Saturday, May 12, 2012

சம்பந்தன் கேட்காத தமிழீழத்தை கேட்கின்றனர் இந்திய அரசியல் தலவைர்கள். சுஷ்மா சீற்றம்

'இலங்கையின் 'அதி மரியாதைக்குரிய' அரசியல் தலைவர் இரா. சம்பந்தன் தனி ஈழம் வேண்டாம். ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளேயே நாம் வாழ விரும்புகிறோம் என்று கூறிவிட்ட பின்னரும், இங்கு (தமிழகத்தில்) நீங்கள் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? அதுதான் புரியவில்லை. தனி ஈழ கோரிக்கையை பா.ஜ.க.-வும் ஆதரிக்கவில்லை என்று கூறிக்கொள்கிறேன்' இவ்வாறு கூறியிருக்கிறார் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ்.

மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க.-வின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்தில் இங்கு வந்து சென்ற இந்திய எம்.பி.க்களின் குழுவின் தலைவி சுஷ்மா சுவராஜ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தாம் சந்தித்தது பற்றியும் மேடையில் பேசினார்.

'தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நான் சந்தித்தபோது, ஐக்கிய இலங்கையில் இருக்கத்தான் அங்குள்ள தமிழர்கள் விரும்புகிறார்கள் என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், நேர்மையான அரசியல் தீர்வுதான் எங்களுக்குத் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

அனைத்துத் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கு இணையான சம உரிமைகள், கௌரவமான வாழ்க்கை வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும். அதிகாரப் பகிர்வு அமலாக்கப்பட வேண்டும் என்பதே அவரது கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக இருந்தது' என்றார் சுஷ்மா சுவராஜ்.

இவர் குறிப்பிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்புதான், அதிக எம்.பி.க்களை வைத்திருக்கும் அரசியல் கட்சி. இவர்களுக்கு அடுத்தபடியாக அதிக எம்.பி.க்களை வைத்திருப்பது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. கட்சி. இந்த இரு கட்சிகளையும்விட சொற்ப எண்ணிக்கையில் தேசியக் கட்சிகளின் ஆதரவில் ஜெயித்த தமிழ் எம்.பி.க்கள் உள்ளார்கள்.

டக்ளஸ் தேவானந்தா, இரா.சம்பந்தன் ஆகிய இருவரது கட்சிகளுமே, தனி ஈழம் கோரவில்லை. தேசியக் கட்சிகளில் ஜெயித்த யாரும், தனி ஈழம் பக்கம் திரும்பியும் பார்ப்பதில்லை.

அப்படியானால், இலங்கையில் தனி ஈழம் கோரும் அரசியல் கட்சிகள் இல்லையா? இருக்கிறார்கள். ஆனால் செல்வாக்கு டி.ராஜேந்தரின் ல.தி.மு.க. ரேஞ்சில் உள்ளது.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 'தனி ஈழம் தேவை' என்ற கோஷத்துடன் போட்டியிட்ட, 'தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி' என்ற கட்சி, தேர்தலில் டிப்பாசிட் கூட வாங்க முடியாமல் படுதோல்வியடைந்தது.

இதை வைத்துதான் சுஷ்மா சுவராஜ் கணித்திருக்கிறார் போலிருக்கிறது. 'தமிழக அரசியலில் இருந்துகொண்டு ஏன் தனி ஈழம் கேட்கிறீர்கள்?' என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார்.

தமிழக அரசியலில் இருந்துகொண்டு, தனி ஈழம் கேட்பவர்களுக்கு இப்போதுள்ள சிக்கல் என்ன?

அது மிகவும் சிம்பிள். இரண்டே இரண்டு தெரிவுகள் தான் உள்ளன.

முதலாவது, இலங்கை தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக் கொண்டால், தனி ஈழம் பற்றி பேச முடியாது. காரணம், தனி ஈழம் தேவையில்லை என்று அந்தக் கட்சி அறிவித்து, சிங்க கொடியையும் தூக்கிவிட்டது.

இரண்டாவது, தனி ஈழம் தேவை என்று போராட விரும்பினால், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டியிருக்கும். முன்பு தனி ஈழத்துக்கு எதிரான மற்றையவர்களுக்கு செய்ததுபோல, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை 'துரோகிகள்' என அறிவிக்க வேண்டியிருக்கும்.

லாஜிக் சரியாக இருக்கிறதல்லவா? ஆனால், இருந்து பாருங்கள், தனி ஈழத்தை வைத்து அரசியல் செய்யும் யாருமே, தமிழ் தேசியக் கூட்டமைப்பை துரோகிகள் என்று சொல்ல மாட்டார்கள். காரணம், இவர்களுக்கும், அவர்களுக்கும் இடையிலான மாயச் சங்கிலி!

யாராவது ஒரு கட்சித் தலைவர் 'தில்'லாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பை 'துரோகிகள்' என்று கூறினால், அந்த தலைவர் நிஜமாகவே தனி ஈழத்துக்காக போராடுகிறார் என்று எடுத்துக் கொள்ளுங்கள்! எமது கணிப்பில், ஒருவேளை வைகோவுக்கு இருந்தாலும் இருக்கலாம், ஆனால் வேறு யாருக்கும் அந்த 'தில்' கிடையாது!

2 comments :

Anonymous ,  May 12, 2012 at 6:36 PM  

It's absolutely clear,that some Tamil Nadu politicians are doing not the real, but a commercial politics.

Anonymous ,  May 13, 2012 at 8:09 AM  

"Tamil Nadu politicians are the real jokers".
We should remind this word always.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com