Saturday, March 3, 2012

உருத்திர குமாரனின் நிகழ்சி நிரலுக்கு ஏற்பவே அமெரிக்கா செயற்படுகின்றது. வீரவன்ச

புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுக்கு தலைவராகச் செயற்பட்டுவரும் உருத்திரகுமாரனின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே, அமெரிக்கா செயற்பட்டு வருகின்றது என அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையில் புலிகளின் செயற்பாட்டை ஊக்குவிக்கவே அமெரிக்கா முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்கா புலிகளுக்கு சக்தியளித்து அதன் செயற்பாடுகளை இலங்கையில் ஊக்குவிக்க முயல்கிறது. அமெரிக்கா பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புலிகளின் தலைவராகச் செயற்பட்டுவரும் உருத்திரகுமாரனைக் கைது செய்யாமல் இருப்பதற்கான காரணமென்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

உருத்திரகுமாரனைக் கைது செய்யாது பாதுகாப்பதன் மூலம், புலிகளுக்கு சக்தியளித்து இலங்கையில் புலிகளின் செயற்பாட்டை மீண்டும் ஊக்குவிக்க முயல்கிறது என்பதும் தெளிவாகின்றது என குறிப்பிட்டுள்ளார். இறுதி யுத்தத்தின் போது புலிகள், மனிதக் கேடயமாக வைத்திருந்த மூன்று இலட்சம் தமிழ் மக்களை, படையினர் மீட்டு பராமரித்து, பாதுகாப்பு அளித்தனர்.

இவ்வாறான செயற்பாட்டினைச் செய்தமைக்கே அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் என்ற பிரேரணையை கொண்டுவந்துள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மேலும், லிபியா, சிரியா போன்று ஆசியாவுக்குள் ஏற்படுத்துவதற்கு இலங்கையைக் கேந்திரமாகப் பாவிப்பதற்கே அமெரிக்கா முற்படுகிறது. இலங்கையில், மன்னார், திருகோணமலையிலுள்ள எண்ணெய் வளங்களை சூறையாடுவதே அமெரிக்காவின் பிரதான இலக்காகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் தீர்மானம் மேற்கொள்ளப் படாவிட்டாலும் ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடா விட்டாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை விசாரணைக்கு உட்படுத்தக்கூடிய மேலும் மூன்று வழிமுறைகள் சர்வதேசத்திடம் உள்ளன. எனவே, சர்வதேச விசாரணைகளில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கு இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களால் மாத்திரமே முடியும் என அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நாட்டின் அமைதியை சீரழிக்கும் வகையில் செயற்படும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் சூழ்ச்சிகளை கண்டித்து அடுத்த வாரத்தில் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு பேரணிகள் நடத்தப்பட உள்ளன. இதில் அனைத்து இன மக்களும் கட்சி பேத மின்றி கலந்து கொள்ள வேண்டும். உள் நாட்டில் இருந்து கொண்டு நாட்டிற்கு எதிராக பிரசாரங்களை மேற்கொள்ளும் துரோகிகளின் பேச்சுக்களுக்கு மக்கள் ஏமாந்து விடக்கூடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பத்தரல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா.

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக் கூடிய தீர்மானங்களை அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என்பதற்காக நாட்டின் முன்னுள்ள பாரிய ஆபத்தை குறைத்து மதிப்பிட முடியாது.

ஏனெனில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படக் கூடிய சந்தர்ப்பங்களில் இரண்டு மட்டுமே ஜெனீவா தீர்மானம் ரோம் பிரகடனம் ஆகும். 1998 ஆம் ஆண்டில் சந்திகா பண்டார நாயக்கவினால் சர்வதேசத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பிரகாரம் இலங்கையை விசாரிக்கக் கூடிய மேலதிகமாக மூன்று சந்தர்ப்பங்கள் உள்ளன.

எனவே, நாட்டு மக்களால் மாத்திரமே சர்வதேசத்திடமிருந்து இலங்கையை பாதுகாக்க முடியும். புலிகளை தோல்வியடையச் செய்தமையால் சர்வதேச சூ10ழ்ச்சிக்காரர்களுடன் இணைந்து கொண்டு உள்நாட்டில் இருக்கும் அரச சார்பற்ற நிறுவனத்தினர் பல அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்பினர் என பலரும் நாட்டிற்கு எதிரான துரோகத்தனங்களில் இறங்கியுள்ளனர்.

புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளரான ருத்திரகுமாருக்கு பாதுகாப்பை கொடுத்துக் கொண்டு மனித உரிமைகள் பற்றி அமெரிக்கா பேசுகின்றமை வேடிக்கையாக உள்ளது. பாகிஸ்தானுக்குள் ஊடுருவி ஒஸாமா பின்லேடனை அமெரிக்கா கொலை செய்தது சரி என்றால் பயங்கரவாதிகளான புலிகளையும் இலங்கை ஒழித்தது சரியாகும்.

போலிக் காரணங்களை சுட்டிக்காட்டி இலங்கையை சிறையிட வரும் அமெரிக்க தலைமையிலான குழுவிற்கு பதிலடி கொடுக்க இந்த நாட்டு மக்கள் தயாராக வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைகளுக்கு இராணுவத்தையோ அரசாங்கத்தையோ உட்படுத்த இடமளிக்கக்கூடாது என விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com