நித்தியானந்தா அதிரடி: அனைவரது அறைகளிலும் இதோ ரகசிய கேமரா!
“என்மீது குற்றச்சாட்டு வைக்கும் அனைத்து ஆதீனங்களின் அறைகளிலும் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தினால் தெரியும் சேதி” என்று எரிகிற நெருப்பில் எண்ணை வார்த்திருக்கிறார் நித்தியானந்தா. “மற்றைய ஆதீனங்களின் அறைகளுக்குள்ளும் ரகசியமாக எட்டிப் பார்த்தால், எத்தனை பேர் என்னைப்போல பாலியல் புகார்களில் சிக்குகிறார்கள் என்று தெரிந்துவிடும்” என்றும் சவால் விட்டிருக்கிறார் இந்த லேட்டஸ்ட், மதுரை இளைய ஆதீனம்.
சுருக்கமாக அவர் கூற வருவது என்னவென்றால், “எனது அறையில் கேமரா வைத்ததில் நான் சிக்கிக் கொண்டேன். உங்கள் அறைகளில் கேமரா வைக்காத காரணத்தால் நீங்கள் தப்பித்துக் கொண்டீர்கள்… முடிந்தால் வாருங்கள், கேமராவை வைத்துக் கொண்டு மோதிப் பார்ப்போமா?”
எல்லாம், ‘யாம் பெற்ற இன்பம், பெறுக இவ் வையகம்’ பாலிஸிதான். இந்த ‘ரகசிய எட்டிப்பார்த்தல்’ வேலைகளுக்கு, தனியார் துப்பறியும் நிறுவனத்தை ஏற்பாடு செய்வோமா என்றும் கேட்டிருக்கிறார் அவர். நித்தியின் அறைக்குள் எடுக்கப்பட்ட வீடியோவுக்கு கேமரா ஃபிக்ஸ் பண்ணியது, அவரது சீடர்களில் ஒருவர் என்பதே பொதுவான ஊகம்.
“எமக்கு வாய்த்த சீடர்கள் மிகமிகத் திறமைசாலிகள். ஆனால் கைகள்தான் வீடியோ கேமராவரை நீண்டிருக்கின்றன” என்று அவர் சொல்லவில்லை. “உங்களுக்கு (மற்றைய ஆதீனங்களுக்கு) அப்படியான சீடர்கள் வாய்க்கவில்லை. எனவே, கேமரா பிக்ஸ் பண்ண தனியார் துப்பறியும் நிபுணர்களை அழைக்கலாம்” என்கிறார்.
நித்தியின் இந்தக் கூற்று (அல்லது கூத்து) அவர்மீது வழக்கு தொடர்கிறோம் என்று கூறிக்கொண்டிருக்கும் மற்றைய ஆதீனங்களை நிச்சயம் கொதிக்க வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தன்னை எதிர்ப்பவர்கள் பற்றி குறிப்பிட்ட நித்தியானந்தா, “இங்கே மொத்தம் 800 மடாதிபதிகள் உள்ளார்கள். அவர்களில் 13 பேர் மட்டுமே எனக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்து அமைப்புகள் என்ற பெயரில், சில கயவர்கள் என் மீது கல்வீசுகின்றனர். ஆனால், உண்மையான இந்துக்கள் என் பக்கம் உள்ளனர். 151 நாடுகளில் ஆன்மிகத்தை வளர்ப்பவன் நான். என்னை எதிர்ப்பவர்கள், சும்மா லோக்கலில் சுற்றிக் கொண்டிருப்பவர்கள்” என்று கூறியிருக்கிறார்.
151 நாடுகளில் நித்தியானந்தா ஆன்மீகத்தை வளர்க்கும் விஷயம், ஐ.நா.வுக்கே புதிய தகவலாக இருக்கும்.
ஐ.நா.வின் கணக்குப்படி, உலகில், 193 அங்கத்துவ நாடுகள் உள்ளன. அது அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட அதிகாரபூர்வ கணக்கு. ஆனால், நிஜ எண்ணிக்கை அதைவிட அதிகம். உதாரணமாக, கொசோவோ அந்தப் பட்டியலில் உள்ளது. ஆனால், தாய்வான் கிடையாது (தாய்வான் தமது நாட்டின் ஒரு மாகாணம் என்கிறது சீனா) பாலஸ்தீனம், கிரீன்லாந்து, வெஸ்டர்ன் சஹாரா, ஆகியவை பட்டியலில் இல்லை. கருணாநிதி லேட்டஸ்டாக கூறத் துவங்கியுள்ள ஈழமும் பட்டியலில் கிடையாது.
எப்படியோ அவரது கூற்றுப்படி, ஐ.நா.வின் அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கையில், மூன்றில் இரண்டு மெஜாரிடி நாடுகளில் நம்ம நித்தி ஆன்மீகத்தை வளர்த்து வருகிறார். மீதி நாடுகளிலும் எக்ஸ்பான்ட் பண்ணும் பொட்டடன்ஷியலும் உள்ளது. அப்படியிருக்கையில், ஆந்திரா பார்டரே தாண்டாத ஆதீனங்கள் என்னை எப்படி கேள்வி கேட்க முடியும்? என்பதே நித்தியின் கேள்வி.
அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை நம்ம இளைய சுவாமிகள். “எனது உருவபொம்மையை 10 பேர் எரித்துள்ளனர். நான் ‘உம்…’ என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் உருவபொம்மைகளை எனது சீடர்கள் எரித்து விடுவார்கள். சட்டம் ஒழுங்கு கெடக்கூடாது. சண்டையிட்டு, இந்து மதத்திற்கு அழிவை உண்டாக்கக்கூடாது என்பதற்காக பொறுமையாக இருக்கிறேன்” என்றும் கூறியிருக்கிறார்.
அவரின் சீடர்கள் எரிப்பதிலும் வல்லவர்கள் என்பது புதிய தகவல். அவர்கள் மதுரை மடத்தின் பெண் உதவியாளரை நையப்புடைப்பார்கள் என்பதுதான் இதுவரை வெளியாகிய தகவல்.
நித்திக்கு மதுரை மடத்தில் புதிய, இளைய ஆதீனமாக அப்பாயின்ட்மென்ட் கிடைந்து மதுரைக்கு வந்தபோது, அவருடன் வந்த சீடர்கள், மடத்தின் ஒரிஜினல் சீடர்களுடன் மோதிக் கொள்கிறார்கள் என்பது மதுரை முழுக்க தெரிந்திருக்கிறது. மடத்தில் உதவியாளராக உள்ள வைஷ்ணவி என்ற பெண்ணை, நித்தியின் சீடர்கள் தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அதற்கு மதுரை மூத்த ஆதீனம், “மடத்தில் பணிவிடை செய்யும் பெண் வைஷ்ணவி, நித்யானந்தா சீடர்களால் தாக்கப்படவில்லை. நித்யானந்தா சீடர்களுக்கும் வைஷ்ணவிக்கும் வாய்த்தகராறு மட்டுமே நடந்தது” என்று பதில் கூறியிருக்கிறார்.
மடத்தில் வைஷ்ணவி என்ற நங்கையும் கிடையாது. அதனால் தகராறும் கிடையாது என்று மூத்த சுவாமிகளே கூறவில்லை. தகராறு நடந்தது உண்மைதான் என்கிறார். எனவே basic story நிஜம். நித்தியின் சீடர்கள் தகராறு பண்ணக்கூடியவர்கள் என்பதை அவரது பாஸ் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அப்படிப்பட்ட சீடர்கள் நித்தி சொன்னால் உருவப் பொம்மையையும் எரிப்பார்கள், கண்ணகி ரேஞ்சுக்குபோய், மதுரையையே எரித்தாலும் எரிப்பார்கள் என்பது மறுக்க முடியாததுதான்.
“அவர்களை (சீடர்களை) பொறுமையாக இருக்குமாறு கூறியிருக்கிறேன். ஆனால், ஒரு கட்டத்தில் அவர்களை கட்டுப்படுத்த என்னாலேயே முடியாது போய்விடும். அதன்பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்” என்றும், நித்தி கூறியிருக்கிறார். இது, தமிழக காவல்துறைக்கே நித்தி கொடுத்திருக்கும் வார்னிங்!
ஒரு விதத்தில் மூத்த, இளைய சுவாமிகளை பாராட்ட வேண்டும். இந்து மதத்தில் எந்தளவுக்கு, எதையும், எப்படியும், யாரைப் பற்றியும் விமர்சித்து பேசலாம் என்ற சுதந்திரம் உள்ளது என்பதை இவர்கள் இருவரும்தான் நிரூபித்திருக்கிறார்கள்!
நன்றி விறுவிறுப்பு
0 comments :
Post a Comment