Sunday, March 4, 2012

இலங்கைக்கு சீனா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் - லியாங் குஹாங்லி!

இலங்கையின் சுதந்திரம் இறைமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் பிரயத்தனங்களுக்கு சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குமென அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லியாங் குஹாங்லி சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவை கடந்த வியாழக்கிழமை சந்தித்த சீன பாதுகாப்பு அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டதாக ஷிங்ஹுவா செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவுடன் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஒத்துழைப்புக்கள் தொடர்பில் அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையுடன் தொடர்ந்து நட்புறவை வலுவாக பேணுவதற்கும் பொருளாதார ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கும் சீனா எதிர்ப்பார்ப்பதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதற்கும் எண்ணியுள்ளதாக இதன்போது அவர் மேலும் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான 55 வருடகால இராஜதந்திர உறவுகளின் மூலம் சீனாவுமட் இலங்கையும் சிறந்த வெற்றிகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments:

Post a Comment