உலகத்தமிழனின் உழைப்பை உறிஞ்ச உலகம் சுற்றாதீர்! சஜேன்
“யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா’. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கணியன் பூங்குன்றனார் மொழிந்த இந்த வரிகளுக்கு இன்றும் உயிரூட்டிக் கொண்டுக்கின்றான் இலங்கைத் தமிழன். ஆம் உலகம் முழுதும் பரந்து உலக மக்கள் எல்லோரையும் உறவினராகக் கொண்டு மகிழும் இலங்கைத் தமிழன், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்த தாய் நாட்டுச் சிங்களவரை உறவினராக ஏற்க மறுப்பது ஏனோ? மரபடிப்படையிலும், மொழியடிப்படையிலும், உருவ அடிப்படையிலும், பண்பாட்டு அடிப்படையிலும் சமய அடிப்படையிலும் சிங்களவர் தமிழருக்கு மிக நெருக்கமானவர்கள். அவர்கள் தம்மை ஆரியர்கள் என்று கூறிக் கொண்டாலும் அந்த அம்சம் அவர்களில் மிகவும் குறைவு. பௌத்த சமயம் ஊடாக சிங்ள மொழியில் புகுந்த பாளி மொழிச் சொற்களை சிங்கள மொழியிலிருந்து எடுத்து விட்டால் தமிழுக்கு மலையாளம் மாதிரிதான் சிங்கள மொழியும்.
இன்று இலங்கையில் தமிழனுக்கு ஏற்பட்ட துயர் பிறர் தந்ததன்று. பூங் குன்றனார் கூறுவது போல தானே ஏற்படுத்திக் கொண்டது. சுதந்தித்துக்கு முன்னர் கண்டிய சிங்கள மக்கள் இலங்கையை மூன்று அரசுகளைக் கொண்ட ஒரு சமஷ்டி நாடாக ஆக்குமாறு கோரிக்கை விடுத்த போது நாம் அதை எதிர்த்தோம். அன்றைய ஆங்கில ஆட்சியில் white colour job முழுதும் தமிழன் கையிலேயே இருந்தது. அன்று சமஷ்டிக்கு ஒத்துக் கொள்ளாததற்கு இதுதான் காரணம். ஓடம் ஒருநாள் வண்டியில் ஏறும் என்ற தமிழ்ப் பழமொழி ஆங்கிலம் கற்ற அன்றைய தமிழ் மேட்டுக் குடியினருக்குத் தெரியாததனால் வந்த பயன் இது. அன்று சமஷ்டிக்கு இணங்கியிருந்தால் இன்று நாம்.... சிந்தியுங்கள்.
சுதந்திரத்துக்குப் பின்னர் வடகிழக்குத் தமிழரிலும் பார்க்க கூடிய தொகையினராக இருந்த மலையகத் தமிழரின் குடியுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டபோது என்ன செய்தோம்! மௌனிகளாக இருந்தோம். அமைச்சரவையை அலங்கரித்துக் கொண்டிருந்தோம். ஆனால், அதற்கு 56 ல் கிடைத்த பரிசு தான் சிங்களம் மட்டும் சட்டம்.
வீட்டில் தமிழே பேசாத தமிழ் மேட்டுக்குடி வர்க்கம் ஆடிப் போய்விட்டது. ஏன்?. தமிழையும் ஆட்சி மொழியாக ஆக்கவில்லை என்றா?. இல்லை. ஆங்கிலத்தில் அரச கருமங்களை ஆற்ற முடியாது போகிறதே என்றுதான். அன்றை சிங்களம் மட்டும் சட்டத்தை தமிழ் மக்களின் உரிமைக்கு வைத்த ஆப்பு என்று கருதாமல் திறமைக்குக் கிடைத்த சவால் என்று சிங்களத்தைப் படித்திருந்தால் இன்றும் அரச ஊழியரில் பெரும்பாலோர் தமிழராகத்தான் இருந்திருப்பார். (தமிழனின் திறமை அவ்வளவு பலம் வாய்ந்தது. ஏதிலியாய்ச் சென்று இன்று உலகம் முழுதும் கொடிகட்டிப் பறக்கும் தமிழனின் மாண்பு அதற்குச் சான்று)
தமிழும் அழிந்திருக்காது தமிழனும் அழிந்திருக்க மாட்டான். ஏனென்றால், இவர்கள் எல்லோரும் தொழிலுக்காக ஆங்கிலத்தில் அரச தொழில்களைப் புரிந்த போது அழியாத தமிழ், சிங்களத்தில் அரச கருமங்கசை செய்வதால் அழிந்து விடும் என்று எண்ணியது தப்பு. அன்று முதல் இன்று வரை மலையகத்தில் சிங்களத்தில்தான் அரச கருமங்கள் நடை பெறுகின்றது. ஆனால் அங்கு தமிழ் அழியவில்லை தமிழனும் அழியவில்லை.
குறிப்பிட்டத்தக அளவு முஸ்லிம் மக்கள் சிங்களத்தையே முதல் மொழியாகப் படித்தார்கள். அரச மற்றும் வணிகத் தொழில்களைச் செய்கிறார்கள். அவர்களிடம் தமிழ் அழியவில்லை. பள்ளிவாயல்களில் இன்றும் தமிழ்தான் ஒலிக்கின்றது. வீடுகளில் தமிழ்தான். தங்களுக்குள் உறவாடுவது தமிழில்.
எனவே, அன்றைய தமிழன் தொழிலுக்காக வரிந்து கட்டிக் கொண்டு ஆங்லத்தைக் கற்றது போல இன்றும் அதே நோக்கத்துக்காக சிங்களத்தைக் கற்றிருந்தால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. ஒரு சிறிய எடுத்துக்காட்டு: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நீதி மன்றங்களில் மிகச் சிறப்பாக சிங்களத்தில் வாதாடுபவர். அவரைப் போல பல தமிழ்த் தலைவர்கள் சிங்களத்தில் புலமை பெற்றவர்கள். அவர்களின் தமிழுக்கு இன்றுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வாய்ப்பு ஏன் தமிழ் பொது மக்களுக்கு வழங்கக் கூடாது. ஏன் தடுக்கிறார்கள். ஊருக்கு மட்டும்தான் உபதேசம், உனக்கும் எனக்கும் இல்லை என்ற இந்த கயவர்களின் வழிகாட்டலால், சொந்த நாட்டில் 75% மாகவுள்ள மக்களின் சிங்கள மொழியைக் கற்க மறுத்த தமிழன் இன்று உலகமுழுதும் நாடோடியாகத் திரிந்து அந்நந்நாட்டு மொழிகளைக் கற்று பிழைப்பு நடாத்திக் கொண்டிருக்கின்றான். என்னே பரிதாபம்.
இந்த கயமைத் தலைவர்கள் 13 வது திருத்தம் என்று கூறி தமிழரை மட்டுமல்ல உலகத்தையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். (16 வது திருத்தம் என்ற ஒன்றும் அவ்வப்போது நினைவு கூரப்படும்). அப்படி ஒன்று இல்லை. இலங்கையின் அடிப்படைச் சட்டமான அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தப்பட்ட 18, 20, 22, 23, 24, 138 ஆகிய பிரிவுகளும் (articles), XVIIA என்ற புதிய அத்தியாயத்தில் (chapter) உள்ள புதிய பிரிவான 154A பிரிவும் தான் இவர்கள் உலகத் தமிழரை ஏமாற்றித் திரியும் 13 ம் 16 ம் திருத்தங்களாகும். அடிப்படைச் சட்டமான அரசியலமைப்புச் சட்டத்தை யார் மீறினாலும் தண்டனைக் குரிய குற்றம். ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக அட்டப்பட்டமாக மீறப்பட்டு வருகின்றது. ஆம் அரசியலமைப்பின் மேலே கூறிப்பிட்ட பல பிரிவுகள் மீறப்பட்டு வருகின்றன. இதைத் தட்டிக் கேட்க இலங்கையின் உயர் நீதி மன்றத்திற்குச் செல்ல வேண்டும். சட்டத்தரணிகளால் நிரம்பி வழியும் தமிழ்க் கட்சிகள் இதைச் செய்ய வேண்டும். அதை விடுத்து உலகத் தமிழனின் உழைப்பை உறிஞ்ச உலகம் சுற்றக் கூடாது.
குறிப்பு : www. gov.lk.constitution என்ற இணைத்தில் இலங்கை அரசியலமைப்பை முழுவதுமாகப் படிக்கலாம். ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும், சட்டத்தரணிகள் மட்டுமல்ல.
0 comments :
Post a Comment