வீட்டுக் காவலில் இருந்து தப்பி அமெரிக்காவிடம் தஞ்சம் கோரிய சீனாவின் மாற்றுச் சிந்தனையாளர்.
சீன அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த சீனாவின் முன்னணி மாற்றுச் சிந்தனையாளரான சென் குவாங்சென் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில அங்கிருந்து தப்பிச்சென்று சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தஞ்சம் கோரியுள்ளார்.
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த குவாங்சென், கண் பார்வையற்ற நிலையிலும், பலநூறு கிலோமீற்றர் தொலைவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் சரணடைந்துள்ளமை வியப்பூட்டும் செயல் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதுடன், அவருடைய நண்பரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ஹூ ஜியா இதனை உறுதி செய்துள்ளார்.
இதேவேளை சென் குவாங்சென்னின் பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை செலுத்தப் பட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். எனினும், இதுதொடர்பாக அமெரிக்கா இதுவரை அறிவித்தலையும் வெளியிடவில்லை.
மாற்று சிந்தனையாளர் சென், நான்கு ஆண்டு சிறைத்தண்டனையின் பின்னர் 2010ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார். எனினும், தொடர்ந்தும் இவரை சீன அதிகாரிகள் வீட்டுக் காவலில் வைத்திருந்ததாக மாற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
0 comments :
Post a Comment