Sunday, May 20, 2012

சென்னையில் கைதான மாவோயிஸ்ட் சிறையில் அடைப்பு!

தமிழ்நாட்டில் மாவோயிஸ்டுகள் அமைப்பின் பொதுச் செயலாளராக செயல்பட்ட விவேக் என் பவர் கியூ பிரிவு போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார் இவர் இன்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தேனி மாவட்டம் பெரியகுளம் முருகமலை காட்டுப் பகுதியில் நக்சலைட்டுகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார் விவேக் என்று கூறப்படுகிறது.

2004-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை காட்டுப் பகுதியில் ஆயுதப் பயிற்சி பெற்றபோது போலீஸ் முற்றுகையில் இருந்து தப்பி விட்டார். இவரது கூட்டாளியான் பத்மா என்ற பெண்மணியும் தப்பிவிட்டார்.

இந்த நிலையில் தென் மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் தளம் அமைக்க முயற்சிப்பதாக மத்திய உளவுத்துறை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

இதனையடுத்து தமிழக கியூ பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

விவேக் பற்றி விசாரித்தபோது அவர் பாலன், குமார், ஆனந்தன் என பல பெயர்களிலும், சத்யாமாரி என்ற பெயரில் பத்மாவும் சென்னை அண்ணாநகர் ஷெனாய் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று காலை அவர்கள் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தயாராவதும் தெரிய வந்தது. உடனே கியூ பிரிவு போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்டனர். அங்கிருந்த விவேக்கை கைது செய்தனர்.

இன்று காலை நீதிபதி ராஜ்குமார் முன்பு விவேக் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 1-ந்தேதி வரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

பின்னர் விவேக் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment