விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மூவர் காணாமல் போயுள்ளனர் - மனோ கணேசன்
புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் மூவர் காணாமல் போயுள்ளதாக மக்கள் கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளரும். ஜனநாயக மக்கள்
முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் இன்று (14.05.2012) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த செப்ரம்பர் மாதம் 30 ஆம் திகதி புனர்வாழ்வழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் ஆயிரத்து 800 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் சவரிமுத்து லோரண்டின். மோரினோ ரொக்சி. மற்றும் முருகேசு முருகானந்தன் ஆகியோர் இதுவரை தமது பெற்றோரிடம் ஒன்று சேரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மூவரின் பெற்றோர்கள் இது தொடர்பாக தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மக்கள் கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளரும். ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தியறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'ஒன்றுசேர்ந்து நாட்டை கட்டி எழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் புனர்வாழ்வு பயிற்சி அளிக்கப்பட்ட 1800 முன்னாள் போராளிகள் தங்களது பெற்றோர்களுடன் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள அமெரிக்க, இந்திய, ஸ்திரேலிய, பிரித்தானிய,ஜெர்மானிய, பிரான்சிய, சீன, ஜப்பானிய தூதர்கள் உட்பட பெருந்தொகையான வெளிநாட்டு பிரதிநிதிகளும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டதாக நான் அறிகிறேன்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பிலான அரசாங்கத்தின் நல்லெண்ண நடவடிக்கையாக லண்டன் பிபிசி, சென்னை ஹிந்து உட்பட பல்வேறு ஊடகங்கள் இந்நிகழ்வை வர்ணித்திருந்தன. சென்னை ஹிந்து பத்திரிக்கையின் ஊடகவியலாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட புனர்வாழ்வு பயிற்சி பெற்ற கைதிகளை புகைப்படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் சவரிமுத்து லோரண்டின், மோரினோ ரொக்சி, முருகேசு முருகானந்தன் ஆகிய மூன்று தடுப்பு காவல் கைதிகள் கலந்து கொண்டு கூட்டத்தில் அமர்ந்து இருப்பதை ஊடகவியலாளர் ராதாகிருஷ்ணனின் படம் ஊர்ஜிதம் செய்கிறது.
அவர்களது அடையாளங்களை அவர்களது பெற்றோர் அறிந்து வைத்துள்ளனர். ஆனாலும் சர்வதேச சமூகத்து பிரதிநிதிகளின் முன்னிலையில் உறுதி அளிக்கப்பட்டப்படி இந்த மூவரும் அவர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தவர்களுடன் இன்னும் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் குறித்த மூவரும் ஏன் பெற்றோர்களுடன் சேர்க்கப்படவில்லை? அவர்கள் இன்னமும் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்? போன்ற விபரங்களை வெளியிடுமாறு மக்கள் கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளரும். ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன். புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 comments :
இது மனோ கணேசனின் வியாபாரம். குறிப்பிட்ட நபர்கள் ஐரோப்பாவில் தஞ்சம் கோரியிருப்பார்கள். அவர்களின் வழக்கு தேவையான படி இப்படியான அறிக்கைகளை விடுத்து அதனூடாக பணம் சம்பாதிப்பதே இவரின் தொழில்.
Post a Comment