அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட தமிழர்கள் மேடானில் ஆர்ப்பாட்டம்.
வடக்கு சுமத்ராவில் உள்ள மேடான் நகரில் அமைந்துள்ள பன்னாட்டு குடிபெயர்வோர் அமைப்பின் அலுவலகத்துக்கு வெளியே இலங்கையிலிருந்து வெளியேறிய டசின் கணக்கான புகலிடம் கோருவோர் தம்மை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கும்படி ஆர்ப்பாட்டம் நடாத்தினார்கள்.
பன்னாட்டு குடிபெயர்வோர் அமைப்பு, அகதிகளுக்கான ஐ.நா. ஆணையாளர் மற்றும் இந்தோனேசிய அரசு ஆகியவை தங்களுக்கு அவுஸ்திரேலியாவில் புகலிட அந்தஸ்து பெற்றுக் கொடுக்க ஆவன செய்ய வேண்டுமென்று பேணர்கள், சுலோகங்களை ஏந்தி அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.
2009 அக்டோபரில் தாங்கள் 250 பேர் மலேசியாலிருந்து அவுஸ்திரேலியா நோக்கிப் பயணமாகிக் கொண்டிருக்கும் போது, ஜாவாவுக்கு மேற்கே இந்தோனேசிய கடற்படையால் தமது கப்பல் வழிமறிக்கப்பட்டு, தம்மை பல இடங்களில் அலைக்கழித்து கடந்தாண்டு மத்தியில் மேடானில் கொண்டு வந்து சேர்த்திருந்ததாகவும், தமது நோக்கம் அவுஸ்திரேலியா போவதே தவிர இங்கிருப்பதல்ல என்று இந்த குழுவின் ஒரு இணைப்பாளரான சவிந்தர் கூறினார். ஆரம்பத்திலிருந்தே எங்களுக்குத் தெரியும் அவுஸ்திரேலியா எங்களை ஏற்றுக் கொள்ளும், தொழில் மற்றும் பாதுகாப்பு வழங்கும் என்று அலெக்சின் என்பவர் குறிப்பிட்டார்.
இதன் போது அவர்களைச் சந்தித்த பன்னாட்டு குடிபெயர்வோர் அமைப்பின் பிரதிநிதி யொங் லாய் கொங் இதற்கான சட்ட அதிகாரம் தமக்கு இல்லையென்றும், அவர்கள் UNHCR இடம் போகவேண்டுமென்றும் கூறியுள்ளார். திருப்தியடையாத ஆர்பாட்டக்காரர்கள் தமக்குச் சாதகமானது எதுவும் விரைவில் நடைபெறாவிட்டால் தாம் தொடர்ந்தும் போராடப் போவதாகக் கூறினர்.
0 comments :
Post a Comment