கொரியாவின் இராணுவ சூனியப் பிரதேசத்தில் ஒபாமா
வட கொரியா அண்மையில் அறிவித்த ராக்கெட் ஏவும் திட்டத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மத்தியில், இரண்டு கொரியாக்களையும் பிரிக்கும் (வடகொரிய-தென்கொரிய எல்லை) 'இராணுவ சூனியப் பகுதிக்கு' அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சென்றுள்ளார்.
அங்கு எல்லைக் கண்காணிப்புச் சாவடி ஒன்றில் அமெரிக்கத் துருப்பினரிடம் பேசிய ஒபாமா, அவர்களை 'சுதந்திர உலகின் எல்லையில் இருப்பவர்கள்' என்று வர்ணித்தார்.
வடகொரியா எதிர்வரும் ஏப்ரலில் ஏவத் திட்டமிட்டுள்ள ராக்கெட் ஏவுகணைப் பரீட்சார்த்தமொன்றுக்கான முன்னோடு நடவடிக்கையே என்று அமெரிக்கா கூறிவருகிறது- ஆனால் தனது நாடு விண்வெளியில் செய்மதி ஒன்றைச் சேர்ப்பிக்கவே முயற்சிக்கிறது என்று வடகொரியா வாதிடுகிறது.
தென்கொரிய தலைநகர் சோல் இல் நடக்கும் அணுப்பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா வரும் திங்களன்று கலந்துகொள்ளவுள்ளார்.
50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த இரண்டு-நாள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அணு ஆயுதங்கள் குற்றக்கும்பல்களுக்கும் ஆயுதக்குழுக்களுக்கும் சென்றடையாதவாறு தவிர்ப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்.
வடகொரியாவின் அணுத் திட்ட விவகாரம் இந்த மாநாட்டின் அதிகாரபூர்வ நிகழ்ச்சி நிரலில் இல்லை. அத்தோடு வடகொரியாவும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை.
ஆனால் ரஷ்யா மற்றும் சீனத் தலைவர்களுடன் நடத்தும் இருதரப்பு பேச்சுக்களின் போது, அதிபர் ஒபாமா வடகொரியா மற்றும் இரானின் அணுத்திட்டங்கள் தொடர்பில் விவாதிப்பார் என்று அமெரிக்கத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
ஒபாமா முதற்தடவையாக சென்றுள்ள, 4 கிலோமீட்டர் அகலமான இந்த இராணுவ சூனியப் பிரதேசம் உலகில் கடுமையாகக் கண்காணிக்கப்படும் எல்லைப் பகுதிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment