கலைஞர் கருணாநிதி அவர்களது தமிழீழக் கனவுக் கருத்தின் வெளிப்பாடானது வெறுமனே சுய அரசியல் நலன் சார்ந்தது. இலங்கைப் பிரச்சினை தொடர்பில் தமிழ் மக்களின் காவலராக, மீட்பராக, தன்னைக் காட்டிக் கொள்ள தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள தொடர்ச்சியாக இது போன்ற பல வகைப்பட்ட சீறு வாணங்களை விட்டிருந்தார் என்பதையும் அவை எல்லாம் புஸ் வாணங்களானதையும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.
கலைஞர் மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கக்கூடிய பல அரசியல் வாதிகள் இலங்கைத் தமிழர் மீது அக்கறை கொண்டவர்களாக முண்டியடித்துக் கொண்டு தம்மைக் காட்டிக் கொள்ளும் வரலாறு தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. இவர்களது இந்த பாசாங்குத்தனமான போலித்தனமான கருத்துக்களும் நடவடிக்கைகளும் இலங்கை வாழ் தமிழர்களப் பொறுத்த வரையில் எல்லாக் காலத்திலும் எதிர் மறைவான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கின்றன என்பதுததான் உண்மையான சங்கதியாகும்.
இன மத மற்றும் சாதி அடிப்படையில் தமிழ் சமுதாயத்தினை கூறு போட்டு அவற்றிற் கிடையிலான முரணபாடுகளிலும் மோதல்களிலும் தமது அரசியல் இருப்புக்களை கட்டிக் கார்தது வரும் குறித்த தமிழக அரசியல் வாதிகள் எமது நாட்டில் இருக்கக்கூடிய இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை வளர்ப்பதிலும் கூர்மைப்படுத்துவதிலும் மிக மிக அக்கறையோடு செயல்பட்டு வருகின்றார்கள். கருணாநிதி அவர்களது தமிழீழக கனவுக் கருத்தும் இதே வகையானதே அன்றி வேறல்ல.
இவர்களது செயற்பாடுகள் அனைத்தும் தமது சுய அரசியல் நலன்களை உள்ளடக்கமாக கொண்டவையேயன்றி வேறொன்றுமல்ல.பயங்கரவாதத்தால் சிதைக்கப்பட்டு சீரழிக்கப்பட்ட எமது நாட்டின் மக்களது மெய்யான நிலைமைகளை கொஞ்சம் கூட அறிய முற்படாமல் உலக எசமானர்களது ஒத்தாசையுடன் பொய்யாகப் புனையப்பட்ட போர்க் குற்ற அறிக்கைகளையும் புலிப்பயங்கரவாதிகளின் பங்காளர்களான சனல்4 நிறுவனத்தால் கச்சிதமாகப் புனையப்பட்ட வீடியோ காட்சிகளையும் சாட்சிகளாக வைத்துக் கொண்டு எமது நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று துள்ளிக் குதிக்கின்றார்கள்.
இவர்கள் அமெரிக்காவின் கபடத்தனமான எண்ணங்களை சரி வரப் புரிந்து கொள்ளாமல் அமெரிக்காவின் இலங்கை மீதான தலையீடு ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்கும் பாரிய நாசத்தினை விளைவிக்கும் என்பதனை தெரிந்து கொண்டே இலங்கைக்கு எதிரான பிரோரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என இந்திய மத்திய அரசை விடாப்பிடியாக வலியுறுத்தியதன மூலம் இலங்கை மீது அந்நிய தலையீட்டை ஆமோதித்த வரலாற்று துரோகத்துக்கு துணை போனவர்கள்.
இந்த தமிழக அரசியல்வாதிகள் இவர்களது கருத்துக்களும் செயற்பாடுகளும் எந்தக் காலத்திலும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மைத்தனங்களையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.இனியும் ஏற்படுத்தப் போவதுமில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசியல் வாதிகள் அக்கறை கொண்டிருக்கின்றார்கள் என்ற எண்ணப்பாடானது முளுக்க முளுக்க தவறானதாகும் .
இலங்கைப் பிரச்சினை என்ற கொடியினை உயர்த்திக் கொண்டு காலத்துக்கு காலம் இவர்கள் வெளிப்படுத்தும் வீராப்பு அறிக்கைகளும் பேச்சுக்களும் முளுக்க முளுக்க தமது சுய அரசியல் நலன்களோடு சம்பந்தப்பட்டதேயன்றி வேறொன்றுமல்ல என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் அவசியமாகும்.
இவர்களது கபடத்தனமான செயற்பாடுகளும் கருத்துக்களும் இலங்கைத் தமிழர்களுக்கு மாத்திரமல்ல ஒட்டு மொத்த தேசத்துக்கும் தீங்கு விளைவிக்க கூடியவையாகும் என்பதை முன்னறிவிப்பு செய்கின்றோம்.
துறையூர் காசி.
No comments:
Post a Comment