Friday, April 20, 2012

தம்புளையில் பள்ளிவாசலை அகற்றுமாறு ஆர்ப்பாட்டம் (படங்கள்)

தம்புள்ளை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் உட்பட சில கட்டிடங் களை அகற்றக்கோரி பிக்குமார் உட்பட மூவாயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்றிணைந்து நடத்திய ஆர்ப்பாட்ட மொன்று இன்று வெள்ளிக்கிழமை தம்புளை நகரில் இடம் பெற்றது.
ரங்கிரி தம்புள்ள விஹாரையின் பிரதான தேரர் உட்பட பல தேரர்களும் அவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தம்புள்ளை நகரம் புனித பூமியாக கருதப்படுவதால் பொளத்த மதத்துக்கு பாதகமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் அகற்றப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
தம்புள்ள ஓரு புனித பூமி என்பதன் காரணமாக இன்று வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாசலை அகற்ற வேண்டும் எனவும், அங்கு ஜும்ஆ தொழுகை இடம்பெறக் கூடாது என்றும் பௌத்த பிக்குகள் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தனர்.
இதேவேளை, பிக்குகள் உட்பட ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் முற்பகல் 11 மணியளவில் அங்கு திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் முஸ்லிம்களை பள்ளிவாசலில் இருந்து வெளியேறுமாறும் கோஷமெழுப்பிக் கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பள்ளிவாசலுக்கு சேதமேற்பட்டுள்ளது.
இச்சம்பவம் காரணமாக இன்று ஜூம்ஆ தொழுகை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நகரின் பாதுகாப்புக்காக பல நூற்றுக்கணக்காக இராணுவம் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
1965ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளிவாயில் 2002 ஆம் ஆண்டு முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தம்புள்ளையில் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டமைக்கு கண்டம் தெரிவித்த மேல் மாகாண சபை ஐ.தே.க உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம்கள் தமது உரிமைகளை பாதுகாத்துக்கொள்வதற்காக ஜெனீவாவுக்கு செல்ல வேண்டியிருக்கும் எனக் கூறியுள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்க ஆதரவுடனான ஆயுத குழுவொன்றினால் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் முன்னிலையில் இப்பள்ளிவாசல் தகர்க்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றம் சுமத்தியுள்ளார்.
முஸ்லிம் விவகார திணைக்களத்தில் மேற்படி பள்ளிவாசல் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், எனவே அது சட்டவிரோதமானது என எவரும் கூற முடியாது எனவும், கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
இப்பள்ளிவாசல் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதன் நிர்வாகிகளுக்கு எதிராக அதிகாரிகள் சட்டநடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் கபீர் ஹாசிம் எம்.பி. கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com