போலி கடனட்டை மூலமாக பல கோடி ரூபா பணத்தை மோசடியாக பெற்ற உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி சந்தன கலப்பதி தெரிவித்தார் .
இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நீர்கொழும்பு ஏத்துக்கால பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதோடு, ஒரு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் மற்றும் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் .
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 108 போலி கடனட்டைகள் , 60 ஆயிரம் யூரோக்கள் (90 இலட்சம் இலங்கை ரூபா) , 11 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா இலங்கைப் பணம் மற்றும் பல்வேறு நாடுகளினதும் பணம் என்பனவும் லெப்டொப் (மடிக்கணனி ) ஒன்றையும், எட்டு கையடக்கத் தொலைபேசிகளையும் , தகவல்களை பதிவு செய்யும் இலத்திரனியல் உபகரணம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நீர்கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி சந்தன கலப்பதியின் ஆலோசனையின் கீழ், நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவின் வழிகாட்டலின் படி , குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சுபாஷ் சந்தன பிரியதர்ஷன தலைமையிலான குழுவினர் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்ததுடன், பணத்தையும் பொருட்களையும் மீட்டுள்ளனர் . இது தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment