Monday, May 14, 2012

இனமோ, மதமோ முக்கியமல்ல. இலங்யைர் என்பதுதான் முக்கியம். பாதுகாப்புச் செயலாளர்.

முப்பதாண்டு கால போர் முடிவுற்ற மூன்றாவது ஆண்டு நிறைவு நாள் இம்மாதம் 19-ம் திகதியாகும். அதனை முன்னிட்டு பாதுகாப்புச் செயலாளர் பிஸினஸ் டுடே ஆங்கில இதழின் உதேனி அமரசிங்கவுக்கு அளித்த பேட்டி.. ( இலங்கைநெற் இற்காக தமிழில் ச.ஜேசுநேசன்)

முப்பாதாண்டு காலம் நாட்டில் இடம் பெற்ற கொடிய உள்நாட்டுப் போரின் பின்னர் நாட்டின் சகல பகுதிகளிலும் வழமையான நிலைமை ஏற்படுத்த முயல்கின்றோம். பாரிய முன்னேற்றமும் கண்டுள்ளோம். இதை மக்கள் உணர வேண்டும். போர் முடிந்த பிறகு மூன்று இலட்சத்துக்கும் அதிகமான இடம் பெயர்ந்தோரின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியேற்பட்டது. முதலில் அவர்களை நன்நோக்குப் பாசறைகளில் (அமைதி முகாம்கள்) அமர்த்தி படிப்படியாக அவர்களின் முன்னைய வதிவிடங்களுக்கு அனுப்பி வைத்தோம். வன்னி உட்பட வடகிழக்கின் சகல பகுதிகளிலும் மிதி வெடி ஆபத்து இருந்த படியால் இது மிகக் கடினமான செயலாக இருந்தது. எனினும் இன்று 7000 பேர் மட்டுமே பாசறைகளில் இருக்கின்றனர். இந்த முயற்சியில் இலங்கை இராணுவத்துடன் உண்ணாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற அமைப்புகள் பெரும் பங்காற்றின.

போரின் முடிவில் 11,600 வரையான போராளிகள் படையினரிடம் சரண் அடைந்தனர்.. அவர்களைத் தடுப்பு முகாம்களுக்கு அனுப்புவதை விட மறுவாழ்வு அளிக்க அரசு விரும்பியது. இது வெற்றியளித்தது. இன்று அவர்களில் பெரும்பாலோர் சமூகத்துடன் இணைந்துவிட்டனர். வன்னியில் மறுவாழுவு மையங்களைப் பார்வையிட்ட உண்ணாட்டினரும் வெளிநாட்டினரும் பெரிதும் பராட்டினர். பல்வேறு தொழில்களில் பயிற்சியளிக்கப்பட்ட அவர்கள் இன்று தமது வாழ்வைச் சுதந்திமாக நடாத்திச் செல்லக் கூடியவர்களாக இருக்கின்றனர். போர் முடிவுற்ற போது சுமார் 4000 விடுதலைப் புலிள் தடுப்பு முகாம்களில் இருந்தனர். அவர்கள் சாதாதரண வாழ்வை அனுபவிக்க வாய்ப்பளித்தோம். இன்று சுமார் 200 பேர் வரையிலேயே இன்னுமிருக்கும் ஒரேயொரு தடுப்பு முகாமான பூசா முகாமில் இருகின்றார்கள். அவர்கள் ஆன்மீக, பண்பாட்டு விழுமியங்களில் ஈடுபட வழி சமைத்துள்ளோம்.

வடக்கு, கிழக்கில் பெருமளவினரான படையினர் பிரசன்னமாக இருப்பது பற்றி பேசப்படுகின்றது. வன்னி போன்ற புலிகளின் கட்டுப்பட்டிலிருந்த பகுதிகளில் வழமை நிலையை எற்படுத்த அதிகமான படையினர் தேவைப்பட்டனர். இன்று மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் படிப்படியாக படையினர் விலகி அப்பகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணும் பொறுப்பு பொலிசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாங்குளம், கிளிநொச்சி மற்றும் பூநகரி பகுதிகளில் பொலிசு நிலையங்கள் திறக்கப்பட்டுளன. யாழ்ப்பாணப் பகுதிகளில் பிறந்த தமிழரைப் பொலிசாராகச் சேர்த்துள்ளோம்.

போர் முடிந்த பிறகு, மக்கள் தங்கள் வழமையான வாழ்வாதார தொழில்களான மீன்பிடி, வேளாண்மை போன்ற தொழில்களில் ஈடுபட்டுத் தமது வாழ்க்கையை நடத்தும் வழிகளைச் செய்து கொடுத்தோம். பிரதானமாக ஏ9 வீத உட்பட பல வீதிகளைத் திறந்தோம். இரயில் பாதை மறுபடியும் போடப்பட்டு வருகின்றது. நீர்ப்பாசன வசதிகள், குளங்கள் மறும் கால்வாய்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. மேற்கே சிலாவத்துறை முதல் பருத்தித்துறையைச் சுற்றிக் கொண்டு முல்லைத்தீவு வரை பிரதானமான வாழ்வாதாரத் தொழில் மீன்பிடித்தலாகும். புலிகளின் காலத்தில் இப்பகுதி அதிக ஆபத்து நிறைந்திருந்ததால் அறவே மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாதிருந்தது. இன்று சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு மீனவர்கள் சுதந்திமாகத் தமது தொழிலைச் செய்து வருகிறார்கள். அவர்களுடைய தொழிலை மேம்படுத்த கடன்கன் முதலான பல உதவிகளைச் செய்து வருகின்றோம்.

போர்க்காலத்தில் உயர்பாதுகாப்பு வலயம் பற்றி பெரிதாகப் பேசப்பட்டது. இன்று ஆரம்பம் முதல் இருந்து வரும் பலாலி வலயம் தவிர வேறெங்கும் உயர் பாதுகாப்பு வலயம் இல்லை. பலாலி வலயத்தை போதியளவு விரிவாக்கி வருகின்றோம்.
நீண்ட காலம் புலிகள் நிலை கொண்டிருந்த வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மாத்திரமன்றி நாட்டின் சகல பகுதிகளிலும் குழப்ப நிலையும் பீதியும் நிலவி வந்தது. குண்டுகள் வெடித்தன. கொலைகள் இடம் பெற்றன. சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இன்று அந்த பயம் இல்லை. மக்கள் பயமின்றி நடமாடுகிறார்கள். வெளிநாட்டார் இலங்கைகு வந்து முதலீடு செய்கின்றனர். இலங்யைரும் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்கின்றது. நாங்கள் ஒரு ஜனநாயக நாடு. நாங்கள் இந்த சுதந்திரத்தை முன்னோக்கிச் செல்லப் பயன்படுத்த வேண்டும்.

பலர் அரசியலில் ஈடுபடுகின்றனர். TNA கார்ர்கள் சுதந்திரமாக தமது கருத்துகளை வெளியிடுகின்றனர். எந்தவித பய பீதியும் இன்றி நாட்டின் எந்த இனத்தையும், சமயத்தையும் சார்ந்த எவரும் எப்பகுதியிலும் காணியோ வீடோ வாங்கலாம். வசிக்கலாம் வியாபாரம் செய்யலாம். தொழில் செய்யலாம். ஏனென்றால் நாங்கள் யாவரும் இலங்கையர்கள். இனமோ, மதமோ முக்கியமல்ல. இலங்யைர் என்பதுதான் முக்கியம். நீண்ட காலத்தின் பின்னர் நாட்டில் உறுதிப்பாட்டை ஏற்படுத்தியுள்ளோம். இந்த உறுதிப்பாட்டை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டும். எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு நாட்டின் (அபிவிருத்தி) வளர்ச்சியே. போரிட்டுக் கொண்டிருப்பதல்ல.
சிலர் தங்களின் சுய நலனுக்காகவே இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார்கள். மக்களோ அமைதியை விரும்புகிறார்கள். சிறப்பாக வடக்கு மக்கள் தங்களின் பிள்ளைகளின் கல்வி, தமது வீடுகளைக் கட்டுதல், மீன் பிடித்தல் மற்றும் வேளாண்மைத் தொழில்களில் ஈடுபட விரும்பு கிறார்கள். அந்தப் பகுதிகளில் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இல்லாததால் தற்போது முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்குத் தயங்குகிறார்கள். நாங்கள் தொழிற் பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வர வேண்டும். நாங்கள் விரும்பும் வளர்ச்சி அதுதான். நாங்கள் இறந்த காலத்தில் வாழக்கூடாது.

நாட்டில் தற்போது அவசரகாலச் சட்டம் இல்லை. வீதித் தடைகள் இல்லை. தேடுதல் வேட்டை இல்லை. நாட்டில் முன்னைய அமைதி வர வேண்டும். ஆனால் இன்னும் ஆபத்து இன்னும் நீங்கவில்லை. சரணடையாத போராளிகள் இருக்கிறார்கள். இன்னும் கண்டு பிடிக்கப்படாத புலிகளின் ஆயுதக் கிடங்குகள் பற்றிய அச்சம் நிலவுகின்றது. பிரபாகரன் காலத்தில் பாரிய வெளிநாட்டு வலையமைப்புகள் ஐரோப்பியா, அமெரிக்க நாடுகள் மற்றும் அவுத்திரேலியா போன்ற நாடுகளில் இலங்கைகு எதிராகச் செயல்பட்டன. இலங்கையை நிலை குலைப்பதே அவற்றின் நோக்கம். இன்னும் அந்தப் பயம் இருக்கின்றது. நாங்கள் வடக்கில் மட்டுமல்ல ஹம்பாந்தோட்டை உட்பட நாட்டின் சகல மாவட்டங்களிலும் படைகளை வைத்திருக்கின்றோம். அவர்கள் தற்போது பல்வேறு வளர்ச்சிப் பணகளில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப் படுகின்றனர். நகர அபிவிருத்தி அதிகார சபையை எடுத்துக் கொண்டால், படையினரின் பல்வேறு திறமைகளை அதன் செயற்றிட்டங்களில் பயன்படுத்தி வருகின்றோம். பல்வேறு நாடுகளில் படையினர் இவ்வாறுதான் செயல்படுகின்றார்கள். படையினர் நாட்டின் சமுதாயத்தில் ஒரு பகுதியினர் ஆவர்.

முப்பதாண்டு காலப் புலிகளின் பிரச்சனை நிலவி வந்தபோது நாட்டில் பிற சட்ட விரோத செயல்களும் வளர்ந்து வந்தன. ஆட்கடத்தல், கப்பம் கேட்டல், கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பாவனை போன்ற இன்னோரன்ன குற்றச் செயல்கள் சமூகத்தின் அமைதி வாழ்க்கையைக் குலைத்து வந்தன. இவ்வாறு இடம் பெற்றது இலங்கையில் மட்டுமல்ல. இவற்றை நிறுத்த நாங்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றோம். இந்த விடயத்தில் மக்கள் பொலிசுக்கு உதவ வேண்டும். பாதிக்கப்படும் மக்கள் பொலிசுக்கு எதுவும தெரிவிப்பதில்லை. அச்சுறுத்துபவர்கள் கேட்ட தொகையைக் கொடுத்து விடுகின்றனர். எனினும் நாங்கள் இது போன்ற பல பிரச்சினைகளைத் தீர்த்துள்ளோம். இவ்வாறான சமயங்களில் மக்கள் பயப்பட கூடாது. அதிகாரிகளுக்கு உடன் அறிவிக்க வேண்டும். சட்ட விரோத செயல்கள் இடம் பெற நாங்கள் இடமளிக்க கூடாது.

பெரும் பாலான மக்கள் நாங்கள் அடைந்த வெற்றியை மெச்சுகிறார்கள். மக்களிடையே பயப் பீதியை உண்டாக்க உருவாக்க முயல்வோரே, எமது செயற்பாடுகளை விமர்சனம் செய்கிறார்கள். மக்கள் ஒழுக்கத்தையும் அபிவிருத்தியையும் விரும்புகிறார்கள். நகரையும் சுற்றாடலையும் சுத்தப்படுத்தியதை மக்கள் வரவேற்கிறார்கள். இப்போது குப்பைகளை கண்டபடி வீசியெறிவதில்லை. வீதியை முறைப்படி கடக்கின்றார்கள். மக்களுக்கான வசதியை செய்து கொடுத்தால், மக்கள் அதன்படி ஒழுகுவார்கள். தெற்காசியாவிலேயே மிகச் சுத்தமான நகர் கொழும்பு என்று நாம் இப்போது கூற முடியும். இதனால், உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நகர வளர்ச்சி அதிகாரசபை (UDA) அதிகமான அபிவிருத்தி வேலைகளைச் செய்து வருகின்றது. கொழும்பு மாநகர சபையும் தனது பங்கிற்கான வேலைகளைச் செய்ய வேண்டும்.

உலக வங்கி உதவியுடன் கோட்டே, கொலன்னாவை, தெகிவளை, கல்கிசை போன்ற புற நகரங்ளை நவீனப்படுத்தும் வேலை ஆரம்பமாகியுள்ளது. நகரப் பகுதிகளில் வெள்ளம் நிரம்புவதை பெருமளவு இப்பொழுது தடுத்துள்ளோம். நகரப் பகுதிகளில் குப்பங்கள் போன்ற குடியிருப்புகளை அழித்து தொடர்மாடி வீடுகளை அமைத்துக் குடிசை வாழ் மக்களுக்கு வழங்கும் திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம். இதைப்பற்றி யெல்லாம் சிலர் தவறாக விமர்சித்து மக்களைக் குழப்பப் பார்க்கிறார்கள். நாங்கள் கொட்டில், குடிசைகளை அகற்றும் போது, குடியிருப்பாளர்களை அவர்களின் வீடுகளிலிருந்து தூக்கி எறிவதில்லை. அவர்களுக்குத் தற்காலிக வசிப்பிடங்களை அமைத்துக் கொடுக்கின்றோம். நாட்டினதும், மக்களினதும் முன்னேற்றம் கருதியே நாங்கள் இவைகளைச் செய்கின்றோம். சட்டபூர்வமற்ற கட்டிடங்களை அழிக்கின்றோம். நடைபாதைக் காரர்களை அப்புறப்படுத்து கின்றோம். அவர்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவது என்றால் இவற்றைச் செய்துதான் ஆக வேண்டும். மற்றவர்களால் செய்ய முடியாத காரிங்களை நாம் செய்ய முடியுமா என்று பார்க்கக் கூடாது. முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை. தங்களால். முடியும் என்று நினைத்த பலர் பெரிய வெற்றிகளைக் கண்டிருக்கிறார்கள்.. முயற்சித்தால் வெற்றி நிச்சயம். நான் அப்படி நினைக்கின்றேன். எனக்குக் கீழ் வேலை செய்பவர்களும் அப்படித்தான் ஈடுபாட்டுடன் வேலை செய் கின்றார்கள். ஈடுபாடு மிக முக்கியம். அத்துடன் நேர்மையும் அவசியம்.

அரசாங்க ஊழியர்கள் அனைவரையும் அவர்கள் ஈடுபாட்டுடன் வேலை செய்கின்றார்களா என்று கேட்கின்றேன். மக்களுக்கும் நாட்டுக்கும் சேவை செய்ய நீங்கள் கடமைபட்டிருந்தால் என்ன தடை வந்தாலும் அதைத் தாண்டி முன் செல்ல வேண்டும். கொழும்பை அழகுபடுத்தியது போல யாழ்ப்பாணம் உட்பட நாடு முழுதும் பதினெட்டு நகரங்களை மேம்படுத்த நகர வளர்ச்சி அதிகாரசபை (UDA) தெரிவு செய்துள்ளது.
கடற்கரைகள், மரபுரிமைப் பிரதேசங்கள், வனவிலங்குகள், தேயிலைத் தோட்டங்கள் ஆகியன உல்லாசப் பயணிகளைக் கவரும் எமது சொத்துக்கள். இவை காணாது. ஹோட்டல்கள், கோல்ஃப் திடல்கள் போன்றவை மிக அவசியமானவை. இதனால் திருகோணமலையில் உள்ள குளோசன்பார்க் என்ற இடத்தை கோல்ஃப் திடலுக்காகத் தெரிவு செய்தோம்.

என்மீது எந்தப் பொறுப்பு சுமத்தப்பட்டாலும் அதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு நான் பாடுபடுவேன். நான் பெறுபேறுகளை எதிர்பார்த்து கடினமாக உழைப்பவன். இதனால்தான் 30 ஆண்டுகள் வெற்றி கொள்ள முடியாதிருந்த போரை வெற்றி கொள்ள முடிந்தது. நீங்கள் எதை அடைய வேண்டுமானாலும் அதை மனக்கண்ணில் நிறுத்திப் பார்க்க வேண்டும். பின்னர் அதற்காக முன் சென்றால் குறிக்கோளை நிச்சயம் அடைவீர்கள். கடைசி பெறுபேறுதான் மிக மிக முக்கியமானது. பெறுபேறில்லாத திட்டங்கள் கால விரயமாகும்.
இன்றைய அடையாள அட்டைகள் பாதுகாப்பற்றவை. போலியான அடையாள அட்டைகளைத் தயாரித்து விடலாம். பெரும்பாலான தற்கொலைப் படையினர், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் போலி அடையாள அட்டைகளையே பயன்படுத்துகிறார்கள். எனவே மிக நவீனமான சரியான அடையாள அட்டைகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

இலங்கையில் வந்திறங்கியவுடன் வீசா வழங்கும் முறை நிறுத்தப் படவில்லை. சிலவேளை விசா மறுக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக இலங்கையை விட்டுச் செல்ல வேண்டும். எனவேதான் ஒன்லைன் வீசா முறையை அறிமுகப் படுத்தியுள்ளோம். அவர்கள் இலங்கை வருவதற்கு முன்பு அதற்கு விணப்பித்தால் 48 மணிநேரத்துக்குள் அதைப் பெற்றுக் கொள்ளலாம்.

எனக்கு அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதை அரசியல்வாதிகள் உணரவேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகு பல கட்சிகளையும் பல அரசுகளையும் கண்டிருக்கிறேன். மக்கள் விரும்பா விட்டால் வாக்களிப்பு மூலம் அரசை மாற்றி விடுவார்கள். இடதுசாரிகள் அரசில் இருக்கிறார்கள். ஜேவிபியும் அரசில் அமைச்சுப் பதவி வகித்தது. ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் மக்களே தெரிவு செய்கிறார்கள். அவர்களின் பதவிக்காலம் முடிவில் மக்கள் திருப்தி இல்லாவிட்டால் அவர்களை மாற்றி விடுவார்கள்.

நாங்கள் இப்பொழுது சுதந்திரத்தை அனுபவிக்கின்றோம். மக்களே இதனைப் பாதுகாக்க வேண்டும். முன்னேற்றமடைந்து செல்வதற்கு மக்களின் ஆதரவு வேண்டும். சிலர் பன்னாட்டுச் சமூகத்துடன் சேர்ந்து கொண்டு எமக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகள் எவ்வளவு முன்னேறி இருக்கின்றோம் என்பதைப் பார்க்க வேண்டும். வியட்நாம், சீனா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர் போன்று அமைதியாக முன்னேறிச் செல்கின்றோமா அல்லது ஆர்ப்பாட்டங்கள், குண்டு வெடிப்புகள், வெளியாரின் அனாவசியத் தலையீட்டை நோக்கிச் செல்கின்றோமா என்பதை மக்களே தீர்மானிக்கட்டும். மிகவும் கடினமான பிரச்சினையை ஜனாதிபதி தீர்த்துவிட்டார். இப்போது முன்னோக்கிச் செல்ல வேண்டும். நீண்டகாலம் கிடைக்காத வாய்ப்பு இப்பொழுது கிடைத்துள்ளது. இறுதியாக நாங்கள் எதிர்பார்ப்பது இந்த நாட்டில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு குடிமகனுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதேயாகும்.
மாண்புடன் நீடு வாழ்வோம். இலங்கையராக வாழ்வோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com