வானொலி குயில் இராஜேஸ்வரியின் பூதவுடல், அக்கினியுடன் சங்கமம்
ஈராயிரமாண்டு இலக்கிய வரலாறு கொண்ட நம் தமிழ் உலகில் இந்த 21 ஆம் நூற்றாண்டில் தேனுக்கு நிகரான தனது உச்சரிப்பில் வார்த்தைகளை வடிவமைத்து வெளியிட்ட பெருமை, திருமதி இராஜேஸ்வரி சண்முகத்திற்கு சொந்தமானது. 1938 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு விவோகனந்த மேட்டில் இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதாரிகளுடன் கூட பிறந்தவராவார். ஸ்ரீ கதிரேசன் வீதி, புனித மரியாள் வித்தியாலயத்தில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்று, பின்னர் நெல் வீதி அரசினர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தனது கல்வியை தொடர்ந்தார். படிக்கும்போது, நடித்த கண்ணகி நாடகத்தை பார்த்த வானொலி நாடக தயாரிப்பாளர் சானா இவரை வானொலி நாடகங்கள் நடிக்க அழைத்தார். தனது 14 வயதிலேயே 1952 ஆம் ஆண்டு வானொலி கலைஞராக அறிமுகமான இராஜேஸ்வரி சண்முகம், நடித்த வானொலி நாடகம் என்.எஸ்.எம். இராமையா எழுதிய விடிவெள்ளி எனும் நாடகமாகும். நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்களில் மதுர குரல் ஒலித்த அதேநேரம், மேடை நாடகங்களிலும் நடிப்புத்திறன் மிளிர்ந்தது. அவற்றுள் பிரபல்யம் பெற்ற இவருக்கு, புகழ் சேர்த்து தந்த ஸ்பொட்னிக் சுருட்டு, வாடகை வீடு, பாரேராம் நரேகோபால், நெஞ்சில் நிறைந்தவள், லண்டன் கந்தையாக, ஸ்ரீமான் கைலாசம், தேரோட்டி மகன், குந்திதேவி ஆகிய நாடகங்கள், இவருக்கு புகழ் சேர்த்த வானொலி நாடகங்களாகும்.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் தமது பேரப்பிள்ளைகளை பார்க்க சென்றிருந்த போது, திடீரென நோய்வாய்ப்பட்ட திருமதி இராஜேஸ்வரி சண்முகம், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில், தனது 72வது வயதில் காலமானார்.
அவரது பூதவுடல் கொழும்புக்கு எடுத்துவரப்பட்டு, இன்று காலை 09.30 முதல் 10.45 இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க, தமிழ்ச்சேவை பணிப்பாளர் கணபதிபிள்ளை, சிரேஷ்ட அறிவிப்பாளர்களான பி,எச். அப்துல் ஹமீத், எம்.எச். விஸ்வநாதன், முன்னாள் தமிழ் சேவை பணிப்பாளர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் உட்பட மறைந்த இராஜேஸ்வரின் சண்முகத்தின் புதல்வர் உட்பட அறிவிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் என, இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன ஊழியர்களும், இதில் கலந்து கொண்டனர். முற்பகல் 10.45 முதல் பிற்பகல் 04.30 வரை, கொழும்பு கலாபவனத்தில் பூதவுடல், அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன், புரவலர் ஹாஷிம் உமர் உட்பட ஏராளமான கலைஞர்களும், அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இன்று மாலை பொரளை, கனத்தை இந்து மயானத்தில் பல்லாயிரக்கணக்கான வானொலி நேயர்கள், அபிமானிகள், அரசியல் தலைவர்கள் உட்பட ஏராளமானோரின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில், அன்னாரது பூதவுடல், அக்கினியுடன் சங்கமமாகியது.
வானொலிகள் மறைந்தாலும், வானொலி குயிலின் குரல் என்றும் மறையாது பல கோடிக்கணக்கான நேயர்களின் காதுகளில், என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
0 comments :
Post a Comment