Tuesday, March 27, 2012

துமிந்த சில்வா இருக்குமிடத்தை தெரியப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

பாராளுமன்ற உறுப்பனர் துமிந்த சில்வாவை கைது செய்ய முடியாமற் போயுள்ளமை தொடர்பாகவும், அவர் தற்போது தங்கியுள்ள இடம் தொடர்பாகவும் எதிர்வரும் வழக்கு விசாரணையின் போது தெரிவிக்க வேண்டுமென கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன டி அல்விஸ் இன்று பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத்த லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வரின் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை இதுவரை கைதுசெய்ய முடியவில்லை எனக் குறிப்பிட்ட பாரத்த லக்ஷ்மன் பிரேமசந்திரவின் உறவினர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி டிரந்த வலலியத்த , துமிந்த சில்வாவை கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணையை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

எனினும் அவ்வாறானதொரு உத்தரவினை பிறப்பிக்க முடியாதெனவும் , துமிந்த சில்வாவை கைதுசெய்ய முடியாதென பொலிஸார் கூறினால் மாத்திரமே அவ்வாறானதொரு பிடியாணையை பிறப்பிக்க முடியுமென கொழும்பு மேலதிக நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com