Friday, May 25, 2012

மாணவர்களை சேர்த்துக் கொள்ளும்போது பணம் பெற்றுக்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு

அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் போது அன்பளிப்பு என்ற ரீதியில் பணம் பெற்றுக்கொள்வது போன்று, கல்விப் பொதுத்தராதர உயர்தர தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும்போது பணம் பெற்றுக்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும்போது , சேவை கட்டணம் மற்றும் வசதி கட்டணம் ஆகியவற்றுக்கு மேலதிகமாக, உதவி என்ற ரீதியில் பணமாகவோ, பொருளாகவோ சேவை என்ற வகையிலோ அல்லது வேறு விதங்களாகவோ பணம் பெற்றுக் கொள்ள முடியாது. இது எந்த வகுப்பில் மாணவர்களை பாடசாலைகளுக்குச் சேர்க்கும் போதும் பொருந்தும்.

ஆனால், அநேக பாடசாலைகள் அன்பளிப்பு என்ற ரீதியில் பெருந்தொகை பணத்தை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினூடாக பெற்றுக்கொள்கின்றன. ஆனாலும் பெரும்பாலான பாடசாலைகள் அதற்கான பற்றுச் சீட்டை வழங்குவதில்லை. சட்டச் சிக்கலிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக சில பாடசாலைகள் பிள்ளைகள் சேர்க்கப்பட்டு பின்னர் வரும் திகதியொன்றில் திகதி குறிப்பிட்டு அன்பளிப்பாக பணம்பெற்றுக் கொண்டதற்கான ரசீதை வழங்குகின்றன.

அன்பளிப்பு கோருவது எழுத்து மூலமாக அல்லாமல் வாய்மொழி மூலமாவே இடம்பெறுகின்றன. இதற்குக் காரணம் சட்ட ரீதியான முறையில் அன்பளிப்பாக பணம் மற்றும் பொருட்ளைக் கேட்க முடியாமையேயாகும்.

இதேவேளை, பிரபல பாடசாலைகள் உட்பட பாடசாலைகள் பல கல்விப்பொதுத்தராதர உயர்தர தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் போது, பிற பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவது போன்று , தமது பாடசாலை மாணவர்களிடமும் வசதிகள் சேவைகள் கட்டணங்களுக்கு மேலதிகமாக அன்பளிப்பு என்ற ரீதியில் பணத்தைப் பெற்றுக்கொள்கின்றன என்று பரவலாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.

அன்பளிப்பு கேட்பதற்கு முன்பாக அதற்காக விஷேடகூட்டம் ஒன்று பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினூடாக பெற்றோர்களுக்கு வைக்கப்படுகிறது.

பாடசாலைக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்தல். மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் , தண்ணீர் கட்டணம் போன்றவற்றுக்கும் தொண்டர் ஆசிரியர்களுக்கு கொடுப்பணவு வழங்கல்,காவலாளி மற்றும் சிற்றூழியர் வேதனம். வகுப்றைக் கட்டிட வர்ணப் பூச்சு செலவு,விஞ்ஞான ஆய்வு கூடசெலவு உட்பட பல்வேறு செலவினங்களை சுட்டிக் காட்டியே அன்பளிப்பு கேட்கப்படுகிறது.

இதுபோன்ற செலவினங்களில் பெரும்பாலானவற்றுக்கு அரசாங்கம் குறிப்பிட்ட ஒருதொகை நிதியை பாடசலைகளுக்கு வருடந்தோறும் வழங்குகின்றன. இதற்குமேலதிகமாக பாடசாலைகள் தமக்குத் தேவையான நிதியை பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் அதற்கான அனுமதியை, மேற்கொள்ளவுள்ள செயற்றிட்டத்தை எழுத்து மூலம் குறிப்பிட்டு உரிய அதிகாரிகளின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால், மாணவர்களை அனுமதிக்கும் போது அன்பளிப்பு என்ற வகையில் பணத்தை ஈட்டமுடியாது. எந்த ஒரு பெற்றோரும் விரும்பினால் பாடசாலைக்கு அன்பளிப்பு வழங்க முடியும். நிதி ஈட்டல்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் வங்கிக் கணக்கிற்கு கொண்டு செல்லப்படவேண்டும்.

பாடசாலைக்கு மாணவர்களை அனுமதிக்கும் போது அன்பளிப்பு என்ற ரீதியில் இது போன்ற செலவினங்களுக்காக என்றுகூறி பெருந்தொகை பணத்தை கேட்பது சட்ட விரோதமாகும். அத்தோடு இலவசக் கல்விக்கு மாற்றமான செயற்பாடாக இருப்பதுடன், இது மாணவர்களது உரிமையை மீறும் செயலாகும் என்று என்று கல்வியியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது 2014 ஆம் ஆண்டில் உயர்தர பரீட்சை எழுதுவதற்காக மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ( 2011 ஆம் ஆண்டில் கபொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதி சித்தி அடைந்த மாணவர்களுக்கு ) பாடசாலைகளில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment