Friday, March 23, 2012

ஜெனீவா தீர்மானம் அரசாங்கத்திற்கு எதிரானதே - மனோ கணேசன்

ஜெனீவா தீர்மானம் அரசாங்கத்திற்கு எதிரானது. அதை இந்த நாட்டு மக்களுக்கு எதிரானது என திரித்து காட்டும் கபடத்தனமான முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேறிய தீர்மானம் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம் திட்ட வட்டமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிரானது ஆகும். அது இந்நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல. அதை இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எதிரான தீர்மானமாக காட்டி தமது குரூர பேரினவாத முகத்தை மூடி மறைக்க இந்த அரசாங்கம் முயல்கிறது. இந்த உண்மை மூளையுள்ளவர்களுக்கு விளங்க வேண்டும். இதை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் முட்டாள்களாகவோ அல்லது அரசுக்கு துதிபாடும் எடுபிடிகளாகவோ அல்லது இனவாதிகளாகவோ இருக்க வேண்டும்.

உங்கள் பொய்களை நம்ப நாம் இனியும் தயார் இல்லை என உலகம் கூறி விட்டது. திருந்துவதா அல்லது மேலும் படு குழியில் விழுந்து நாசமாவதா என்பதை அரசாங்கம் தான் தீர்மானிக்க வேண்டும்.

மனித உரிமை மற்றும் தேசிய இனப்பிரச்சினை ஆகிய இரண்டு முக்கிய விடயங்கள் தொடர்பிலும் இந்த அரசாங்கம் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைளையும் எடுக்கவில்லை என்பது இன்று உலகம் அறிந்த உண்மை ஆகிவிட்டது. அதற்கும் மேலாக புலிகளின் இராணுவ தோல்வியை தமிழ் பேசும் மக்களின் தோல்வியாக மட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.

இதனாலேயே தமிழர் பிரதேசங்களில் இன்னமும் இராணுவ நிர்வாகம் நடைபெறுகிறது. வடக்கு, கிழக்கில், தமிழர்களின் காணிகள் சூறையாடப்படுகின்றன. தமிழர்களின் காணிகள் மட்டும் அல்ல,முஸ்லிம் மக்களின் காணிகளும் சூறையாடப்படுகின்றன. முழு நாட்டையும் சிங்கள பௌத்த நாடாக மாற்றும் நோக்கமே இதுவாகும்.

இந்த நோக்கத்தை அடைவதற்காக பாரிய மனித உரிமை மீறல்களை அரசாங்கம் திட்டமிட்டு நிகழ்த்தியது. அரசாங்கத்தின் இந்த போக்குக்கு எதிராகவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உங்கள் பொய்களை நம்ப நாம் இனியும் தயார் இல்லை என உலகம் கூறி விட்டது. திருந்துவதா அல்லது மேலும் படுகுழியில் விழுந்து நாசமாவதா என்பதை அரசாங்கம் தான் தீர்மானிக்க வேண்டும்.

No comments:

Post a Comment