Sunday, April 22, 2012

கெடுபிடிகள் இன்றி மக்களை நேரடியாக சந்தித்து உண்மைகளை அறிந்தோம். இந்திய எம்பிக்கள்

இலங்கை வந்து சென்றுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் நாட்டில் விசேட பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் இலங்கை அரசின் எந்த கெடுபிடிகளும் இன்றி தாம் மக்களை நேரடியாக சென்று பார்த்து அவர்களிடம் சகல உண்மையையும் கேட்டறிந்து கொண்டதாக தெரிவித்துள்ள அவர்கள் : இலங்கையின் நிலைமை கண்டு தாம் பிரமித்துப்போனதாகவும் கூறியுள்ளனர்.

இவர்களின் கருத்தினை மேற்கோள்காட்டி இந்தியாவின் பிரபல ஊடகம் ஒன்று கீழ்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கெடுபிடி இல்லாம சுதந்திரமா பார்வையிட்டோம்: காங்.எம்பிக்கள்

சென்னை: இலங்கை சென்றபோது ராஜபக்சே அரசின் எந்த ஒரு கெடுபிடியும் இல்லாமல் போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுதந்திரமாக பார்வையிட்டு கருத்தைக் கேட்டறிந்தோம் என்று நாடு திரும்பிய காங்கிரஸ் எம்.பிக்கள் கூறியுள்ளனர்.

தமிழகம் திரும்பிய காங்கிரஸ் எம்.பிக்கள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சுதர்சன நாச்சியப்பன்: இலங்கையில் நாங்கள் பார்வையிட விரும்பிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டோம். எங்களுடன் இலங்கை அரசு ராணுவத்தையோ, போலீசையோ அனுப்பவில்லை. ஒவ்வொரு எம்.பி.யும் ஒவ்வொரு பகுதியாக சென்று பார்த்தோம். 3 ஆண்டுகளுக்கு முன்னர் மாணிக்கம் பண்ணை (மானிக் பார்ம்) என்ற இடத்தில் 3 லட்சம் அகதிகள் ஒரே இடத்தில் முகாமில் வைக்கப்பட்டிருந்தனர். இன்று அங்கு 6 ஆயிரம் பேர் மட்டுமே இருக்கிறார்கள். மற்ற அனைவருமே அவர்களது சொந்த இடங்களுக்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட விதவைகள் அதிகம் உள்ளனர். போர்க் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் விடுதலைப்புலிகளை ராஜபக்சே அரசாங்கம் விடுவித்துவிட்டது. கொழும்பில் ராஜபக்சேவுடன் 45 நிமிடம் ஆலோசனை நடத்தினோம்.

தமிழ்நாட்டில் உள்ள அகதிகளின் நிலம், வீடுகளைக் கண்டுபிடித்து அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தினோம். இலங்கை சென்ற எம்.பிக்கள் அனைவரும் அறிக்கை தயாரித்து பிரதமரிடம் அறிக்கை அளிப்போம்.

என்.எஸ்.வி.சித்தன்: கண்ணிவெடிகள் அகற்றப்படாததால்தான் முகாம்களில் 6 ஆயிரம் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் 2 அல்லது 3 மாதத்தில் ராஜபக்சே அரசாங்கம் சொந்த வீடுகளுக்கு அனுப்பிவிடும்.

கிருஷ்ணசாமி: தமிழர்களிடம் ஒரு அச்சம் இருக்கிறது. தமிழர்கள் கோவிலுக்கு சென்றாலும், வீட்டில் சடங்கு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தாலும் ராணுவம் அவர்களிடம் விசாரணை நடத்துகிறது.. தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என்று ராஜபக்சேவிடம் கூறியிருக்கிறோம் என்றார் அவர்.

No comments:

Post a Comment