Thursday, April 19, 2012

சிரேஸ்ட ஒலிபரப்பாளர் நூரானியா ஹஸன் வாகன விபத்தில் மரணம்:அறுவர் படுகாயம்

இன்று காலை அநுராதபுரம் ரம்பாவெல - மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த சிரேஷ்ட அறிவிப்பாளரும், சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளருமான நூரானியா ஹஸன் அகால மரணமானார். அத்துடன் இந்த விபத்தில் மேலும் அறுவர் படுகாயமடைந்துள்ளனர்.

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதன் ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று இரவு யாழ். நோக்கி பயணமாகியுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் பயணித்த வாகனம் இன்று காலை 4.30 மணியளவில் மிஹிந்தலை - ரம்பாவ பகுதியில் லொறியொன்றுடன் மோதியுள்ளது.

இவ்விபத்தில் வானில் சென்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், சிரேஷ்ட ஒலிபரப்பாளர் நூரானியா ஹஸன் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்.

நூரானியா ஹசன் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் தந்தையாவார். அன்னாரது ஜனாஸா தற்போது அனுராதபுர வைத்தியசாலையில்வைக்கப்பட்டுள்ளது.

இன்று இஷா தொழுகையின் பின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்த விபத்தில் திரு. திருமதி யோகராஜன், ஜாபீர், சந்திரகாந்தன்,ஜெகன்மோகன் ஆகிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களுடன் விளம்பர பிரிவைச் சேர்ந்த சந்தன ஆகியோரே படுகாயமடைந்துள்ளன நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com