Thursday, May 31, 2012

களுதாவளை மண்ணில் காலை வையாதீர்! செல்வராசாவை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்

இன்று களுதாவளையில் தனியார் அமைப்பொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜாவிற்கு பிரதேச மக்கள் பெரும் எதிர்ப்பைகாட்டு முகமாக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினரின் சித்துவிளையாட்டுக்களை கண்டித்து துண்டு பிரசுரம் ஒன்றையும் விநியோகித்துள்ளனர்.

களுதாவளை மக்களே சிந்தியுங்கள் எனத்தலைப்பிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில்

1000 பாடசாலை திட்டத்தை இல்லாமல் செய்த துரோகியை துரத்துங்கள்

எமது மட்ஃகளுதாவளை மகா வித்தியாலயம் 1000 பாடசாலைகள் திட்டத்தின் மூலம் 70 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய தெரிவு செய்யப்பட்டபோது அதை தடுத்து கல்லாறு பாடசாலைக்கு மாற்றியதோடு மட்ஃகளுதாவளை மகா வித்தியாலய அதிபரை நியமிக்க விடாது தடுத்த பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராஜா அவர்களை ஒரு சிலரின் தனிப்பட்ட இலாப நோக்கத்திற்காக களுதாவளை இலங்கேசன் மன்றத்தினர் கண்ணகி சபதம் சதங்கை அணி விழாவிற்கு அழைக்கின்றனர். இவர்களின் தனிப்பட்ட நலனுக்காக எமது கிராமத்தை தாரை வார்ப்பதா? 1000 பாடசாலைகள் திட்டத்தில் இருந்து எமது பாடசாலையை நீக்கியதைத் தவிர பொன் செல்வராஜா அவர்கள் எமது கிராமத்திற்கு என்ன செய்திருக்கின்றார்.

கல்விச் சமூகம்
களுதாவளை

என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இவ்விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது...

பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் பல வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் இதுவரை களுதாவளைக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை. ஆனாலும் பல விடயங்களில் களுதாவளைக்கிராமத்திற்கு எதிரான விடயங்களில் ஈடுபட்டதாகவும் அறிய முடிகின்றது.

1997 ஆம் ஆண்டு களுதாவளை மகா வித்தியாலயத்திற்கு உயர்தர விஞ்ஞான, கணிதப் பிரிவுகளை கொண்டு வருவதற்கு முயற்சி எடுக்கப்பட்டபோது அதற்கு தடையாக இருந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா அவர்கள்.

அத்துடன் மடகளுதாவளை மகா வித்தியாலயம் 1000 பாடசாலைகள் திட்டத்தில் உள்வாங்கப்பட்டபோது. அவற்றைத் தடுத்து நிறுத்தி இல்லாமல் செய்தவர் பொன் செல்வராஜா அவர்கள் ( ஆனாலும் முதலமைச்சர் அவர்கள் இவ்விடயத்தில் தலையிட்டு மீண்டும் 1000 பாடசாலைகள் திட்டத்தில் இப்பாடசாலையை இணைத்துள்ளார்)

இது இவ்வாறிருக்க சிலர் தமது அரசியல் எதிர்கால நோக்கம் கருதி குறித்த நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினரை பிரதம அதிதியாக அழைத்திருக்கின்றனர். இதற்கு மக்கள் எதிர்ப்பினை தெரிவித்திருக்கின்றனர்.


No comments:

Post a Comment