Saturday, May 26, 2012

தெஹிவளை பள்ளிவாசலுக்கு எதிராக பிக்குகள் ஆர்ப்பாட்டம்: நாளை விஷேட கூட்டம்(படங்கள்)

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வலப்புறமாக செல்லும் கல்விஹார பிளேஸில் அமைந்திருக்கும் தாருர் ரஹ்மான் பள்ளிவாயசலில் மாடுகள் அறுக்கப்படுவதுடன் மாடறுக்கும் மடுவமாக இப்பள்ளிவாசல் செயற்படுவதாக தெரிவித்து பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினாரால் பள்ளிவாசலிற்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதே பிரதேசத்தில் அமைந்திருக்கும் கல்விஹாரவில் இருந்து புறப்பட்ட ஆர்ர்ப்பாட்டம் நேற்று பிற்பகல். 5:30 மணியளவில் கல்விஹார பிளேஸ் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

ஜாமியுஸ் ஷபாப் நிறுவனத்தின் காணியில் அமைந்திருக்கும் மேற்படி பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மதரசா, முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், பதினைந்து வருடங்களாக இவ்விடத்தில் இயங்கி வருகின்றன.

கடந்த சில வாரங்களாக குறித்த கட்டடம் புனரமைப்பு வேலைகளுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, இந்த பள்ளிவாயலின் இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறைப்பாடு ஒன்று கல்விஹார பிக்குகளால் தெஹிவளை – கல்கிசை மேயரிடம் முன்வைக்கப்பட்டிருந்தது. நேற்று பி.ப. 2:30 மணியளவில் முச்சக்கர வண்டிகளில் வந்த இனந்தெரியாத கோஷ்டி ஒன்று மதரசா மீது கற்களை வீசிவிட்டுச் சென்றிருள்ளது.

பின்னர் பிற்பகல் 4:00 மணியளவில் கல்விஹாரவில் இருந்து பிக்குமார் மற்றும் பொதுமக்களைக் கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று புறப்பட்டு மத்ரசாவைத் தாண்டி மிருகக்காட்சி வீதி சந்திக்கு வந்து சேர்ந்தது.

அதில் கலந்து கொண்டோர் மதரசாவை அங்கிருந்து அகற்றுமாறு கோசமிட்டதுடன் சுலோகங்களையும் தாங்கியிருந்தனர். அவ்விடத்தில் பொலீஸார் அதிகளவில் வருகை தந்திருந்ததுடன், மதரசா பகுதியில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் ஐம்பது தொடக்கம் நூறு பேர் வரை கலந்துகொண்டனர். மேலும் இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் இந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இடம் மாடுகளை அறுக்கும் மடுவமாக பாவிக்கப்படுவதாகவும் அதை மூட வேண்டும் என்பதும் முக்கியமான கோசமாக ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது.

பிரச்சினை தீவிரமடைந்ததை அடுத்து பள்ளிவாயளுக்கு மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபையின் ஐ. தே. க. உறுப்பினர் ஜனாபா மரீனா ஆப்தீன் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பான கூட்டம் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபையில் இடம்பெறும் என அறிய முடிகிறது.

இப்பள்ளிவாசலினுள் ஐவேளை தொழுகை மாத்திரமே நடைபெற்று வருகின்றதே தவிர உயிரினங்கள் எதுவும் அறுக்கப்படவில்லை என குறித்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதேவேளை, தெஹிவளை, கல் விகாரை வீதியிலுள்ள பள்ளிவாசல் தொடர்பிலான விசேட கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை தெஹிவளை – கல்கிஸ்சை மேயர் தனசிறி அமரதுங்க தலைமையில் மாநகர சபையில் இடம்பெறவுள்ளது.

தெஹிவளை – கல்கிஸ்சை மேயர் தலைமையில் விசேட கூட்டமொன்று நாளை இடம்பெறும் என தெஹிவளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com