தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண ஐ.தே.க உதவுமாம்
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. நாட்டின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையிலான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைபாடாகும். ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுடன் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது இது பற்றி கலந்துரையாடியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
நாட்டின் பிரதான இரண்டு கட்சிகளும் இது பற்றி பொது இணக்கப்பாட்டை எட்டுவது அவசியமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் ,மக்கள் விடுதலை முன்னணியையும் பாராளுமன்ற குழுவில் பங்கேற்கச் செய்வதன் அவசியத்தை ஐக்கிய தேசியக் கட்சி குழுவினர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்கள் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்
பாராளுமன்றக் குழுவில் ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொள்வதற்கான சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். இதற்காக ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பை வழங்க தயார் என அவர் மேலும் தெரிவித்தர்.
ஜனாதிபதியுடனான சந்திப்பை தொடர்ந்து எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசியக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனை சந்தித்துப் பேசியுள்ளார். ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்புப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் அவருடன் கலந்துரையாடினார்.
பாராளுமன்றத்தெரிவுக் குழுவுக்கான பேச்சுவார்த்தையின் போது பொதுவான கொள்கையொன்றை தயாரிக்க வேண்டும் என்பது பற்றி ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கான காலக்கெடுவை அறிவிப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment