Thursday, April 12, 2012

உள்நாட்டு, வெளிநாட்டு உதவியுடன் கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது.

உள்நாட்டு, வெளிநாட்டு உதவியுடன் கண்ணிவெடி அகற்றும் பணிகளை துரிதப்படுத்த முடிந்ததாக, அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக்கல்லூரியில், கண்ணி வெடிகள் செயலிழக்கச் செய்யும் மத்திய நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இதனை தெரிவித்ததுடன் இது தொடர்பான இணையதளத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், 2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை, செய்கை நிலங்கள், நெடுஞ்சாலைகள், நீர்த்தேக்கங்கள், புகையிரத வீதிகளை அண்டிய பகுதிகளில் காணப்பட்ட பெருந்திரளான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் இப்பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், இடம்பெற்று வருகின்றன எனவும் தெரிவித்தார்.

அத்துடன் ஏ-32 வீதியின் மன்னாரிலிருந்து வெல்லங்குளம் வரையான 41 கிலோ மீட்டர் தூரத்தில், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன், ஓமந்தையிலிருந்து காங்கேசன்துறை வரையான புகையிரத வீதியின் 148 கிலோ மீட்டர் பிரதேசத்தில், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மடு தேவஸ்தானம் போன்ற சமய வழிபாட்டு தலங்களை அண்டிய பிரதேசங்களிலும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, மக்களின் சமய நடவடிக்கைகளுக்கென, திறந்து விடப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தின் கரையோர பகுதிகளிலும்,கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு பொருத்தமான பிரதேசமாக, மாற்றம் பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment