Sunday, April 1, 2012

மலையக அரசியல்வாதிகளுக்கு ஒரு பகிரங்க கடிதம்… மலைநாடான்

எங்கள் வயிற்றிலடித்து வயிறு வளர்க்கும் தலைவர் பெருமக்களே…! உங்களுடன் ஒரு நிமிடம்.

கடந்த சில நாட்களாக மிகவும் மோசமான முறையில், மலையக அரசியல்வாதிகளான நீங்கள் பகிரங்கமாகவும், மிகக் கீழ்த்தரமாகவும் ஒருவரைப் பற்றி ஒருவர் குறைசொல்லிக் கொண்டு வருகிறீர்கள். இதை இந்த நாட்டு மக்கள் தொடங்கி அரசாங்கம் வரை அத்தனை பேரும் அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் நீங்கள், கூறும் கருத்துக்களையும், குற்றச்சாட்டுக்களையும் பார்த்து மக்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

ஒருபக்கம் திகாம்பரத்துக்கு அழுகிய முட்டையால் அடி, அதை செய்த செந்தில் தொண்டமானுக்கு திகா கொடுத்த பதிலடி, திகாவைப்பற்றியும், அவரது கேவலமான நடத்தையை பற்றியும் இ.தொ.கா தொலைதொடர்பாடல் ஊடாக வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள் இவையெல்லாம் எல்லோரையும் அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் மக்கள் பிரதிநிதிகளா? இல்லை மக்களின் எதிரிகளா…?

வடக்கு, கிழக்கை தொடர்ந்து தமிழ் மக்கள் செரிந்து வாழும் அடுத்த இடமாக இந்த மலையகம்தான் விளங்குகின்றது. என் மக்கள் பல வழிகளில் பின் தங்கியிருக்கின்றனர். இந்த சமூகத்தின் பிரதிநிதிகள் நீங்கள் எங்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் தனிப்பட்ட தன்மானத்தையாவது காப்பாற்றிக் கொள்ளலாம் அல்லவா…? உங்களுக்கு இருக்கும் சுயநலம். பேராசை, பதவியாசை எல்லாவற்றையும் நீங்களே படம் பிடித்து மக்களுக்கு காட்டுகிறீர்கள்.

நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நாம் இந்நேரத்தில் ஞாபகப்படுத்துகின்றோம்.
திகாம்பரம் அவர்கள் மலையகத்தின் அனைத்து தோட்டங்களிலும் அடிப்படை தேவைகள் உட்பட கல்வி முதல் சுகாதாரம் வரை அனைத்திலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன் என்று தன் உயிர் நண்பருடன் சேர்ந்து தேர்தலில் நின்று ஓட்டு வாங்கினார். இப்போது அவருடன் ஓட்டு கேட்ட நண்பரும் இல்லை. கொடுத்த வாக்குறுதிகளின் நினைவும் அவருக்கு இல்லை.

திகாம்பரம் அவர்களே மத்திய மாகாணத்தில் உள்ள மக்களுக்கே உங்களால் ஒன்றும் ஆகவில்லை. பின்பு எதற்காக நீங்கள், ஊவா மாகாணத்தை போய் வளர்க்க பார்க்கிறீர்கள். உங்கள் வீடே குப்பை கூடமாயிருக்கின்றது. இதில் அடுத்தவன் வீட்டு குப்பையை அள்ள உங்களுக்கு என்ன அவசியம். இப்படி சிந்தனையே இல்லாமல் எதற்காக நீங்கள்; எல்லாம் அரசியலுக்கு வந்து மக்களின் கழுத்தறுக்கிறீர்கள்.

ஏற்கனவே உங்களைப் பற்றி ஏகப்பட்ட புகார்கள். “மலையக ரவுடி” என்று பெயர் வேறு. நீங்கள் அறியாத பாதாள உலக குழுக்களே இல்லையாமே. என்ன குற்றமானாலும் யாருக்கும் பயப்படாமல் செய்வீர்களாம். கொலை, கொள்ளை கூட உங்களுக்கு கைவந்த கலையாம். பெண்கள் விஷயத்தில் சொல்லவே வேணாம். உங்கள் ஆசைக்கு பாவம் எங்கள் மலையகப் பெண்கள் பலர் கூட பழியாகி இருக்கிறார்களாமே?

நீங்கள் செய்யாத சட்ட விரோதமான தொழில்களே இல்லையாம். அப்படியான சட்ட விரோத தொழிலில் ஏற்பட்ட பிரச்சனையால்தான் உங்கள் உறவினரும், நண்பருமான மாகாணசபை உறுப்பினர் உதயகுமார் உங்களை விட்டு விலகி இ.தொ.கா வுடன் இணைந்துக் கொண்டாராமே.

அதன் பிறகு உங்கள் அரசியல் வாழ்வு ஆட்டம் கண்டு விட்டது. உங்களுக்கு செலவு செய்யும் மத்திய வங்கி போல செயற்பட்டவர் அந்த உதயகுமார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் படியழந்தவர் அவர். அவரது பிரிவால் எல்லா பக்கமும் திகாம்பரத்துக்கு அடிமேல் அடி விழுந்தது. அந்த அடிதான் இ.தொ.கா வையும் அதன் அரசியல் அங்கத்தவர்களையும் போட்டு அன்றாடம் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் திகாம்பரம் வறுத்தெடுக்கிறார்.

ஐயா ஆறுமுகன் தொண்டமான் அவர்களே.

யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் உலகம் அவர்களை மதிக்கும். அந்த இடத்தை விட்டு இறங்கிவிட்டால் அவர்கள் நிழல் கூட அவர்களை மிதிக்கும். ஐயா சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் வளர்த்த இலங்கை தொழிலாளர் காங்கிரசா இது. எத்தனை போராட்டங்களால் கட்டியெழுப்பப்பட்ட கோட்டை இது. அநியாயமாக உங்களின் போதையாலும், அதிகார ஆணவத்தாலும் அதன் ஒவ்வொரு செங்கலாக விழுந்துக் கொண்டிருக்கிறதே!

அரசியல் உரிமைகளை பெற்றுக் கொடுத்து எங்களுக்கும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற கௌரவத்தை கொடுத்த ஐயா தொண்டமானின் வாரிசு என்று தயவுசெய்து வெளியே சொல்லி திரியாதீர்கள்.

நீங்களும் திகாவுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல. உதயகுமாரை வைத்தே திகாவுக்கு வெறுப்பேத்துகிறீர்கள். அவரைப் பற்றிய அத்தனை அந்தரங்கங்களையும் கேட்டு தெரிந்துக் கொண்டு சமயம் பார்த்து அழுகிய முட்டைகளை அடிக்க சொல்லுகிறீர்கள். அவர் நடத்தும் கூட்டங்களை தடுத்து நிறுத்துகிறீர்கள். ஒரு கூட்டத்துக்கு அவருக்கு நாற்காலி போடாமல் கூட பழிதீர்த்துக் கொள்கிறீர்கள். திடீரென்று அரசாங்கத்திலிருந்து விலகப் போவதாக அறிக்கை விடுகிறீர்கள். என்ன நடக்கிறது மலையக அரசியலில்.

நீங்கள் எல்லாம் அரசியல்வாதிகளா இல்லை எல்.கே.ஜி பசங்களா? இல்லை குழாயடியில் குடுமி சண்டை போடும் பெண்களா? பெரும்பான்மை மக்களும் அதன் தலைவர்களும் இந்த கோழி சண்டைகளை பார்த்து கைக்கொட்டி சிரிக்கிறார்கள். வெட்கமாக இல்லை உங்களுக்கு.
சொந்த செலவிலேயே சூனியம் வைத்துக்கொள்ளும் உங்களையெல்லாம் இந்த அரசாங்கமும் அதிபர் மகிந்த ராஜபக்ஸவும் வெளியே தூக்கி போட எவ்வளவு நேரமாகும்? அப்படியொன்று நடந்தால் மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு வட்டக்கொடைக்கும், ரம்பொடைக்கும் போக வேண்டியதுதான்.

அடுத்து ரங்கா அவர்களே

தொலைக்காட்சியில் மின்னல் நிகழ்ச்சியை மட்டும் முதலீடாக வைத்து மலையகத்தில் அரசியல் செய்ய வந்தவர் நீங்கள். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? நீங்கள் அந்த நிகழ்ச்சி செய்யும் போது உங்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் இந்த அரசியலுக்கு வந்தவுடன் மக்கள் மத்தியில் உங்களுக்கு இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

நீங்கள் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு இங்கு வந்து சேவை செய்வதற்கு உள்நோக்கம் என்ன? அதற்கு ஒரே காரணம் எங்கள் மக்கள். அவர்களிடம் இருக்கும் தெளிவில்லாத அரசியல் அறிவு. அதை பயன்படுத்திக் கொள்ளும் உங்களை போன்றவர்களின் புத்திசாலித்தனம். ஆனால் மலையக அரசியல்வாதிகளே, எங்களை எந்தநாளும் நீங்கள் ஏமாற்ற முடியாது. பொறுமையின் எல்லை கடந்து விட்டால் எங்களை தடுக்க அந்த கடவுளாலும் முடியாது. நீங்கள் அனைவரும் இருக்குமிடம் தெரியாமல் போய் விடுவீர்கள். சாராயத்துக்கும், காசுக்கும் எந்த நாளும் எல்லோரும் அடிமையாகி இருக்க மாட்டார்கள்.

இந்த விலைவாசியாலும், வாழ்க்கைச் செலவாலும் எங்களின் எத்தனை குடும்பங்கள் பட்டினியாக வாடும் நிலை உருவாகி விட்டது என்று உங்களுக்கு தெரியுமா? எத்தனை குடும்பத்து பிள்ளைகள் இந்த செலவினை தாங்கிக் கொள்ள முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கொழும்புக்கு வேலை தேடி போகின்றார்கள் தெரியுமா? மற்ற குடும்பங்களின் கஸ்டம் சொகுசு வாழ்க்கை வாழும் உங்களுக்கு எங்கே தெரியப் போகிறது? இன்டர் நெசனலில் பிள்ளைகளை போட்டு படிப்பிக்கும் உங்களுக்கு தோட்டப் பாடசாலையில் படிக்கும் எங்கள் பிள்ளைகளைப் பற்றி எப்படி நினைவிருக்கும்.

உங்கள் அனைவருக்கும் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். எல்லோருக்கும் வயிறு பொதுவானது, பசி பொதுவானது. மற்றவர்கள் வயிற்றிலடித்து அந்த சாப்பாட்டை சாப்பிடும் நீங்கள் எல்லாம் என்ன ஜென்மங்கள்?

எதிர்காலத்திலாவது இந்த மலையகம் நன்மை பெற வேண்டுமானால் முதலில் மலையகத்தில் உள்ள கட்சிகளை எல்லாம் இல்லாமலாக்க வேண்டும். ஒரு கட்சி, ஒரு தலைவன் என்ற நிலை வரவேண்டும். தலைவர்கள் 2ம் வகுப்பும், 5ம் வகுப்பும் வரை படித்திருக்காமல் பட்டதாரியாகவும், முக்கியமாக நல்ல சுகதேகியாகவும் சுயசிந்தனையுடன் புத்திசாலித்தனமாக செயலாற்றுபவராகவும் இருக்க வேண்டும்.

அரசாங்கத்துக்கு எதற்கெடுத்தாலும் கூடை கும்பிடு போடாமலும் மக்கள் பிரச்சனைகளை கொழும்பில் ஏசி அறையில் இருந்து ஆலோசிக்காமலும், கூட்டமொன்றை ஏற்பாடு செய்து விட்டு தன் காசை கொடுத்து பஸ்களை வாடகைக்கு எடுத்து ரோட்டில் போகிறவனையெல்லாம் அந்த வண்டியில் தூக்கி போட்டு “என் கூட்டத்துக்கு அலையலையாக மக்கள் வந்தார்கள் என்று பத்திரிக்கையில் படம் போட்டு காட்டாமலும் நேர்மையாக செயலாற்ற வேண்டும்.

காரிலும் ஜீப்பிலும் போகிறவர்களுக்கு நடக்க கூட முடியாத மக்களின் கஷ்டம் தெரிய வேண்டும். சும்மா மேடைக்காக நான் லயத்திலிருந்து வந்தவன்… ரொட்டி சாப்பிட்டு வளர்ந்தவன் என்றெல்லாம் வசனம் பேசாமல் அவர்கள் அன்றாடம் வாழ்க்கையில் எவ்வளவு கஸ்டப்படுகிறார்கள் என்பதை புரிந்து உதவிசெய்ய வேண்டும். ஊக்கமளிக்க வேண்டும்.
இப்படி செய்வதற்கு எத்தனையோ வேலை இருக்கிறது. அதையெல்லாம் விட்டு விட்டு வெட்டியாக பேப்பருக்கும், டீவிக்கும் வீராப்பு பேசிக்கொண்டு போஸ் கொடுத்து இப்படித்தான் நீங்கள் அரசியல் செய்ய வேண்டுமா? இந்த பிழைப்பு பிழைப்பதற்கு பதிலாக தேர்தல் காலம் எடுத்த ஓட்டு பிச்சையை மாற்றி இப்பவும் அதையே தொடரலாம் நீங்கள்.

மலைநாடான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com