Monday, April 2, 2012

கல்வி நிருவாக சேவையின் பதவிகளுக்கு பின் கதவால் 642 பேருக்கு நியமனம் வழங்க நடவடிக்கை

கல்வி நிருவாக சேவையின் மூன்றாம் வகுப்பிற்கான பதவிகளுக்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு 12 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் தோற்றிய போதும் அந்தப் பதவிகளில் பதில் கடமையாற்றிவரும் தகைமையற்ற 642 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க கல்வி அமைச்சு அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்பித்து அனுமதி கோரியுள்ளது.

அந்தப் பதவிகளில் பதில் கடமையாற்றிவரும் அதிபர்கள் , ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு நிரந்தர நியமனம் வழங்குவது, பரீட்சைக்கு தோற்றி தகைமை பெற்றோருக்கு பெரும் அநீதி இழைக்கும் விடயமாகும் என்று கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

கல்வி நிருவாக சேவை வகுப்பு மூன்;றிற்கு 1767 பதவி வெற்றிடங்கள் உள்ளன. அண்மையில் வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளின்படி 167 பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சு கேட்டுள்ளபடி பொருத்மற்றவர்கள் பதவிகளில் நிரந்தரமாக்கப்பட்டால் மேலும் பல வருடங்களுக்கு அந்தப் பதவிகளுக்கு வெற்றிடங்கள் ஏற்படாது என்று அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார் .

கல்வி நிருவாக சேவையின் பிரமாணங்களின்படி அந்த சேவையில் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த போட்டிப்பரீட்சைகளில் திறமை காட்டியவர்களே சேர்த்துக் கொள்ளப்பட முடியும் .

இந்நிலையில் அமைச்சரவை அனுமதியுடன் தகைமை அற்றவர்களை நியமிப்பது கல்வித்துறையை பாதாளத்திற்கு இட்டுச் செல்வதாகவே அமையும் என்று அந்த பரீட்சையில் சித்தியடைந்தோர் தெரிவித்துள்ளனர் .

இதேவேளை, பதில் கடமையாற்றும் பாடசாலை அதிபர்களை அதிபர் சேவையில் உள்வாங்குவதற்கு கல்வி அமைச்சர் அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment