தெரிவுக் குழுவில் நிபந்தனையுடன் பங்கேற்க கூட்டமைப்பு தயாராம்.
தமிழ் மக்கள் கேட்காத தமிழீழத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கேட்காதாம்.
இலங்கை அரசின் தெரிவுக் குழுவில் நிபந்தனையின்பேரில் பங்கேற்க கூட்டமைப்பு தயாராகவே உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்துவதற்கு கூட்டமைப்பு எப்போதும் இதயசுத்தியுடன் செயற்படுவதை இதன்மூலம் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்த முடியுமென நேற்று நல்லூரில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், ஜனநாயக அடிப்படையில் அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இளங் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் மூலம் தீர்வு காண்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்பதை சர்வதேசத்திற்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம். ஜனநாயக நாடுகள்தான் எமக்கு ஆதரவாக இருக்கின்றன.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு நாங்கள் செல்ல வேண்டுமாயின் வெறும் தாளுடன் செல்ல முடியாது. எனவேதான் நிபந்தனையுடன் செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பும் இடம்பெறுவது தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென நடத்தப்பட்ட கூட்டம், முடிவேதும் எடுக்கப்படாத நிலையில் முடிவடைந்திருந்தது. இந்த நிலையில்தான் சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பு எடுக்கவுள்ள நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது
"தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்குத் தீர்வாகத் தமிழீழம்தான் வேண்டும் என்று கேட்கவில்லை. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழீழம் கேட்காது'' என்றும் சுமந்திரன் இக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில் “தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள மறுத்தால், நாளை நிலைமை மாறும். சர்வதேசம் எமக்கான தீர்வை பெற்றுத் தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எமக்கு சர்வதேச பலம் கிடைத்திருக்கின்றது என்பதை ஜெனீவா தீர்மானம் உறுதிப்படுத்தியிருக்கிறது.” என்றார்.
“நாங்கள் சுயநிர்ணய உரித்துடைய மக்கள் என்பதையும் தேசிய இனம் என்பதையும் இன்று உலகம் உணர்ந்துள்ளது. வடக்கு, கிழக்கில் சுயாட்சியை ஏற்படுத்துவதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு முக்கியமாகத் தேவை. சர்வதேசத்திற்கு எமது சுயாட்சியைப் பற்றிய நியாயப்பாடுகள் தெளிவாகத் தெரியும். சர்வதேச தேசிய இனத்தினுடைய நிலப்பரப்பில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசு முயல்கிறது. இது தடுக்கப்பட வேண்டியதொன்று.” என்றும் சுமந்திரன் கூறினார்.
“தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்குத் தீர்வாகத் தமிழீழம் தான் வேண்டும் என்று கேட்கவில்லை. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழீழம் கேட்காது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்த நாடாளுமன்ற விஞ்ஞாபனத்தில் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. இருந்தும் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து ஆணை வழங்கியுள்ளனர்.'' என்றார் சுமந்திரன்.
0 comments :
Post a Comment