Tuesday, May 29, 2012

ஆலமரத்துக்கு அறிவுறுத்தல் வழங்கிய அறுகம்புல் – ஶ்ரீரங்காவின் சிறுபிள்ளைத்தனம்

நேற்றுமுன்தினம் சக்தி ரீவீ எனும் இலங்கையின் உள்ளுர்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மின்னல்' நிகழ்ச்சியைப் பார்த்த தமிழர்களெல்லாம் ஏதொ ஒரு வடிவத்தில் தமிழ் அரசியல்வாதிகள் தம் முகத்திரையை தாமே கிழித்துக்கொள்வர் என்பதில் நம்பிக்கை வைக்கத்தொடங்கியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா சம்பந்தன் அவர்களுக்கு இந்தச் சின்னஞ்சிறு பையனான ஶ்ரீரங்கா சக்தியின் சார்பில் அறிவுறுத்தல் வழங்கிய சம்பவத்தைப் பார்த்துத்தான் தமிழர்களெல்லாம் நமிட்டுச் சிரிப்புடன் உலாவருவதை பார்க்க முடிகின்றது.

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினசிங்கம் ஏதோ ஒரு கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை ஒளிபரப்பிய ஶ்ரீரங்கா அதை ஒளிபரப்ப உதவிய நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கும் ஒரு சாடல் சாடிவிட்டு, தனது திருவாய் மலர்ந்து கக்கிய அசிங்கங்களைக் கேட்டோர் ஆடுநனையுதென்று அழும் ஓநாய்களை ஞாபகம் ஊட்டிக்கொண்டனர்.

'இந்த உரையின் ஒரு பகுதியை எடிட் செய்து கொண்டுவருமாறு தயாரிப்பாளர் சசியை கேட்டுக்கொண்டால் அவர் தனக்கு வசதியாக 15 நிமிட உரையையே கொண்டுவந்துவிட்டார்' என்று உளறி, உள்வீட்டு இரகசியத்தையே உலகெல்லாம் போட்டுடைத்தார் ஶ்ரீரங்கா.(அந்த தயாரிப்பாளர் இப்போதும் பணியில் உள்ளாரா என்பதை விசாரித்து அறியவேண்டும். ஏனென்றால் தனக்குப் பிடிக்காத சக்தி ரீ வீ ஊழியர்களை அவர் வீட்டுக்கு அனுப்புவது இவ்வாறுதான்)

பின்னர் துரைரத்தினசிங்கம் பாராளுமன்ற உறுப்பினரை 'நான் நினைக்கிறேன் இவர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரென' எனவும் 'துரு'வாய் மலர்ந்தருளினார். தான் அங்கம் வகிக்கும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றொரு அங்கத்தவர் எந்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறாரெனத் தெரியாத ஶ்ரீரங்காவும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராம்?

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்பின்னர் தந்தை செல்வா அவர்கள் இரா சம்பந்தனிடம் நான் தெரியாமல் இதில் கையெழுத்துவிட்டேனோ எனச் சஞ்சலமடைந்ததாகவும் அந்த உரையில் துரைரத்தினசிங்கம் அவர்கள் கூறியிருந்தார். இதனை வைத்துக்கொண்டு ஶ்ரீரங்கா சம்பந்தனை மிகவும் கேவலமாக வர்ணித்தார். தந்தை செல்வா ஒரு தெய்வமென முதலில் கூறிய ஶ்ரீரங்கா, அவர் பாராளுமன்றத்துக்குப் போன காலத்தில் இந்தச் சம்பந்தன் அரசியலுக்கு வந்திருப்பாரோ தெரியாது என்ற புதுக் கண்டுபிடிப்பைக் கண்டு பிடித்தார். இப்படி நடக்காத ஒன்றை நடந்ததாக இரா சம்பந்தன் கூறிவிட்டார். அவர் ஒரு பச்சைப் பொய்யன் என்பதுபோன்ற அர்த்தத்தில் அவரது புரியாத தமிழில், எழுவாய் பயனிலை செயப்படுபொருள் அற்ற தமிழில், ஒருமை பன்மை அற்ற தமிழில், அஃறிணை உயர்திணை அற்ற தமிழில் ஏதோவெல்லாம் உளறக் கேட்ட தமிழரெல்லாம் தமது வாயைத் தவிர்ந்த வேறொரு உறுப்பால் சிரிக்கவேண்டியேற்பட்டது.

அதுமட்டுமன்றி தந்தை செல்வா கிரிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்ற 'புதிய' கண்டுபிடிப்பைச் சொன்ன ஶ்ரீரங்கா, ஆனாலும் அவரது இறுதிக் கிரியைகளின்போது அவரை எரித்துவிட்டார்கள். அவரை புதைத்துமட்டும் இருந்திருந்தால் அவரின் பிரேதத்தைத் 'தோண்டி' எடுத்துவந்து இப்படி நடந்ததா எனக் கேட்டிருப்போமென தனது பூர்வீகத் தொழிலையும் ஞாபகப்படுத்திக்கொண்டார். பிரேதத்தைத் தோண்டுவது தொடர்பாக அவர் திரும்பத் திரும்பப் பலதடவைகள் தொலைக்காட்சியில் தோண்டியதையும் கேட்கக் கூடியதாக இருந்தது.
இதற்கும் அப்பாலும் சென்று, இப்படி நடந்ததாக எந்தப் புத்தகத்திலாவது எழுதப்பட்டுள்ளதா? ஆதாரமுண்டா? எனக் கேள்வி கேட்ட ரங்கா, சம்பந்தர் அவர்கள் இவ்வாறு நடக்காததை நடந்ததாகக் கூறவேண்டாமென அறிவுறுத்துவதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

அதுமட்டுமன்றி சம்பந்தருக்கு இன்று சுமந்திரன் எம் பீ எப்படி எடுபிடியாக இருக்கிறாரோ அதுபோலவே துரைரத்தினசிங்கம் எம் பீ முந்தைய பாராளுமன்றத்தில் எடுபிடி வேலை செய்ததாகவும் சொன்னார். இரா சம்பந்தன் அவர்களது அரசியல் கொள்கைகள், செயற்பாடுகள் என்பவை தொடர்பாக எமக்கு முற்றிலும் முரண்பட்ட கருத்து உண்டானாலும் வரலாற்றில் தமிழரசுக்கட்சியினர் விட்ட தவறுகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளுகின்றபோது, அவற்றிலிருந்து விடுபட முயற்சிக்கின்றபோது அதைமக்கள் உணர சந்தர்ப்பம் உருவாகின்றபோது இந்த கன்றுக்குட்டி தமிழ் மக்களை தொடர்ந்தும் இனவாதத்தின்பால் தள்ள முயற்சித்து வருகின்றது.

புலிகளை தமிழ் மக்கள் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் புலிப்பாசிசத்தை எதிர்கின்றவர்கள் துரோகிகள் எனவும் மின்னல் ஊடாக தமிழ் இளசுகள் மனங்களில் நஞ்சை விதைத்த சிறிறங்கா தற்போது மஹிந்தவின் நிழலில் நின்று கொண்டு புலிகளை கொள்கைரீதியாகவும் : நேரடியாகவும் எதிர்த்து நின்றோருடன் இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தான் பெரும் பங்காற்றியுள்ளதாகவேறு கூறுவாராம்.

ஆனால் புலிகளை எதிர்த்த காரணத்திற்காக துரோகிகள் என பகிரங்கமாக ரங்காவினால் நாமம் சூடப்பட்டோர் சிறிறங்கா மஹிந்தவின் அரவணைப்பிலிருந்து விடுபடும் நாள்வரும்வரை காத்திருக்கின்றனர் தெருவிசர்நாயை கல்லால் அடித்து சாகடிப்பதுபோல் அடித்து பழிதீர்ப்பதற்காக.

மேலும் செல்வநாயகத்தை தமிழ் மக்களின் கடவுள் என்று குறிப்பிடும் றங்கா இதேபோக்கில் போனால் புலிகளின் தலைவர் பிரபாகரன் வவுனியாவிற்கும் மன்னாருக்கும் தமிழ் அரசாங்க அதிபர்களை மாத்திரமே கேட்டார் என்றும் கூறிவிடுவார்களாம் எனவும் பிரபாகரனையும் செல்வநாயகத்தை கொச்சைப்படுத்தியதுபோல் கொச்சப்படுத்தி விடுவார்களாம் எனவும் அச்சம் கொள்கின்றார்.

விரும்பியோ விரும்பாமலோ செல்வநாயகத்தின் சில செயற்பாடுகளை ஏற்றுக்கொண்டாலும் பிரபாகரனிடம் மானிடம் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் என்ன இருந்தது. பிரபாகரன் மன்னார் வவுனியாவிற்கு தமிழ் அரச அதிபர்களையாவது தாருங்கள் என்று கேட்டிருந்தால்கூட ஏற்றிருக்கலாம். ஆனால் பிரபாகரன் இலங்கையில் மாறிமாறி ஆட்சிப்பீடங்கள் ஏறிய அரசுகளிடம் கேட்டது யாவும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக புலிகளை இலங்கை அரசு அங்கீகரிக்கவேண்டும் , ஏனைய தமிழ் கட்சிகளை தடை செய்யவேண்டும், சுனாமி பணத்தை புலிகளிடம் தரவேண்டும் என்பனவை போன்றனவே.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com