பின்னர் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் அண்மையில் நடத்தப்பட்ட குடிசன மதீப்பீட்டு கணீப்பீட்டின்படி நாட்டின் சனத்தொகை 2 கோடியே 2 இலட்சத்து 75 ஆயிரத்து 97 ஆகுமென குடிசன மதீப்பீட்டு புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணீப்பீட்டின் அடிப்படையில் அப்போதைய சனத்தொகையிலும் பார்க்க 7.9 சதவீத அதிகரிப்பாகும். கூடுதலான சனத்தொகை மேல் மாகாணத்திலேயே உள்ளது. இங்கு 28.8 சதவீத சனத்தொகையும், வடமாகாணத்தில் 5.2 சதவீத சன்த்தொகையும் காணப்படுகின்றது.
மாவட்ட மட்டத்தில் கூடுதலான சனத்தொகை கொழும்பு மாவட்டத்திலே காணப்படுகின்றது. 23 இலட்சத்து 23 ஆயிரத்து 827 பேர் உள்ளனர். சனத்தொகை குறைந்த மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது. 92 ஆயிரத்து 228 பேர் உள்ளனர். இலங்கை சனத்தொகை வருடாந்த வளர்ச்சி வீதம் 0.7 சதவீதமாகுமென ஆரம்ப கணீப்பீடுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளையில், சிறிலங்கா அரசு மேற்கொண்ட மக்கள்தொகை கணிப்பீட்டில் யாழ்ப்பாண மாவட்ட மக்கள்தொகையில் கடும்வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதையும் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தி உள்ளன.
1981ல் 734,474 என்ற அளவில் கணிக்கப்பட்ட மக்கள்தொகை, 2012ல் 583,017 என்ற அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த புள்ளிவிபரங்களின் படி ஆகக்கூடிய சனத்தொகை மேல் மாகாணத்திலேயே உள்ளது. அங்கு சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 28 வீதமானோர் வசிக்கின்றனர். வடக்கில் ஆகக் குறைந்தளவில் 5.32 வீதமான மக்கள் வசிக்கின்றனர்.
தலா இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்ற மாவட்டங்களாக கொழும்பு, கம்பகா ஆகியன உள்ளன. கொழும்பில் அதிகளவாக 2,323,826 பேரும், அடுத்ததாக கம்பகாவில் 2,298,588 பேர் வாழ்கின்றனர்.
அதையடுத்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் மாவட்டங்களாக குருநாகல் [1,611,407], கண்டி [1,368,216], களுத்துறை [1,214,880], இரத்தினபுரி [1,082,299], மற்றும் காலி [1,059,046] ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
முல்லைத்தீவும் மன்னாரும் குறைந்தளவு சனத்தொகையைக் கொண்ட- அதாவது 1 இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களாக உள்ளன.
முல்லைத்தீவில் 92,228 பேரும், மன்னாரில் 99 ஆயிரத்து 063 பேரும் வசிப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
கடந்த பத்தாண்டுகளில் அதிகபட்ச சனத்தொகை வளர்ச்சியாக- 1.33 வீதம் அனுராதபுர மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
அதையடுத்து களுத்துறையில் 1.23 வீதமும், கம்பகாவில் 1.02 வீதமும், சனத்தொகை வளர்ச்சி காணப்படுகிறது.
பெருந்தோட்டப் பகுதிகளான நுவரெலிய மற்றும் பதுளை மாவட்டங்களில் மிகக் குறைந்தளவு சனத்தொகை வளர்ச்சியே பதிவாகியுள்ளது.
நுவரெலியவில் 0.5 வீதமும், பதுளையில் 0.37 வீதமும் சனத்தொகை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சிறிலங்காவிலேயே சனஅடர்த்தி மிக்க மாவட்டமாக கொழும்பு உள்ளது. அங்கு ஒரு சதுர கி.மீ இற்கு 3438 பேர் வாழ்கின்றனர்.
அதையடுத்து கம்பகாவில் ஒரு சதுர கி.மீற்றருக்கு 1714 பேர் வாழ்கின்றனர்.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும், மொனராகல மாவட்டத்திலும் ஒரு சதுர கி.மீற்றருக்கு 100இற்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர்.
முல்லைத்தீவில் மிகக்குறைந்தளவு சன அடர்த்தியாக- ஒரு சதுர கி.மீற்றருக்கு 38 பேரே வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment