தனிநாட்டுக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்காது – சுரேஸ் பிறேமச்சந்திரனிடம் சொல்கெய்ம்.
இலங்கைத்தமிழர்களை இலங்கை யிலுள்ள அரசியல் தலைவர்களே வழிநடத்த வேண்டுமாம், புலம் பெயர்ந்தவர்கள் அல்லவாம்.
இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சிறப்புத் தூதரும், நோர்வேயின் முன்னாள் சுற்றாடல் அமைச்சருமான எரிக் சொல்கெய்ம், இலங்கையில் ஒரு தனி நாடு அமைப்பதற்கு உலகநாடுகள் ஆதரவு வழங்க மாட்டாதென்று, செவ்வாயன்று நோர்வே பாராளுமன்றத்தில் இடம் பெற்ற கருத்தரங்கொன்றில் தெளிவாகக் குறிப்பிட்டார்.
'போருக்குப் பின் இலங்கையில் மூன்றாண்டுகள்' என்ற தொனிப் பொருளில் நோர்வே தொழிற் கட்சி ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் சொல்கெய்மும் சிறப்புப் பேச்சாளராக்க் கலந்து கொண்டபேதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தக் கலந்துரையாடலுக்கு நோர்வேயின் துணைச் சபாநாயகர் மரிட் நைபாக் தலைமை வகித்தார்.
தொடர்ந்து பேசிய சொல்கெய்ம் உலகநாடுகள் ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்சினைகள், உலக பொருளாதாரப் பிரச்சினைகளுக்கே முன்னுரிமை குடுக்கின்றன, இலங்கைக்கல்ல எனவும் கடுந்தொனியில் தெரிவித்தார்.
புலிகளின் தவறுகளைப்பற்றிக் குறிப்பிட்ட அவர், 2002-ல் யானையிறவு வெற்றியின் பின்னர் இராணுவ பலத்தின் உச்சியில் புலிகள் இருந்த போது சமாதானப் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், அன்று பலமாக இருந்த புலிகள் இராணுவத் தீர்வையே அதிகம் நம்பினர். இது சர்வதேச சமூகத்திலிருந்து புலிகளைத் தனிமைப்படுத்தியது. கடைசிக் கட்டத்தில் வன்னியின் மக்கள் பட்ட துன்பத்தைத் தடுத்திருக்கவும் பிரபாகரனால் இயலாது போய்விட்டது. இன்னொரு ஆயுதப் போர் மூளுமாயின் உலகநாடுகளின் ஆதரவு கிடைக்காது என்றும் அவர் கூறினார்.
இந்திய மாநிலங்களுக்கு இருப்பது போன்ற அதிகாரப் பகிர்வு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகலாம். உலக நாடுகளும் அதனைப் பரிசீலிக்கும். இலங்கையின் பிச்சினைக்கு வடக்கு-கிழக்கு தமிழர்களுக்கு சுயாட்சி என்பது சரியான தீர்வாக அமையலாம். இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களாலேயே வழி நடத்தப்பட வேண்டும், வெளிநாட்டில் வாழும் தமிழர்களால் அல்ல என்று கூறினார் சொல்கெய்ம்.
அரசாங்கத்துக்கும் த.தே.கூ. வுக்கும் இடையில் இடம் பெறும் பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லையென்றும், இங்கு போருக்குப் பின்னரான தமிழரின் குறைகளைக் களைவதில் ஒருவித முன்னேற்றமும் இல்லையென்றும் கூறிய சுரேஷ் பிரேமச்சந்திரன வடக்கு-கிழக்கில் பாரிய அளவில் படையினரை நிலைநிறுத்துவதே இடம் பெறுகின்றது. குறைப்பதான சமிக்கையும் இல்லை என்றார்.
தனது பேச்சை தொடர்ந்த அவர், அரசாங்கத்துக்கும் த.தே.கூ. வுக்கும் இடையிலான பேச்சு தேக்க நிலையை அடைந்துவிட்டது. பேச்சுக்கள் இரண்டு கட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை. முதலாவது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்த்தல். இரண்டாவது, அரசியல் தீர்வு குறித்துப் பேசுவது. ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை. சர்வதேசம்தான் உதவ வேண்டும் என்றார்.
0 comments :
Post a Comment