Thursday, May 24, 2012

விடுதலையாகியவுடனே பொன்சேகா தேசத்துரோக கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார்-விமல்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையான சரத்பொன்சேகா விடுதலை யானவுடனேயே தேசவிரோத கருத்துக்களை வெளியிட தொடங்கி விட்டதாகவும், சரத் பொன்சேகா வாயை திறந்தால் அது நாட்டிற்கு ஆபத்தாகவே முடியும் எனவும், அமைச்சர் விமல் வீரவன்ச சரத் பொன்சேக்கா மீது குற்றஞ்சாடடியுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், "விடுதலையாகி இரண்டு நாட்களிலேயே சரத்பொன்சேகா தேசத்துரோக கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துவிட்டாரென்றால் போக போக என்ன செய்வார் என்பதை நினைத்தாலே அச்சமாக உள்ளது. அத்துடன் அமெக்கா உட்பட மேற்குலக சக்திகள் பொன்சேகாவை இலங்கைக்கு எதிராக பயன்படுத்துகின்றன".

"சரத் பொன்சேகாவை யாருக்கும் பயந்து விடுதலை செய்யவில்லை. அவருக்கான தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளியில் வந்த உடனேயே நாட்டிற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுகின்றார். சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்காக மேற்குலகம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்குகின்றார். யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் தளபதிகளாக இருந்த அனைத்து முப்படைகளை சார்ந்தவர்களையும் சர்வதேச பொறிக்குள் சிக்க வைக்கவே பொன்சேகா முயற்சிக்கின்றார்".

எனவே, இதன் பின்னணியில் சர்வதேசம் உள்ளது என்பது புலப்படுகிறது. சரத் பொன்சேகாவிடம் நாங்கள் தயவுகூர்ந்து கேட்பது யாதெனில், நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய விடயங்களை பேசவேண்டாம் என்பதேயாகும். பொன்சேகாவின் பேச்சைக்கேட்டு அரசும் போர்க் குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கினால் அது முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் அப்போது களத்திலிருந்த கட்டளை தளபதிகளுக்குமே ஆபத்தாக அமையும்

அத்துடன் அமெரிக்க தூதரகத்திற்கு களத்திலிருந்த தளபதிகளின் பெயர்ப் பட்டியலை யார் வழங்கியது என்பதும் எமக்கு தெரியும். எனவே சரத் பொன்சேகாவின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் நாட்டிற்கு ஆபத்தானவை. சிலவேளை போர்க் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுமாயின் அம்மன்றில் சரத் பொன்சேகா யுத்தத்தின் இறுதி காலப்பகுதியில் தான் நாட்டில் இல்லை சீனாவில் இருந்ததாக கூறி தப்பித்து விடுவார். அதன் பின்னர் வரிசையாக ஜனாதிபதி முதல் சாதாரண இராணுவ அதிகாகள் வரை போர்க்குற்றச் சாட்டுகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என என விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com