சுனாமி எச்சரிக்கையினால் மக்கள் அதிர்ச்சி
இந்தோனேஷியாவின் ஆச்சே பிராந்தியத்திற்கு அருகில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தை அடுத்து இலங்கை உட்பட பல நாடுகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, குறிப்பாக கடலோரப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு தேடி அவர்கள் வசித்த கடலோரக் கிராமங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றபடி உள்ளனர்.
நீர்கொழும்பு பிட்டிபனை, முன்னக்கர, தூவ, குடாபாடு, பலகத்துறை, கடற்கரைத் தெரு உட்பட பல கிராமங்களை சேர்ந்த மக்கள்
வாகனங்களிலும் நடைபயணமாகவும் செல்வதை காணக் கூடியதாக உள்ளது.இதன் காரணமாக நகர மத்தியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று பிற.பகல் 2.30 மணிக்கும் 2.45 மணிக்கும் இடையில் நீர்கொழும்பு நகரின் சில இடங்களில் பூமி அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இப்பூகம்பத்தினால் இலங்கையின் கிழக்கு. மேற்கு, தெற்கு பிரதேசங்களிலும் கட்டிடங்களின் நடுக்கத்தை உணர முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆச்சே மாநில தலைநகர் பண்டா ஆச்சேவிலிருந்து 495 கிலோமீற்றர் தூரத்தில் கடலின் அடியில் 33 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
>
0 comments :
Post a Comment