கொலை அச்சுறுத்தல் ஹிருணிக்கா பொலிஸில் முறைப்பாடு: விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, தன்னை கொலை செய்தவற்கான ஒப்பந்தமொன்று செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தனக்கு நம்பகரமான தகவல் கிடைத்துள்ளதாகக் கூறி, பொலிஸ் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.
'தன்னை கொலை செய்வதற்கு ஒப்பந்தமொன்று செய்யப்பட்டுள்ளதாக தனக்கு நம்பகரமான தகவல் கிடைத்துள்ளதாகவும், இது முதலில் ஊடகங்களினால் வெளிப்படுத்தப்பட்டது எனவும், விசாரணைகள் மூலம் உண்மையில் இத்தகவல் நம்பகரமானதென்பதை தான் அறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் தான் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தனக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஹிருணிக்கா பிரேமச்சந்திர செய்துள்ள கொலை அச்சுறுத்தல் முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனுக்கு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் பணித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் பற்றி பிரதான நீதவானுக்கு பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் தெரியப்படுத்தினர்.
இதனை கருத்தில் எடுத்த பிரதான நீதவான், ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் கொலை அச்சுறுத்தல் முறைப்பாடு தொடர்பான விசாரணையை மேற்கொள்ளுமாறும், விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி சமர்ப்பிக்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு பணித்துள்ளார்.
0 comments :
Post a Comment