மறைந்தாலும் மறையாத மதுரக்குரல் ராஜேஸ்வரி சண்முகம் - கலாபூசணம் புன்னியாமீன்
“ ஈராயிரமாண்டு இலக்கிய வரலாறு கொண்ட நம் தமிழ் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் எப்படியெல்லாம் புதிய நரம்புகளுக்கு ரத்தம் பாய்சுகின்றதென்பதைத் திளைத்துத் திளைத்து - சுவைத்துச் சுவைத்து - மகிழ்ந்து மகிழ்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து புல்லரிக்கும் உச்சரிப்பில் நீங்கள் சொல்லெடுத்துச் சொன்னபோது நாம் மீண்டும் ஒரு கல்லூரி மாணவனாய்க் கற்கத் தொடங்கினேன். எந்திர உலகத்திற்குத் தமிழைக் கொண்டு சேர்த்த மந்திரநிகழ்ச்சி உங்கள் பொதிகைத் தென்றல். காலங் காலமாய்த் தமிழ்க்காத்த கவிஞர் பரம்பரையின் கடைக்குட்டி என்ற முறையில் உங்களுக்கு நான் நாத்தழுதழுக்க நன்றிசொல்கின்றேன்.
வீசும் திசைகளை வைத்தே காற்றுக்குப் பெயரிட்டான் தமிழன்
வடக்கே இருந்து வருவது வாடைக்காற்று.
மேற்கே இருந்து வருவது கோடைக்காற்று
கிழக்கே இருந்து வருவது கொண்டல்காற்று
தெற்கே இருந்து வருவது தென்றல் காற்று
எங்களுக்குத் தெற்கேயிருந்து வீசுகின்ற நீங்கள் தென்றலாகத் தான் இருக்க முடியும்! இது அர்த்தமுள்ள தென்றல், ஆனந்தத் தென்றல். பருவம் கடந்துவீசும் பைந்தமிழ் தென்றல்...'' கவிஞர் வைரமுத்து இராஜேஸ்வரி சண்முகமவர்களுக்கு சென்னையிலிருந்து அனுப்பியிருந்த மடலின் சில வாசகங்கள் அவை.
இவைமட்டுமல்ல கவிஞர் வாலி, ஏ.வீ.எ. சரவணன், எஸ். ஏ. சந்திரசேகரன், எஸ்.பி. முத்துராமன், இசையமைப்பாளர் அரவிந், முத்துலிங்கம், பழனிபாரதி, அறிவுமதி, அறிஞர்களான கலாநிதி கைலாசபதி, கலாநிதி சிவதம்பி, டாக்டர் நந்தி, வி.வி. வைரமுத்து, கலையரசு சொர்ணலிங்கம், எஸ். டி. சிவநாயகம்... இவர்கள் போல இன்னும் நூற்றுக்கணக்கான கலைஞர்கள், அறிவாளர்களின் புகழ் மாலைகள் ஏராளம். இலட்சக்கணக்கான, மில்லியன் கணக்கான தமிழ் பேசும் உலக நேயர் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுக்கொண்ட மதுரக்குரல் ராஜேஸ்வரி தமிழ் வானொலி வரலாற்றில் காலத்தால் அழிக்க முடியாத ஒரு சகாப்த்தித்தின் உரிமையாளி.
மதுரக்குரல் இராஜேஸ்வரி சண்முகத்தைப் பற்றி எழுதுவதானால்... ஒரு புத்தகமல்ல பல புத்தகங்களே எழுதலாம். இருப்பினும் ஒருசில தகவல்களை மட்டும் இங்கே தர விளைகின்றேன்.
அம்மா அண்ணாமலையம்மாள், அப்பா- பிச்சாண்டிபிள்ளை ஆகியோரின் மூத்த மகளாக 1938.03.16ம் திகதி கொழும்பில் விவேகானந்த மேட்டில்; பிறந்த இவர் இரண்டு சகோதரர்கள் இரண்டு சகோதரிகளுடன் கூடப்பிறந்தவராவார். ஸ்ரீகதிரேசன் வீதி, புனித மரியாள் வித்தியாலயத்தில் ஆங்கிலமொழி மூலம் கல்விகற்றுப் பிறகு நெல் வீதி அரசினர் மத்திய மகா வித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.
படிக்கும் போது நடித்த “கண்ணகி" நாடகத்தை பார்த்த வானொலி நாடகத்தயாரிப்பாளர் “சானா" இவரை வானொலி நாடகங்களில் நடிக்க அழைத்தார். தனது 14வது வயதிலே 1952இல் வானொலிக் கலைஞராக அறிமுகமான இவர் நடித்த வானொலி நாடகம் என்.எஸ்.எம். ராமையா எழுதிய 'விடிவெள்ளி’. ஆமாம் அன்று விடிவெள்ளியாகவே திகழ்ந்தார்.
நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்களில் மதுரக்குரல் ஒலித்த அதே நேரத்தில் மேடை நாடகங்களிலும் நடிப்புத்திறன் மிளிர்ந்தது. அவற்றுள் பிரபல்யம் பெற்ற இவருக்குப் புகழ் சேர்த்துத்தந்த சில நாடகங்களையாவது ஞாபகப்படுத்தல் வேண்டும். ஸ்புட்னிக் சுருட்டு, வாடகை வீடு, திரு. சி. சண்முகம் எழுதிய பல மேடைநாடகங்கள், ஹாரேராம் நரே கோபால், நெஞ்சில் நிறைந்தவள், லண்டன் கந்தையா, ஸ்ரீமான் கைலாசம், தேரோட்டி மகன், குந்திதேவி பாத்திரம் கண்ணகி, வீருத்தின் பரிசு. முருகையனின் - விடிவை நோக்கி... போன்றமேடைநாடகங்களில் பல்வேறு பாத்திரங்களில் முத்திரை பதித்துப் புகழ்சேர்த்தவர். சிலம்பின் ஒலி, வளவனின் பதியூர்ராணி...என, வானொலி நாடகங்களால் தனது குரல் வளத்துக்கு உரம் சேர்த்தவர். வானொலி நாடகத்திலே முதலில் குரல் பதித்து, நாடகத்துறையையும் ஒலிபரப்புத்துறையையும் தனித்துவமாக மிளிரச் செய்த பெருமை இராஜேஸ்வரி அவர்களுக்கு உண்டென்றால் அது மிகை அல்ல.
1952.12.26ம் திகதி முதல் வானொலிக்கலைஞராக கலைத் துறையில் பாதம்பதித்த இராஜேஸ்வரி 1969 இல் பகுதிநேர அறிவிப்பாளராகவும், 1971இல் மாதர், சிறுவர் பகுதித்தயாரிப்பாளராகவும், முதல் தரம் 1994இல் மீ.உயர் அறிவிப்பாளராகவும் படிப்படியாக உயர்ந்தார்.
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவர் திருவாளர் சண்முகம் நாடறிந்த ஒரு நல்ல, சிறந்த நாடகாசிரியர், இவர் எழுதிய வானொலித் தொடர்கள் ஏராளம், விளையாட்டுத்துறை விமர்சனம் செய்வதிலும் அவர் வல்லவர். அவர் எழுதிப்புகழ்பெற்ற வரனொலி நாடகங்கள் சில, துணிவிடு தூது, லண்டன் கந்தையா, புழுகர் பொன்னையா, ஊருக்குழைந்தவன், நெஞ்சில் நிறைந்தவள், இரவில் கேட்டகுரல் அதேபோல மேடையில் புகழ்பெற்றவை, ஸ்புட்னிக் சுருட்டு, ஸ்ரீமான் கைலாசம், வாடகைவீடு, நீதியின் நிழல், ஹரோராம், நரேகோபால், நெஞ்சில் நிறைந்தவை இப்படி இன்னும் பல... கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் அரச அதிகாரியாக இருந்து கலைபணி ஆற்றிய திரு. சண்முகம், இராஜேஸ்வரி அவர்களின் முன்னேற்றத்துக்குத் துணை நின்றவர்.
இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் - மூத்தவள் பெண். பெயர் வசந்தி சண்முகம் தற்போது திருமதி வசந்திகுமார் அன்னையைப் போலவே சிறுவயது முதல் வானொலியும், மேடையிலும் பங்களிப்பு வழங்கிய இவர் பட்டதாரியாகி இலங்கை வானொலியில் இசைப்பகுதியில் தயாரிப்பாளராக பணியாற்றினார். திருமணமுடித்து இரண்டு ஆண்மக்களோடு பாரதத்தில் வாழ்கின்றார். ஆண் மகன் இருவர். எஸ். சந்திரமோகன் பாடகர், புகைப்படக் கலைஞர், எஸ் சந்திரசேகரன் தனியார் வானொலியில் ஒலிபரப்புத் துறையில் பணியாற்றுகிறார்.
இராஜேஸ்வரி சண்முகம் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளோ பல. அவற்றுள் சில பின்வருமாறு, இசைச்சித்திரம், முத்துவிதானம், பூவும்பொட்டும், மங்கையர் மஞ்சரி, சிறுவர் நிகழ்ச்சிகள், பொதிகைத் தென்றல், வீட்டுக்கு வீடு, இசையும் கதையும், வானொலி மலர், ஒலிமஞ்சரி... என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
பேட்டி நிகழ்ச்சிகளை வானொலியில் நடத்தும்போது இவரின்; மதுரக்குரலாலும், மொழிவளத்தாலும் தமிழ் புதுக்கலை தட்டி விடும். தென்னகத்தில் புகழ்பூத்த எத்தனையோ கலைஞர்களை இவர் வானொலியூடாகப் பேட்டிகண்டுள்ளார். அவர்களுள் சிலர் வருமாறு, எஸ் பி. பாலசுப்பரமனியம், இளையராஜா, சங்கர் கணேஷ், கல்யாணிமேனன், எம்.எல். வசந்தகுமாரி, கே. ஜே; யேசுதாஸ், ஜமுனாராணி, கங்கை அமரன், கவிஞர் பூங்குயில், ஜிக்கி, மலேசியா வாசுதேவன், ரீ.எம். சௌந்தரராஜன், சூலமங்கலம் ராஜலஷ்மி, ஆர்.எஸ். மனோகர், எஸ் ஜானகி, வி.கே. ராமசாமி, எஸ்பி. சைலஜா, அசோகன், வாணி ஜெயராம், குட்டிபத்மின, எஸ் பி. முத்துராமன், எஸ்.வி. சேகர், கமலாஹஸன், மனோரமா, பி. சுசீலா, வைரமத்து, வாலி, ஸ்ரீகாந்த, ஜென்சி, ஜொலி ஏப்ரஹாம், சீர்காழி சிவசிதம்பரம், மகாகவிபாரதியின் பேத்தி சகுந்தலா…..
ஐம்பதாண்டு கலைப்பணியினூடாக இவர் பெற்ற கௌரவங்கள், பட்டங்கள், விருதுகள் ஏராளம் அவற்றுள் சில வருமாறு:
* 1994இல் சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருது.
போட்டியின்றி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுத் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
* 1995 இல் (ஜெயலலிதா விருது) டாக்டர் புரட்சித்தலைவி விருது.
* பிரான்ஸ் நாட்டுக்கு அழைக்கப்பட்ட இவர் பரிஸ் கலையமுதம் சார்பாக பரிஸ், டென்மார்க், சுவிஸ், நோர்வே, ஜெர்மனி, லண்டன் போன்ற இடங்களில் கௌரவமளிக்கப்பட்டார்
* காலாசார அமைச்சின் மூலம் முன்னால் அமைச்சர் செ. இராசதுரை அவர்களினால் மொழிவாளர் செல்வி பட்டமளிக்கப்பட்டது.
* சுவாமி விபுலாநந்தரின் நூற்றாண்டுப் பெருவிழாவினை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மேதகு ஜே. ஆர். ஜயவர்தனா அவர்களினால் வாகீசகலாபமணி பட்டமளிக்கப்பட்டது.
* அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களினால் 'தொடர்பியல் வித்தகர்' பட்டமளிக்கப்பட்டது.
* பேராசிரியர் டாக்டர் இரா. நாகு தமிழ்துறைத்தலைவர் - மாநிலக் கல்லூரி சென்னை பேராசிரியர் அருட்திரு. சி. மணிவண்ணன் தேர்வு ஆணையாளர் தூயவளனார் கல்லூரி திருச்சி ஆகிய தமிழறிஞர்கள் இயக்குனர் இளசை சுதந்திரம் அவர்களினால் எட்டயபுரம் தென்பொரி தமிழ்சங்கம், 'வானொலிக்குயில்' பட்டம் வழங்கி கௌரவித்தது.
* அம்பாறை மாவட்டத்து மருதமுனை, அட்டாளைச்சேனை, கல்முனை, சாய்ந்தமருது போன்ற இடங்களில் பாராட்டும் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டமை. சாய்நதமருது கலைக்குரல் 'வான்மகள்' விருது வழங்கி கௌரவித்தது.
* இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன பவளவிழாவில் 50வருட கால சேவை பாராட்டு.
* சிந்தனை வட்டம் 'நாளைய சந்ததியின் இன்றைய சக்தி' பேராதனை பல்கலைக்கழகத்தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.தில்லை நாதன், கலாநிதி துரை மனோகரன், கம்பவாரி ஜெயராஜா போன்றோர் முன்னிலையில் 'மதுரக்குரல்' பட்டம் வழங்கி கௌரவித்தமை.
பட்டங்கள் பல பெற்றாலும், பெருமைகள் பல சேர்ந்தாலும், பாராட்டுக்களை அள்ளிக் குவித்தாலும் - ஒரு சில கலைஞர்களைப் போல இவர் இறுதிவரை தடம் மாறிவிடவில்லை. அன்று போலவே மார்ச் 23, 2012 இல் மரணிக்கும் வரை குணவதியாகவே இருந்து வந்தார்.
ஆம் பல படிப்பினைகளை எமது இளைய தலைமுறைக்குத்தந்த இவர் மறைந்தாலும் இவரது மதுரக்குரல் நிச்சியமாக காலத்தால் அழியாது எம் இதயங்களில் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
0 comments :
Post a Comment