Tuesday, April 10, 2012

இலங்கையின் பொருளாதாரம் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

இலங்கையின் பொருளாதாரம் 8.3 வீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் 2011 ஆம் ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறாக பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டிருக்குமானால் அது மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்று நீர்கொழும்ப மாநகர சபையின் ஐ.தே.க உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் குழுத்தலைவருமான கெலிஸ்டர் ஜயகொடி குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு மாநகர சபையின் இம்மாத அமர்வு இன்று(10)முற்பகல் மாநகர சபை கூட்ட மண்டபத்தில் மேஜர் அன்ரனி ஜயவீர தலைமையில் நடைபெற்ற போது , பிரேரணை ஒன்றை சமர்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.

மாநகர சபை உறுப்பினர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது.

அரசாங்கத்தின் பிழையான பொருளாதார முகாமைத்துவத்தின் காரணமாகவும் ,வீணான செலவுகள் காரணமாகவும், டொலருக்கெதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியை குறைத்துள்ளதனால் , நாளுக்குநாள் இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்து செல்லகின்ற நிலையில் , வரலாற்றில் என்றுமில்லாதவாறு எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. மின்சார கட்டணம் உயர்வடைந்துள்ளது . பொருட்களினதும் சேவைகளினதும் விலைகள் வானுயர உயர்ந்துள்ளதன் காரணமாக மக்கள் சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.

மக்கள் பொருளாதார ரீதியில் அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையி;ல் கட்சி பேதமின்றி என்னால் சமர்பிக்கப்பட்டுள்ள இப்பிரேரணைக்;குஎல்லா உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.

மேயர் அன்ரனி ஜயவீர

இப்பிரேரணை தொடர்பில் மேயர் அன்ரனி ஜயவீர உரையாற்றுகையில் கூறியதாவது ,

எரிபொருள் விலை அதிகரிப்பு ,மின்சார கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக நாட்டு மக்களிடையே பல்வேறு கருத்துக்கள் உள்ளன. எமது நாட்டில் எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டு எரிபொருள் பெறப்பட்டால் அதன் நன்மைகள் மக்களை சென்றடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

எரிபொருள் விலை மின்சார கட்டணம் என்பவை அதிகரிக்கப்பட்டாலும் தற்போது அரிசி மற்றும் காய்கறிகளின் விலைகள் குறைந்துள்ளதை யாரும் மறுக்கமுடியாது . ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் நாட்டில் விவசாய உற்பத்திகள் அதிகரித்திருப்பதன் காரணமாக அரிசி மற்றும் மரக்கறி வகைகளின் விலைகள் குறைந்துள்ளன.

ஒருபக்கம் சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் போது மறுபக்கம் சில பொருட்களின் விலைகள் குறைவடைகின்றன . தற்போது நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன . இதன்காரணமாக ஏற்படும் நன்மைகள் எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்கும்.விமர்சனங்கள் செய்யும்; போது நடுநிலையாக நின்று விமர்சனம் செய்ய வேண்டும் .

விலைவாசி அதிகரிப்பு காரணமாக யாரும் பட்டினியால் சாகவோ அல்லது தற்கொலை செய்யவோ இல்லை. 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து இரண்டு வருடங்களே ஆகின்றன. நாhட்டில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது என்றார்.

இப்பிரேரணை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளதால் இப்பிரேரணை தொடர்பில் வாக்களிப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஆளும் தரப்பு உறுப்பினர் கபில நந்தன சுலோச்சன குறிப்பிட்டார்.

பிரேரணை வாக்களிப்புக்கு விடப்பட்ட போது ஆளும்தரப்பு உறுப்பினர்கள் ஆறு பேர் பிரேரணைக்குஆதரவு தெரிவித்து வாக்களித்தனர் .ஆளும் தரப்பைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

No comments:

Post a Comment