இலங்கையில் பனடோல் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு
கிளாசோஸ்மித் கிளைன் (ஜிஎஸ்கே) நிறுவனத்தின் மூலம் 217 மில்லியன் ரூபா முதலீட்டில் இலங்கையில் முதலாவது பனடோல் வில்லைகள் உற்பத்தி தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதி நவீன வசதிகள் கொண்டமைந்த இந்த தொழிற்சாலையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.
இரத்மலானை பகுதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையின் மூலம் பனடோல் வில்லைகள் உற்பத்தி செய்யப்படவுள்ளதுடன், இதர வில்லைகளை உற்பத்தி செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலையானது இதுவரையில் இலங்கையின் மருந்தாக்கல் துறையில் ஆகக்கூடிய முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள திட்டங்களில் ஒன்றாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தொழிற்சாலையானது, ஜிஎஸ்கே நிறுவனத்தின் சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக, அதியுயர் தொழில்நுட்ப வசதிகள் கொண்டமைந்துள்ளதுடன், விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களைக் கொண்டியங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த தொழிற்சாலையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பனடோல் வில்லைகளின் தரம், அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பனடோல் வில்லைகளின் தரத்துக்கு நிகரானதாக அமைந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment