நாளை கொழும்பில் இடம்பெறவுள்ள பாரதியார் விழா இலங்கை அரசின் அனுசரணையோடு நடத்தப்படுவதாகவும், அதில் தமிழக அறிஞர்கள் கலந்துகொள்ளக் கூடாதெனவும் ம.தி.மு.க தலைவர் வை கோ விடுத்துள்ள அறிக்கை தொடர்பாக இலங்கையிலுள்ள தமிழ் ஆர்வலர்கள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்.
வை கோவுக்கு தமிழகத்தில் மட்டுமன்றி இப்போது இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் ஆதரவு குறையத் தொடங்கியுள்ளது. உணர்ச்சி மிகு பேச்சுக்களால் தமிழ் மக்களின் உணர்வுகளைத் தூண்டுவதை மட்டுமே தனது தொழிலாகக் கொண்டிருக்கும் வை கோ இந்த முறை தானே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டுள்ளார்.
நாளை கொழும்பில் இடம்பெறவுள்ள பாரதி விழா, வை கோ வாசம் செய்யும் சென்னையில் அமைந்துள்ள பாரதியார் சங்கத்தாலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உண்மையைக் கூட அறியாத அரசியல்வாதியா இவர் என தமிழ் மக்கள் கேட்கின்றனர். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற தலைப்பில் இடம்பெறும் இவ்விழாவுக்கு தலை நகர் கொழும்பில் கடந்த 70 ஆண்டு காலமாக தலை நிமிர்ந்து நின்று தமிழ்ப் பணி ஆற்றும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் அனுசரணை மட்டுமே வழங்குகின்றது.
கடந்த ஆண்டு சென்னை பாரதியார் சங்கம் இத்தகையதொரு விழாவை மலேசியத் தலை நகர் கோலாலம்பூரில் நடத்தியதை, இந்த வாய் வீச்சு வீர்ர் வை கோ, அறிய மாட்டாரா எனத் தமிழர்கள் கேட்கின்றனர்.
இலங்கையில் தமிழர்கள் மத்தியில் எத்தகைய நிகழ்வுகள் நடந்தாலும் அதற்கு அரசியல் சாயம் பூசிப்பார்க்கும் வை கோ போன்ற சில தமிழக அரசியல்வாதிகளுக்கு இப்போது எஞ்சியுள்ளது இலங்கைத் தமிழர் விவகாரம் மட்டும்தான் என்பது இப்போது தெளிவாகியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த இரா மதிவாணன், இரா காந்தி, வ.வே.சுப்பிரமணியன், கேசவ சுப்பையா, இராமலிங்க ஜோதி, என் ஏ உசேன், பெ.சிவசண்முகம், முனைவர்கள் உலகநாயகி பழனி, ஏ ஜெயம், அல்போன்சா, எழிலரசி பாலசுப்பிரமணியம் போன்றோரின் முக்கியமான பங்களிப்புடன் நடைபெறும் பாரதியார் விழாவில், இலங்கை அறிஞர்கள் நால்வர் மாத்திரமே கலந்து கொள்கின்ற உண்மை வை கோவுக்குத் தெரியாதா? அவரது நண்பரும் சென்னை பாரதியார் சங்கத்தின் தலைவரும் முது நிலை வழக்கறிஞருமான இரா காந்தி இந்தத் தகவல்களை வை கோவுக்குத் தெரிவிக்கவில்லையா? அல்லது வை கோ தெரிந்தும் தெரியாதவர் போல பாசாங்கு பண்ணுகிறாரா?
2 ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டையும் இப்படித்தான் சில குதர்க்கவாதிகள் குழப்பியடிக்க முனைந்தாலும் அவ்விழா வெற்றிகரமாக நடைபெற்றதும் இவ்வேளை நினைவில் கொள்ளத்தக்கது.
30 ஆண்டு கால யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கி இராணுவத்தினதும் புலிகளினதும் ஆற்றொணாக் கொடுமைகளுக்கு ஆளாகி இப்போதுதான் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்களை மேலும் மேலும் அழுத்தங்களுக்குள் தள்ளும் வை கோ, சீமான் போன்றோர் எப்போது திருந்துவார்களோ?
இலங்கையில் வாழும் தமிழர்களும் நல்ல தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டு கேட்டு உய்த்துணரவேண்டும். இத்தனை காலமாக மன அழுத்தங்களுக்கு உள்ளான அவர்கள் மன அழுத்தங்களைக் குறைத்துக் கொள்ள இத்தகைய ஒன்றுகூடல்களும் கருத்தாடல்களும் அவசியம் என்பதை வை கோ புரிந்துகொள்ளவேண்டும்.
அவருக்கு அரசியல் செய்வதாயின் தமிழகத்திலும் இந்தியாவிலும் நிறையப் பிரச்சனைகள் உள்ளன. அவற்றைத் தேர்ந்தெடுத்து அரசியல் செய்யுமாறு ஆலோசனை வழங்க எவருமேயில்லையா?
தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கும் ஆந்திரா, கேரளா அரசுகளுக்கு எதிராக ஏன் ஓர் உண்ணாவிரதத்தை வை கோ ஆரம்பிக்கக் கூடாது. அதில் ஓரிரு வருடங்களை ஓட்டிவிடலாமே. கூடங்குளம் பிரச்சனை இன்னுமொரு அரிய வாய்ப்பு கையிலெடுக்கலாமே.
கலைஞரின் உள்வீட்டுப் பிரச்சனையை ஓரிரு ஆண்டுகளுக்கு இழுக்கலாம். ஜெ அம்மாவின் ஆட்சி பற்றிப் பேச ஆண்டுகள் சில எடுக்கலாம்.
ஐயா வை கோவே. ஈழத் தமிழனை விட்டுவிட்டு தமிழகத் தமிழனின் குறை நீக்க ஏதேனும் செய்யக் காலம் கனிந்துவிட்டது. இது எங்க ஏரியா. உள்ளே வரவேண்டாம்.
Lipy and a complete plonker
ReplyDelete