Saturday, April 7, 2012

பரஞ்சோதி குருநகரில் புத்தர் சிலை கட்டுகிறார்!...


யாழ் குருநகரில் படையினர் புத்தர் சிலை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

உண்மையில் குருநகரில் என்ன நடக்கின்றது என்று ஆராய்ந்து பார்த்தால் சங்கிலியன் சிலையை உடைத்து புத்தர் சிலை அமைக்க திட்டம் தீட்டியதாக
கடந்த தேர்தல் காலத்தில் கட்டிவிடப்பட்ட கட்டுக்கதைதான் ஞாபகத்திற்கு வந்தது.

சாவீடும், சாம்பல் மேடும், அச்சமும், பதட்டமும் இல்லாத ஒரு சூழலில் சிலருக்கு அரசியல் பிழைப்பு நடத்த முடியவில்லை என்ற பெருந்துயரம்.

அந்த துயரத்தோடு யாழ் மாநகரசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் திரு பரஞ்சோதி அவர்கள் வாடி வதங்கிக்கொண்டிருந்தார். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து கொண்டு யாழ் மாநகரசபையில் அடிக்கடி வாதச்சண்டைகளில் ஈடுபடும் அவருக்கு எப்படித்தான் இந்த திட்டம் பிறந்ததோ தெரியாது.

யாழ் குருநகர்ப்பக்கம் போயிருந்த பரஞ்சோதியின் பார்வைக்கு பட்டென்று பட்டது ஒரு காட்சி. அங்கு படையினர் தமது சோதனைச்சாவடி ஒன்றை திருத்தியமைத்துக் கொண்டிருந்தனர்.

என்னவோ தெரியாது, கொஞ்ச நாட்களாக இளமை பெயர்ந்து டெனிம் ஜீன்ஸ்அணியத் தொடங்கியிருக்கும் பரஞ்சோதிக்கு பொத்தென்று பிறந்த சிந்தனை மட்டும் அவரது கட்சி சார்ந்த அந்த பழைய பொய் புரட்டு புத்திதான்.

உடனடியாகவே ஊடகங்களை அழைத்து அங்கொரு தில்லு முல்லு நாடகத்தையே அவர் அரங்கேற்றி விட்டார்.

குருநகரில் புத்தர் சிலை என்று புரளியை கிளப்பிவிட்டு, ஊடகங்களுக்கு செய்தியும் கொடுத்து விட்டு தனது இடுப்பில் இருந்து அடிக்கடி வழுக்கி விழுந்து கொண்டிருக்கும்டெனிம் ஜீன்ஸையும் தூக்கிப்பிடித்துக்கொண்டு பரஞ்சோதி அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

செய்தி இப்போது பரவத்தொடங்கி விட்டது. புரட்டுச்செய்தியின் சூத்திரதாரி பரஞ்சோதிதான் என்பதை தெரிந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை ஆனத்தத்தில் துள்ளிக் குதித்து பரஞ்சோதியை தேடி சந்தண மாலையோடும் பொன்னாடையோடும் அலைந்து கொண்டிருக்கிறது.

ஆனால், பரஞ்சோதிக்கு நித்திரையும் இல்லை. நிம்மதியும் இல்லை. உந்த ஆமிக்காரன்கள் சும்மா உந்த சோதனைச்சாவடியை திருத்துற வேலையை விட்டுப்போட்டு உந்த இடத்திலை ஒரு புத்தர் சிலையை கட்டினால்தான் தனக்கு நித்திரையும் வரும் நிம்மதியும் பிறக்கும் என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்.

மொத்தத்தில் தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலை அமைப்பதற்கு படையினரை விடவும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குத்தான் அதிக அக்கறை.

அப்படி நடந்தால்தான் தமிழர் பிரதேசம் ஆக்கிரமிப்பு என்று ஆவேச அறிக்கை விட்டு
அடுத்த தேர்தலுக்கு தயாராகலாம் என்ற கோணங்கிப்புத்தி அவர்களுக்கு.

இப்ப செய்தி என்னவென்றால் குருநகரில் புத்தர் சிலை கட்டிக்கொண்டிருப்பது படையினர் அல்ல, பரஞ்சோதிதான்.

குப்பை கூடங்களையும், சாக்கடை நீரையும் அகற்றி மாநகரை சுத்தப்படுத்திக்கொண்டிருக்கும் யாழ் மாநகரசபை அடுத்த தேர்தலோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கழிவுகளையும் அகற்றித்தான் ஆகும்.

அப்போதுதான் முள்ளிவாய்க்கால் அள்ளிச்சென்ற ஆத்மாக்கள் சாந்தியடையும். கிடைத்த வாய்ப்பையெல்லாம் திட்டமிட்டே தவறவிட்டு, தம்மை கொல்லக்கொடுத்த கூட்டமைப்பின் கும்மாளம் முடிந்தது என்று....

நந்தி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com