Monday, May 14, 2012

கண்ணிவெடிக் கதை “டூப்” என்கிறார் விக்ரமபாகு

வடக்கில் பிரதேச சபைத் தேர்தல்களை நடத்த முடியாதிருப்பதற்குக் கண்ணி வெடிகளே காரணமென அரசாங்கம் கூறுவது கற்பனைக் கதையென கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். வடக்கில் பிரதேச சபைத் தேர்தல்களை நடத்த முடியுமானால் ஏன் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாதென அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கண்ணிவெடிக் கதை மக்களை ஏமாற்றுவதற்காக சோடிக்கப்பட்ட கற்பனைக் கதையாகுமென்று நவசமசமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர். நாளுக்கு நாள் மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.

சர்வதேச ரீதியிலும் அரசாங்கத்தின் மீதான நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. உள்நாட்டு மக்களின் அரச எதிர்ப்பலைகளைத் திசை திருப்பவும், அரசியல் பலத்துடன் மக்கள் ஆதரவுடன் அரசாங்கம் இருப்பதாகச் சர்வதேசத்திற்கு காட்டுவதற்கும் கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளைக் கலைத்து அரசாங்கம் அவசர தேர்தல்களை நடத்தவுள்ளது. 

வடபகுதி மக்களுக்கு இன்று ஜனநாயகம் சிவில் நிர்வாகம் தேவைப்படுகிறது. எனவே முதலில் வடக்கில்தான் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டுமென சோடிக்கப்பட்ட கதையைச் சொல்கிறது.

அப்படியானால் அங்கு பிரதேச சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டது எப்படி என்பதைச் சிந்திக்க வேண்டும். அரசாங்கத்தின் உண்மையான 'முகத்தை' புரிந்து கொண்டு தேர்தல்களில் எதிர்த்து வாக்களித்தால் தகுந்ததொரு அரசியல் பாடத்தை புகட்ட முடியும் என விக்கிரமபாகு தெரிவித்துள்ளார் _

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com