இலங்கை சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை- அமைச்சர் சிறிபால
இலங்கை சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று பாராளமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிறைகைதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தொன்றுக்கு பதிலளிக்கையிலே நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், "சம்பந்தன் சொல்வது போல் அரசாங்கத்தால் எந்தவொரு அரசியல் கைதிகளும் தடுத்து வைக்கப்படவில்லை என்பதை நான் கூறிக்கொள்கின்றேன் தற்போது சிறை மற்றும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள்"
"அவர்களுக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைக்கு முகங்கொடுத்து வரும் சந்தேகநபர்களாவர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள 359 கைதிகளும் வழக்குத் தாக்கல் செய்யும் எதிர்பார்ப்புடன் 309 சந்தேகநபர்களும் தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசியல் சிறை கைதிகள் அல்ல. இவர்களை அரசியல் கைதிகள் என தெரிவித்து சம்பந்தன் பாராளுமன்றையும் சர்வதேசத்தையும் திசைதிருப்பியுள்ளமை கவலைக்குரியது" என தெரிவித்தார்
ஊனமுற்ற கைதிகள் தொடர்பாக சம்பந்தன் கருத்து தெரிவித்தார். அதற்கு கருத்து தெரிவித்த நிமல் சிறிபால டி சில்வா "தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதனாலேயே அவர்கள் ஊனமுற்றிருக்கின்றார்கள் அவ்வாறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்களை உடனடியான விடுதலை செய்ய முடியாது. இவர்கள் நீதிமன்றின் ஊடாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சட்ட விதிமுறை ஊடாகவே விடுதலை செய்யப்படுவர்" என தெரிவித்தார்
"புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக வாக்குமூலம் கிடைத்துள்ளதால் சிலர் மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 350 பேர் இவ்வாறு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்".
"நீதிமன்ற உத்தரவின்படி 668 கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். சுய விருப்பத்தின் பேரில் நீதிமன்ற நடவடிக்கை மூலம் 672 கைதிகள் புனர்வாழ்வு பெறுகிறன்றனர். 241 பேர் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நீண்ட விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதால் விரைவில் விடுதலை செய்ய முடியாது. வழக்கு தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ள கைதிகள் குறித்து அரசு உடன் நடவடிக்கை எடுக்கும். இது குறித்து சிறைசாலை அமைச்சரும் அவரது குழுவும் விரைந்து செயற்படுகின்றனர்".
"சிறையில் 229 கைதிகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். சிறையில் வழங்கும் உணவுகளை மாத்திரம் இவர்கள் உண்பதில்லை. வெளியில் இருந்து வரும் உணவுகளை உண்பதாக தகவல் கிடைத்துள்ளது". என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment