Sunday, May 27, 2012

பிணை கைதிகளை விடுவித்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட மர்ம நபர்!

அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் அலுவலகம் ஒன்றினுள் துப்பாக்கியுடன் புகுந்து ரகளையில் ஈடுபட்ட மர்ம நபர், இறுதியில் தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

வணிக வளாகத்தின் அத்தனை ஊழியர்களையும், முதலில் துப்பாக்கி முனையால் மிரட்டிய குறித்த நபர், பின்னர் 15 ஊழியர்களை மட்டும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து கொண்டு மற்றையவர்களை வெளியில் அனுப்பியுள்ளார். தகவல் அறிந்த அமெரிக்கப் போலீசார், வணிக வளாகத்தை சுற்றி வளைத்தனர்.

ஒலிபெருக்கியில் சரணடைந்து விடுமாறு கேட்டபோது மறுத்த மர்ம மனிதன், மேலும் தன்னை நோக்கி நெருங்கி வந்தால் பிணைக் கைதிகளை சுட்டுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். 8 மணிநேரத்திற்கு பின்னர் பிணைக்கைதிகளை விடுவித்த அவர், துப்பாக்கியால் தன்னை நோக்கி வரும் போலீசாரையும் சுட முயற்சித்துள்ளார்.


எனினும் இறுதியில் தன்னைத் தானே சுட்டுக்கொன்று உயிரை மாய்த்துள்ளார். பணம் கொள்ளையடிக்கும் முயற்சியில் குறித்த நபர் இச்செயலை செய்ய துணிந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


இச்சம்பவம் நடைபெற்று கொண்டிருந்த போது குறித்த அலுவலகத்திற்கு அருகிலிருந்த மூன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். குறித்த நபரை பற்றிய மேலதிக விபரங்கள் எதனையும் பொலிஸார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

No comments:

Post a Comment