Thursday, May 17, 2012

டொரன்டோ வீதியில், அக்கா புகைக்கும் மர்ஜூவானா!


கனடாவின் டொரன்டோ நகரின் வீதிகளில் மர்ஜூவானா (போதைப்பொருள்) புகைக்கு ரசிகர்கள் அட்டகாசமான பேரணி ஒன்றை நடத்தி முடித்துள்ளனர். கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த பேரணியின், 14-வது ஆண்டு குளோபல் மர்ஜூவானா மார்ச் இது.

இங்குள்ள முக்கிய விஷயம், கனடாவில் மர்ஜூவானா புகைப்பது குற்றம். போதைப்பொருள் என்ற ரீதியில் கருதப்படும் மர்ஜூவானா, குறிப்பிட்ட சில மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றது.

அப்படியிருந்தும், மர்ஜூவானா அபிமானிகள் வருடாவருடம் பேரணி நடத்துவதற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

யங் வீதி, வெலஸ்லி வீதி சந்திப்பில் துவங்கிய ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். பேரணி டொரன்டோ நகரின் டவுன்டவுன் வழியாக சென்று குவீன்ஸ் பார்க்கை சென்றடைந்தது. ஊர்வலம் முடிந்த நேரத்தில் பலர் ‘உச்சத்தில்’ இருந்தார்கள்!

“ஒரு ‘ஜாயின்டை’ பொது இடத்தில், அதுவும் வீதியில் பலர் பகிர்ந்து கொண்டு புகைத்ததை நான் எனது வாழ்க்கையில் இப்படி கண்டதேயில்லை” என்றார், பிரிட்டனில் இருந்து உல்லாசப் பயணியாக வந்திருந்த எலிசபெத் பாட்ரன்.

சிட்டி நியூஸ் டி.வி. சேனலுக்கு பேட்டியளித்த டொரன்டோ போலீஸ் அதிகாரி மார்க் ஸ்மித், “பேரணி அமைதியாக நடைபெற்ற காரணத்தால் நாம் தலையிடவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை. ஏதாவது அசம்பாவிதம் நிகழலாம் என்ற அச்சத்தில், 100 போலீஸ் அதிகாரிகள் கடமையில் இருந்தனர். ஆனால் பேரணி முடிந்தபின் அனைவரும் அவரவர் திசைகளில் பிரிந்து சென்று விட்டனர்” என்றார்.

வீதியில் மர்ஜூவானா புகைத்ததை பொதுமக்களும், போலீஸை போலவே ஜாலியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதெல்லாம் ஒன்றும் பிக்-டீல் கிடையாது!

இந்த ஆண்டு கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 20,000 இருக்கலாம் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2011) 25,000 பேர் கலந்து கொண்டதாக டொரன்டோ ஸ்டார் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com