வருகிறது கிழக்கில் தேர்தல்.. பராக்! பராக்!!
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் விரைவில் நடைபெறலாமென நம்பப்படுகிறது. கடந்தவியாழக் கிழமை கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது குறித்த பதவிக்காலத்துக்கு முன்னரே மாகாண சபையைக் கலைப்பதற்கு முதலமைச்சர் இணக்கம் தெரிவித்ததாகத் தெரியவருகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் படி மாகாண சபையைக் கலைப்பதாயின் முதலமைச்சரின் அங்கீகாரம் தேவை. இதற்கான இணக்கப்பாடு கடந்த வியாழக்கிழமை சந்திப்பின்போது எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குத் தயாராகுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிப் பிரதி நிதிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
புலிப் பயங்கரவாதத்தைத் தோற்கடித்து 3 ஆண்டுகள் நிறைவடையும் இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் கிழக்கில் அரசாங்கம் தொடர்பாக மக்கள் கொண்டுள்ள மனக்கருத்தை அறிவதற்கும் இத்தேர்தல் உதவுமென அரசாங்கம் கருதுகிறது.
இதேநேரம் ஏனைய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் கிழக்கின் தேர்தல்களை அடுத்து நடத்தப்பலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றையெல்லாம் இலக்காகக்கொண்டே அனுராதபுரத்தில் ஜனாதிபதி மஹிந்த நேற்றுஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அங்கத்தவர்களைச் சேர்க்கும் இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். கட்சியைப் புனரமைக்கும் நடவடிக்கையின் ஓர் அங்கமே இந்த நடவடிக்கை எனகட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரி பாலசிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த சில வாரங்களாகக் கிழக்கின் தேர்தல் தொடர்பாக பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. தற்போது நீதி அமைச்சராகவுள்ளஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமை கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக நியமிக்கும் நோக்கில் அவரை முதன்மை வேட்பாளராக அரசாங்கம் நிறுத்தும் என்ற வகையில் தீவிரமான செய்திகள் முன்னர் வெளிவந்தன.
ஆனால் இதற்கு எதிராக கிழக்கில் அவர் சார்ந்த முஸ்லிம் மக்களிடையேயும் ஏன் அவரது கட்சிக்குள்ளும் கருத்துகள் எழுந்தன.
கடந்த வாரம் பிள்ளையானைச் சந்தித்த ஜனாதிபதி, ரவூப்ஹக்கீமையும் சந்தித்து கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றிக் கலந்துரையாடியுள்ளார். ஆனால் இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுமா அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாகப் போட்டியிடுமா என்பது பற்றித்தாம் இதுவரை தீர்மானிக்கவில்லையென கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீடுவீடாகச் சென்று மக்களின் கருத்துகள் கேட்டறியப்பட்ட பின்னரே இறுதித் தீர்மானம் எட்டப்படுமென என்று வேறு கதை விட்டுள்ளார். மக்களிடம் கேட்டு முடிவு எடுக்கப்படும் என்பது அரசியல் கட்சிகளின் வாய்பாடு.
குறிப்பாக முஸ்லிம்களைச் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்தல் , கிழக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்பு போன்ற பல பிரச்சினைகளுக்குமுகம் கொடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு நகரில் நேற்று இடம் பெற்ற கூட்ட மொன்றில் உரையாற்றும் போது தேர்தலுக்குத்தயாராகுமாறு மக்களைக் கேட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
அவரது கட்சிக்கு 15 ஆசனங்களும் முதலமைச்சர் பதவியும் வழங்கப்படுவதாக இணக்கங்காணப்பட்டுள்ளதென அவர் தமக்குத் தெரிவித்துள்ளதாக இந்த ஆங்கில ஊடகம் கூறுகிறது.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான முன் ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கொழும்பில் கூட்டமைப்பு கடந்த வெள்ளியன்று கூடி இதுபற்றி ஆராய்ந்ததாகவும் கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வி.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்வது தொடர்பாகவும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.
எது எவ்வாறாயிருப்பினும் வரப் போகும் கிழக்குத் தேர்தல் பல்வேறு சுவையான திருப்பங்களையும், கட்சிமாறுதல்களையும், துரோகங்களையும் , கூட்டுக்களையும் கொண்டு வரப்போகின்ற தென்பதில் சந்தேகமில்லை.
0 comments :
Post a Comment