'உள்ளாடை வெடிகுண்டுதாரி அமெரிக்காவின் ஆள்தான்'
உன்னிப்பான சோதனைகளின் போதும் கண்டுபிடிக்க முடியாதபடி உள்ளாடை வெடிபொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது
உள்ளாடைக்குள் வெடிகுண்டை மறைத்துவைத்திருந்த போது பிடிபட்டதாக அறிவிக்கப்பட்ட குண்டுதாரி உண்மையில் அமெரிக்க உளவுபிரிவினரின் ஆள்தான் என்று என்று அமெரிக்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா நோக்கிச் செல்லும் விமானமொன்றை வெடிக்க வைப்பதற்காக யேமனைத் தளமாகக் கொண்டு இயங்கும் அல்-கய்தா இயக்கத்தினரால் அனுப்பப்பட்ட குண்டுதாரி, அந்த இயக்கத்தக்குள் ஏற்கனவே ஊடுருவச் செய்யப்பட்டவர் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டபடி, இவர் யேமனிலிருந்து வெளியேறி வெடிபொருளை சிஐஏ- உளவுப் பிரிவினரிடம் கையளித்துள்ளார்.
இதேவேளை, யேமனில் அல்-கைதாவினருக்கு எதிரான நடவடிக்கைளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இராணுவ பயிற்சியாளர்களை அங்கு அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.
நவீன முறையில் வடிவமைக்கப்பட்டது
2009ம் ஆண்டு நத்தார் தினத்தன்றும் விமானத்தை வெடிக்க வைப்பதற்காக உள்ளாடைக்குள் வெடிபொருளை மறைத்துவைத்திருந்த குற்றச்சாட்டில் தற்கொலை குண்டுதாரி ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர்.
அதனை ஒத்த விதத்தில், ஆனால் அந்த வெடிகுண்டை விட இன்னும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட உள்ளாடை வெடிபொருளைக் கொண்டு விமானத் தாக்குதலை நடத்த அரேபிய தீபகற்பத்தைச் சேர்ந்த அல்-கைதா இயக்கத்தினர் திட்டமிட்டிருப்பதாக கடந்த மாதம் அமெரிக்க உளவுத்துறைக்குத் தெரியவந்தததாக கூறப்படுகிறது.
இப்போது புதிதாக பிடிபட்டிருக்கின்ற குண்டுதாரி, சவூதி அரேபியாவில் இயங்கும் உளவுப்பிரிவினரால் யேமனில் உள்ள அல்-கைதா இயக்கத்தினருடன் ஊடுருவுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா செல்லும் விமானமொன்றை தற்கொலைக் குண்டுதாக்குதல் மூலம் வெடிக்க வைப்பதற்கு தான் தயாராகவுள்ளதாக அரேபிய தீபகற்ப பிராந்தியத்தில் இயங்கும் அல்-கைதா இயக்கத்தினரை நம்பவைக்கும் வேலை இவருக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தாக வாஷிங்டனிலுள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பின்னர், அல்-கைதாவினரால் கொடுக்கப்பட்ட வெடிபொருளை ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டபடி அவர் சிஐஏ மற்றும் சவூதி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
இப்போது, அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினர் (எஃப் பி ஐ) குறித்த வெடிபொருளை ஆராய்ந்துவருகின்றனர்.
குறித்த வெடிபொருள், கடுமையான சோதனைகளின்போதும் இலகுவில் கண்டுபிடிக்க முடியாதபடி உள்ளடைக்குள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உளவுப்பிரிவுக்காக வேலை செய்தவர் ஏற்கனவே வழங்கியிருந்த தகவல்களின்படியே, கடந்த ஞாயிறன்று ட்ரோன் தாக்குதலை நடத்தி அல்-கைதா தலைவர் ஒருவரை சிஐஏ கொன்றதாகவும் அமெரிக்கச் செய்திகள் தெரிவித்துள்ளன.
Thanks BBC
0 comments :
Post a Comment