By the Socialist Equality Party (Sri Lanka) சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), மே 16 அன்று தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் நெய்வேலி நகரத்தில், நான்கு உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்கள் மீது சரீரத் தாக்குதல் தொடுக்கப்பட்டதையும், பின்னர் போலீஸ் அவர்களை கைது செய்ததையும் கண்டனம் செய்கின்றது.
உலக சோசலிச வலைத் தள (WSWS) குழுவினர், இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் (என்.எல்.சி) 14,000 ஒப்பந்த தொழிலாளர்களின் நீடித்த வேலைநிறுத்தத்தில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்தனர். என்.எல்.சி. ஊழியர்கள் தமது ஒடுக்குமுறை நிலைமைகளை எதிர்த்து ஏப்ரல் 21 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதோடு, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அ.இ.அ.தி.மு.க.) மாநில அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் செயற்படும் போலீசாரினால் மீண்டும் மீண்டும் பெருந்தொகையில் கைது செய்யப்பட்டனர்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல தொழிலாளர்கள், WSWS வெளியிட்ட “இந்தியா: வேலைநிறுத்தத்தில் இறங்கியிருக்கும் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை தொழிற்துறைரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் விரிவுபடுத்த வேண்டும்” என்ற கட்டுரையின் தமிழ் பிரதிகளை எடுத்து தங்களுக்குள் விநியோகிக்கத் தொடங்கினர். துண்டுப்பிரசுரம் அ.இ.அ.தி.மு.க. தொழிற்சங்க அலுவலர்களின் சீற்றத்தைத் தூண்டியதால், அவர்கள் WSWS குழுவினரை எதிர்கொண்டு அவர்களின் முகத்தில் குத்தத் தொடங்கினர்.
அங்கு வந்த போலீஸ் தாக்கியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மாறாக WSWS ஆதரவாளர்களை அருகில் உள்ள தெர்மல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். அருண் குமார், சசி குமார், மோசஸ் ராஜ்குமார் மற்றும் சரவணன் ஆகிய நான்கு பேரையும் புகைப்படம் எடுத்து, அவர்களது பெயர்கள் மற்றும் முகவரிகளை பதிவு செய்துகொண்டதோடு அவர்களது அடையாள ஆவணங்களின் பிரதிகளையும் எடுத்துக்கொண்டனர். அவர்களது பைகளை சோதனையிட்ட போலீசார், உலக சோசலிச வலைத் தள ஆய்வு என்ற தமிழ் சஞ்சிகையின் பிரதிகளையும் மற்றும் WSWS கட்டுரைகளையும் பறிமுதல் செய்ததுடன், ஃபிளாஷ் டிரைவ் ரெக்கார்டரில் பதிவு செய்திருந்த பேட்டிகளையும் அழித்தனர்.
WSWS நிருபர்கள் குழு நெய்வேலியில் இருப்பதை வெளிப்படையாக எதிர்த்த போலீஸ், WSWS உறுப்பினர்களுக்கு என்.எல்.சி. தொழிலாளர்கள் மத்தியில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க உரிமை இல்லை என்று கூறினர். விசாரணையின் போது, தாக்குதலுக்கு பொறுப்பான அ.இ.அ.தி.மு.க. குண்டர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து WSWS கட்டுரையில் "மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்" பத்திகளை போலீசாருக்கு சுட்டிக்காட்டினார்.
போலீஸ், WSWS ஆதரவாளர்கள் சட்டத்தை மீறவில்லை என இறுதியில் ஏற்றுக்கொண்டு அவர்களை விடுதலை செய்யத் தள்ளப்பட்டதோடு, அவர்களது சொந்த பாதுகாப்புக்காகவே காவலில் வைக்கப்பட்டதாக கூட கூறினர். ஆயினும் போலீசார் அ.இ.அ.தி.மு.க. அலுவலர்களுக்கு எதிரான ஒரு உத்தியோகபூர்வ புகாரை ஏற்க மறுத்ததுடன், WSWS குழுவினரை அன்றே நகரத்தை விட்டு வெளியேறுமாறு “அறிவுரை" கூறினர்.
எவ்வாறாயினும், வலதுசாரி தமிழ் பத்திரிகையான தினமலருக்கு WSWS குழுவினரின் விபரங்களை போலீஸ் வழங்கினர். அந்த பத்திரிகை, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேல் “மர்ம நபர்களிடம்” இருந்து திடுக்கிடும் தகவல்களை பெற்றுள்ளதாக கூறி சேறடிக்கும் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. “வெளிநாட்டு நாணயங்களும் பாஸ்போட்டும் பறிமுதல் செய்யப்பட்டன" என பொய் கூறிய அந்த கட்டுரை, இலங்கை மற்றும் பிரிட்டனுக்கான பயணங்களும் மற்றும் பண பரிமாற்ற ரசீதும் வெளிநாட்டு சதிக்கான சான்றுகள் என்றவாறாக அர்த்தப்படுத்தியது.
நான்கு WSWS ஆதரவாளர்களும் மேலும் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய வகையில், அவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளை பகிரங்கப்படுத்தியமை தினமலர் கட்டுரையின் மிகவும் வஞ்சத்தனமான அம்சமாகும். குற்றச்சாட்டுக்கள் இன்றி விடுதலை செய்ய போலீஸ் தள்ளப்பட்ட போதிலும், "போலீசார் WSWS ஐச் சேர்ந்த நான்கு பேரின் நோக்கங்கள் பற்றி குழம்பிப் போயுள்ளனர். அவர்களின் நோக்கம் என்ன? மற்றும் அவர்கள் யாரின் ஆதரவாளர்கள்?" என்று அந்தக் கட்டுரையில் மேலும் எழுதப்பட்டுள்ளது.
எனினும், WSWS மற்றும் அதன் ஆதரவாளர்களின் "நோக்கம்", என்.எல்.சி. தொழிலாளர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட கட்டுரையில் இருந்து தெளிவாகிறது. நிர்வாகம், போலீஸ், நீதிமன்றங்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க. மாநில அரசின் கூட்டுத் தாக்குதலுக்கு எதிராக, நிரந்தர ஊழியர்களுக்கு சமமான சம்பளம் வேண்டும் மற்றும் அவர்களின் வேலையை “நிரந்தரப்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கைகளுக்காக கடினமான போராட்டத்தில் வேலைநிறுத்தம் செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களை WSWS ஆதரிக்கிறது.
அ.இ.அ.தி.மு.க. தனது முதலாளித்துவ போட்டியாளர்களுக்கு எதிராகவும் அதேபோல் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பேர் போன ஒரு தமிழ் முதலாளித்துவக் கட்சி ஆகும். 2003 ல் அதிகாரத்தில் இருந்த அ.இ.அ.தி.மு.க. தலைவர் ஜெயராம் ஜெயலலிதா, வேலைநிறுத்தம் செய்த கிட்டத்தட்ட 200,000 அரசாங்க தொழிலாளர்களை ஒட்டுமொத்தமாக வேலை நீக்கம் செய்து, ஆயிரக்கணக்கானவர்களை கைது செய்ததோடு, அவர்களை பதிலீடு செய்வதற்காக கருங்காலிகளை கூலிக்கு அமர்த்தினார். அ.இ.அ.தி.மு.க.வின் நடவடிக்கை பொதுத்துறை தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு ஆழமான தாக்குதலுக்கு களம் அமைத்தது. பின்னர், 2003ல் அவர்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய அரசியலமைப்பு உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூட தீர்ப்பளித்தது.
WSWS கட்டுரை குறிப்பாக இரண்டு பிரதான ஸ்ராலினிச கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) கட்சியின் துரோகப் பாத்திரத்தின் மீது குவிமையப்படுத்தி அம்பலப்படுத்தியது. அவர்களின் தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தம் செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்குமாறு நிரந்தர என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்க மறுத்ததோடு, இந்தப் பிரச்சினையில் தலையீடு செய்யுமாறு தேசிய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு வேண்டுகோள் விடுக்குமாறும் வேலைநிறுத்தக்காரர்களுக்கு கூறினர். இது, இந்த அரசாங்கங்கள் ஏற்கனவே என்.எல்.சி. நிர்வாகத்துக்கு ஆதரவளிப்பதை மூடி மறைப்பதாகும்.
என்.எல்.சி. தொழிலாளர்கள், "தொழிற்சங்கங்கள் மற்றும் இடது கட்சிகளில் இருந்து அரசியல் ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் பிரிந்து, ஒப்பந்த உழைப்பு மற்றும் வறிய ஊதியங்களுக்கு எதிரான, முழு தொழிலாள வர்க்கத்தின் எதிர்த் தாக்குதலுக்கு ஒரு ஈட்டிமுனையாக தமது போராட்டத்தை மேம்படுத்த வேண்டும்" என WSWS கட்டுரை முடிவில் அழைப்பு விடுத்திருந்தது. ஒரு சோசலிச மற்றும் அனைத்துலக வேலை திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான ஒரு அரசியல் போராட்டம் அவசியம் என அது விளக்கி இருந்தது.
WSWS நிருபர்கள் குழு சம்பந்தமான அ.இ.அ.தி.மு.க. அலுவலர்கள், போலீஸ் மற்றும் தினமலர் பத்திரிகையின் எதிர்வினையானது, எழுச்சி பெறும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் சம்பந்தமாக, குறிப்பாக WSWS பரிந்துரைக்கின்ற புரட்சிகர முன்னோக்கை தொழிலாளர்கள் கிரகிக்கத் தொடங்குவது சம்பந்தமாக இந்திய ஆளும் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ள தீவிர அச்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், இந்திய பொருளாதாரம் மந்த நிலையடைந்து வருகிறது. தேசிய அரசாங்கமும் மாநில அரசாங்கங்களும் மற்றும் தொழில் நிறுவனங்களும், மறுசீரமைப்பு மற்றும் சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதற்கு எதிராக பெருகி வரும் எதிர்ப்பை எதிர்கொள்கின்றன.
WSWS குழுவினர் மீதான கடந்த வார தாக்குதலில் இருந்து தேவையான அரசியல் படிப்பினையை தொழிலாளர்கள் பெறவேண்டும்: எதிர்வரும் காலத்தில் அரசாங்கங்கள், முதலாளிகள், ஊடகங்கள் மற்றும் போலீசாரும், கூட்டாக கைகோர்க்கவும் இதே போன்ற விசமத்தனமான முறைகளை தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக பயன்படுத்துவதற்கும் தயங்கப் போவதில்லை.
நெய்வேலி போலீஸ் WSWS குழுவினரிடம் இருந்து பறிமுதல் செய்த பொருட்களை திரும்பக் கொடுக்க வேண்டும், மற்றும் தினமலர் பத்திரிகை சுமத்திய அவதூறுகளை அது பகிரங்கமாக திருத்த வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி கோருகின்றது. வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான மோசமான தாக்குதல்களுக்கு எதிரான அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்க, உலக சோசலிச வலைத் தளத்துக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் உள்ள ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும்படி தொழிலாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
No comments:
Post a Comment