தொடர்ந்தும் நவலோக்க வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற உயர் நீதிமன்றம் அனுமதி
முப்படைகளின் முன்னாள் பிரதானி தளபதி சரத் பொன்சேகாவிற்கு தொடர்ந்தும் நவலோக்க வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நவலோக்க வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் சரத் பொன்சேகாவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு மேல் நீதிமன்றம் கடந்த 4ம் திகதி உத்தரவிட்டது.
அங்கு அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியாத நிலை உள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நீதிமன்றில் தெரிவித்ததை அடுத்தே அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சரத் பொன்சேக்கா சார்பாக உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு இன்று (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, பொன்சேக்கா சார்பாக ஆஜரான சட்டத்தரணி, நவலோக்க வைத்தியசாலையின் விசேட வைத்தியர் வஜிர தென்னகோனிடம் சிகிச்சைப்பெறும் சரத் பொன்சேகாவிற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற முடியாது என வாதிட்டார். சிகிச்சையில் மாற்றம் ஏற்பட்டால் பொன்சேக்காவின் உடல் நிலை பாதிக்கக்கூடும் எனவும் சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டினார்.
எனினும், தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் பொன்சேக்காவின் பாதுகாப்பை கருத்திற்கொள்ள வேண்டும் என சிறைச்சாலை ஆணையாளர் தெரிவிப்பதாக அரச தரப்பு சட்டத்தரணி வாதிட்டார்.
வாதங்களை ஆராய்ந்த நீதியர் குழு, விசேட வைத்தியர் வஜிர தென்னகோனின் ஆலோசனை கோரினர். இந்த ஆலோசனை கிடைக்கும் வரை சரத் பொன்சேகாவிற்கு நவலோக்க வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற நீதியரசர் குழு அனுமதி அளித்தது.
0 comments :
Post a Comment