Sunday, May 27, 2012

சிறுவன் தடவிப் பார்ப்பதற்காக குணிந்து தனது தலையைக் காட்டிய ஒபாமா!

வெள்ளை மாளிகையில் தன்னைப் பார்க்க வந்த கருப்பர் இனத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் தனது தலை எப்படி இருக்கிறது என்று கேட்டபோது, அவனுக்காக குணிந்து தனது தலையைத் தொட்டுப் பார் என்று கூறினார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. 3 வருடத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒபாமாவின் அலுவலக சுவரை அலங்கரித்தபடி, அனைவரையும் வியக்க வைத்தபடி உள்ளது.

வெள்ளை மாளிகையில் வெஸ்ட் விங் பகுதியில் உள்ள அறையில் அதிபர் தொடர்பான படங்களை மாட்டி வைத்திருப்பார்கள். பழைய படங்களை அவ்வப்போது அகற்றி விட்டு புதிய படங்களை மாற்றுவார்கள். ஆனால் ஒபாமா குணிந்தபடி இருக்கும் இந்தப் படம் மட்டும் கடந்த 3 வருடங்களாக அகற்றப்படாமல் அப்படியே இருக்கிறது.

இந்தப் படத்தின் பின்னணி படு சுவாரஸ்யமானது. அமெரிக்க கடற்படைப் பிரிவில் பணியாற்றி வந்தவர் கருப்பர் இனத்தைச் சேர்ந்த கார்ல்டன். இவர் கடந்த ஜார்ஜ் புஷ் ஆட்சியின் கடைசி நாட்களின்போது வெள்ளை மாளிகையில், தேசிய பாதுகாப்பு கவுன்சிலல் 2 ஆண்டு பணியாக நியமிக்கப்பட்டார். ஜார்ஜ் புஷ் வெளியேறி ஒபாமா ஆட்சிக்கு வந்த பி்ன்னரும் பணியில் நீடித்த அவர், 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

அப்போது தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் ஒபாமாவை சந்தித்து குடும்பத்தோடு போட்டோ எடுத்துக் கொள்ள வந்திருந்தார். அவர்களை வரவேற்ற ஒபாமா அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். பின்னர் ஒபாமாவிடம் கார்ல்டனின் மனைவி, எனது இரு மகன்களும் உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகின்றனர் என்று கூறினார்.

இதையடுத்து முதலில் 5 வயது ஜேக்கப் பிலடெல்பியா ஒபாமாவிடம் பேசினான். அவன் ஒபாமாவிடம், எனது தலைமுடியைப் போலவே உங்களது தலைமுடியும் இருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன் என்று கேட்டான். இதைக் கேட்டதும் அங்கிருந்தவர்களுக்கு வியப்பாகி விட்டது.

ஆனால் சற்றும் சலனப்படாத ஒபாமா, இதற்கு நான் பதில் சொல்வதற்குப் பதில் நீயே ஏன் அதைத் தொட்டுப் பார்க்கக் கூடாது என்று கேட்டார். அத்தோடு நில்லாமல், சிறுவனின் முன்பு தலை குணிந்து தலையைத் தொட்டுப் பார்க்குமாறு கூறினார். ஆனால் கேள்வியை வேகமாக கேட்டு விட்ட ஜேக்கப்பால், ஒபாமா தலையைத் தொட்டுப் பார்க்க தயக்கம் ஏற்பட்டது.

இதைப் பார்த்த ஒபாமா, சும்மா தொட்டுப் பார் என்று தைரியமூட்டினார். இதையடுத்து சிறுவன் ஜேக்கப், ஒபாமா தலைமுடியைத் தடவிப் பார்த்தான். பிறகு அவனிடம் ஒபாமா கேட்டார், எப்படி இருக்கிறது என்று. அதற்கு அவன், ஆமாம், எனது தலைமுடியைப் போலத்தான் உள்ளது என்றான்.

இதையடுத்து ஜேக்கப்பின் அண்ணன் ஐசக் ஒபாமாவிடம், ஏன் எப் 22 போர் விமானங்களை விமானப்படையிலிருந்து நிறுத்தி விட்டீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர், அது செலவு பிடித்த வேலை. அதனால்தான் நிறுத்தி விட்டோம் என்றார்.

ஒபாமா தலையைக் குணிந்தபடி ஒரு சிறுவன் முன்பு நிற்கும் இந்த அரிய புகைப்படத்தை எடுத்தவர் பீட் செளசா. அவர் கூறுகையில், ஒரு புகைப்படக்காரர் எப்போதும் அலர்ட் ஆக இருக்க வேண்டும். அதிபர் ஒபாமா சட்டென தலையைக் குணிவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நான் சுதாரித்து டக்கென அந்தக் காட்சியை எடுத்தேன். ஆனால் இந்தப் போட்டோ எனது வாழ்க்கையில் மறக்க முடியாததாக மாறும் என்று அப்போது நான் நினைத்துப் பார்க்கவில்லை என்றார்.

இந்தப் போட்டோவின் ஒரு காப்பி இப்போது ஜேக்கப் பிலடெல்பியாவின் வீட்டிலும் தொங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது ஜேக்கப்பின் தந்தை ஆப்கானிஸ்தானில், அமெரிக்க வெளியுறவு அமைச்சக ஊழியராக பணியாற்றி வருகிறாராம்.

தற்போது 8 வயதாகும் ஜேக்கப்பின் கனவு என்ன தெரியுமா, அமெரிக்க அதிபராகவோ அல்லது ஒரு பைலட்டாகவோ வர வேண்டும் என்பதாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com