பொலிஸார் போன்று நடித்து கொள்ளையிட முயன்ற நால்வர் ஹெம்மாதகமவில் கைது
பொலிஸாரின் போர்வையில் சிற்றுண்டிச்சாலையொன்றை கொள்ளையிட முயற்சித்த நால்வர், ஹெம்மாதகம பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பொன்றினை அடுத்து இந்த சுற்றிவளைப்பு மெற்கொள்ளப்பட்டதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
ஹெம்மாதகம பகுதியில் வேன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வேனில் 4 பேர் பயணம் செய்தனர். அவர்களிடமிருந்த 10 கைத்தொலைபேசிகள், வெவ்வேறு சிம் அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.
இவர்கள் பொலிஸ் சீருடையை அணிந்து கொண்டு பொலிஸ் திணைக்களத்தின் விசேட காரியாலய உத்தியோகத்தர்கள் என்ற போர்வையில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, மக்களை ஏமாற்றி, கொள்ளையிடுதல், பலவந்தமாக சொத்துகளை சூறையாடுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக, விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த பிரதேசத்திற்குட்பட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகளின்றி, வேறு பிரதேசத்திலிருந்து பொலிஸார் வருவார்களாயின், அவர்கள் சீருடையிலோ அல்லது சிவில் உடையிலோ வந்தாலும், அது தொடர்பாக சந்தேகம் ஏற்படின், உடனடியாக 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு, தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 comments :
Post a Comment