எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சியினர் எதிர்ப்பு நடவடிக்கை
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கும் அதன் காரணமாக மக்களின் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமைக்கும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இன்று முற்பகல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் .
எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த உறுப்பினர்கள் கழுத்தில் கறுப்புப்பட்டி அணிந்திருந்ததுடன், எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர் . அத்துடன் அவர்கள் கோசங்களையும் எழுப்பினர் .
ஆயினும் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் எதிர்கட்சியினரை சுலோக அட்டைகளுடன் சபைக்கு செல்லவிடவில்லை.
நீர்கொழும்பு மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு நடைபெற இருந்த வேளையில் அதற்கு முன்னதாகவே , எதிர்கட்சியினர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர் .
செய்தியாளர் - எம்.இஸட்.எஸ்.
0 comments :
Post a Comment