இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்படவிருக்கும் பிரேரணைக்கெதிரான இலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்பின் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கிவரும் இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பான நாம், இலங்கையின் அதிஉத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் எமது தாய் நாட்டை மீட்டுதந்து எங்கள் மூவினமும் நிம்மதியாக வாழ வழியமைத்துத் தந்த இராணுவத்தினருக்கும் எதிராக சில சர்வதேச சக்திகள் சதிகளை மேற்கொண்டு வருவதையும், தற்போதைய ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் எமது இலங்கை நாட்டுக்கு எதிராக பிரேரணைகள் கொண்டுவர முயற்சிப்பதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
30 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் இடம்பெற்றுவந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக அனைத்து இனங்களும் பலவிதமான பாதிப்புக்களுக்குட்பட்டிருந்தது. அந்தவிதத்தில் பாதிப்புக்களை அனுபவ ரீதியாக அதிகம் உணர்ந்த சமூகம் என்ற வகையில் முஸ்லிம்களாகிய நாம், எமது நாட்டிற்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் சூழ்ச்சிகளை முறியடிக்க எமது நாட்டிலுள்ள பல்லின சமூகத்துடன் கைகோர்த்து செயற்படவேண்டிய நிலை தற்பொழுது வந்துள்ளது. அன்றும், இன்றும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதத்திற்கு துணைபோனதில்லை. இனியும் துணைபோகக் போவதுமில்லை.
எந்த இனத்திற்கான விடுதலை வேண்டுமென்று எல்.ரி.ரி.ஈயினரினால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ, அதே தமிழ் இனம்தான் எல்.ரி.ரி.ஈனரால் அதிகம் பாதிக்கப்பட்ட சமூகம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இறுதியில் இந்த இலங்கை நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்க அனைத்து இனங்களின் ஆசியுடனும், அனைத்து இராணுவ வீரர்களின் அதீர தியாகத்தினாலும் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் மனிதாபிமான மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு இலங்கைக்கு உண்மையான சுதந்திரத்தை ஏற்படுத்தித் தந்தார்.
யுத்த வெற்றியின் பின்னர் பல்லின மக்களும் சுதந்திரமாக எந்தவித பயமும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். அத்துடன் பிரதேச இன வேறுபாடின்றி அதிகளவு அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இன்னும் சொற்ப காலத்தில் அபிவிருத்தியடைந்த நாட்டில் உள்ள ஒரு பிரஜை அனுபவிக்கும் அனைத்து வசதிகளையும் இலங்கைப் பிரஜைகள் அனைவரும் அனுபவிக்கக் கூடியதாக இருக்கும். அனைத்து அபிவிருத்திகளும் எமது ஜனாபதியின் முயற்சியின் பலனாக மட்டுமே இடம்பெறுகின்றது. இராணுவத்தினர் இன்று அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு நாடு அழகுபடுத்தபட்டு வருகின்றது.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சில உள்நாட்டு சுயநலவாதிகள் அமேரிக்கா போன்ற மேற்கு நாடுகளுடன் இணைந்து எமது தாய் நாட்டுக்கு எதிராகவும், எமது அதிமேதகு ஜனாதிபதிக்கெதிராகவும் சதிகளை மேற்கொள்வது எமக்கு ஒவ்வொருவருக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் சதியாகவே பார்க்க வேண்டும். அத்தோடு ஒவ்வொரு இலங்கை பிரஜையும் யுத்த காலத்தில் எப்படி எமது குடும்பங்கள் வாழ்ந்தது, இப்போது எப்படி நிம்மதியாக வாழ்கின்றது என்று மனதைத் தொட்டு எண்ணிப் பார்க்க வேண்டும்.
அதைவிட்டு புலம்பெயர்ந்த நாம் மட்டும் சுகமான வாழ்க்கை அனுபவித்தால் போதும், தாய் நாட்டிலுள்ளவர்கள் என்ன பாடுபட்டாலும் பரவாயில்லையென்று அந்நிய சக்திகளுக்கு சோரம் போவது மிகவும் முட்டாள்தனமானதும் தாய்நாட்டுக்கு செய்யும் துரோகமும் ஆகும்.
யுத்தத்தின் பின்னர் அனைத்து புலம்பெயர்ந்தோருக்கும் இலங்கையின் அபிவிருத்தியில் பங்கெடுக்குமாறு எமது ஜனாதிபதி அழைப்புவிடுத்திருந்தார். ஆனால் எமது நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்ய முடியாத நாம் நாட்டை விமர்சனம் செய்பவர்களுக்கு மட்டும் சோரம் போவதானது எந்த வகையில் நியாயமாகும். எங்களது பொருளாதாரத்தின் மூலம்; எமது நாட்டின் அபிவிருத்தியில் பங்கு கொள்வது என்பது மட்டும் நாம் செய்யும் பங்களிப்பாகமாட்டாது. எமது பொருளாதாரத்தை ஜனாதிபதி எதிர்பார்க்கவுமில்லை. மாறாக ஜனாதிபதி மேற்கொள்ளும் அபிவிருத்திப் பணிகளுக்கு ஆதரவளிப்பதானது எமது தாய்நாட்டின் அபிவிருத்தியில் பங்கெடுப்பதற்கு போதுமானது.
எல்.ரி.ரி.ஈயினரால் உள்நாட்டில் இருந்த அப்பாவித் தமிழ் மக்களிடமிருந்தும்;, வெளிநாட்டில் புலம்பெயர்ந்து கஷ்டப்பட்ட தமிழ் சகோதரர்களிடமும் பல பில்லியன் கணக்காண பணம் அறவிடப்பட்டது எதற்காக? நாட்டின் அபிவிருத்திக்காகவா??, தமிழ் மக்களின் அபிவிருத்திக்காகவா??? இல்லை. அப்பாவித் தமிழர்கள் அவர்களுக்கு கொடுத்த பணம் அவர்களின் பயங்கரவாதத்தை வளர்த்துக் கொள்ள மட்டுமே உதவியது. மாறாக எமது தமிழ் சொந்தங்களை நிம்மதியாக வாழவைக்கவல்ல என்பது கடந்த கால அனுபவம்.
இறுதி யுத்தத்தின்போது பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதைக் காரணமாகக் காட்டி எமது நாட்டுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் குற்றப் பிரேரணை கொண்டுவர முயற்சிப்பவர்கள், எத்தனை இலட்சம் பொதுமக்கள் யுத்தகளத்திலிருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்டனர் என்பதை எண்ணிப் பார்க்க மறந்து விட்டார்களா? இல்லை மறைத்துவிட்டார்களா??.
பல ஆயிரக்கணக்காக இராணுவத்தினர் யுத்தத்தின்போது இறந்தார்கள், இன்னும் பல ஆயிரம் இராணுவ வீரர்கள் ஊனமுற்று இருக்கிறார்கள். இவர்களுக்கும் இவர்கள் குடும்பத்தினருக்கும் எல்.ரி.ரி.ஈயினரால் மனித உரிமை மீறப்படவில்லையா?. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் எல்.ரி.ரி.ஈயினரின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல், எறிகணைத் தாக்குதலில் மற்றும் பல தாக்குதலில் கொல்லப்பட்டனரே! அது மட்டும் மனித உரிமை மீறலாக அமையாதா? குறிப்பாக சொல்லப் போனால் எல்.ரி.ரி.ஈயினரால் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாயல் படுகொலைகளுக்கு எதிராக இதே சர்வதேச சமூகத்தால் நடவடிக்கை எடுக்க முடியுமா?.
எது எப்படியாயினும், நடைபெற்றுவரும் துரித அபிவிருத்தியை தடைசெய்து, இலங்கைக்கு எதிராக குற்றப் பிரேரணைகளைக் கொண்டுவந்து, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா பாணியில் இலங்கைக்கெதிராக ஆயுத பலத்தைப் பிரயோகித்து நாட்டின் வளங்களைச் சூறையாடவே அமேரிக்காவும் அதன் கூட்டாளிகளும் முனைகின்றனர். எமது ஜனாதிபதிக்குப் பின்-னால் எம்மைப் போன்ற உண்மையான விசுவாசமான பிரஜைகள் இருக்கும் வரை எதுவும் சதிகாரர்களால் சாதித்துவிட முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்துடன் சிங்கள,தமிழ் மற்றும் முஸ்லிம்களாகிய நாமனைவரும் மிகவும் புரிந்துணர்வுடன் அமைதியான சூழலில் வாழ்ந்துவருகின்றோம். இதனை அழித்து மீண்டும் ஒரு பயங்கர சூழ்நிலையை ஏற்படுத்த சதிசெய்யும் உள்நாட்டு சுயநலவாதிகளுக்கும், வெளிநாட்டு சதிகளுக்கும் எதிராக இலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்பு தனது வன்மையான கண்டணத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, தாய் நாட்டுக்கு ஆதரவாகவும், வெளிசதிகார்களுக்கு எதிராகவும் அணிதிரண்டிட அனைத்து சமூக அமைப்புக்களையும் அழைக்கின்றது.
-நன்றி-
No comments:
Post a Comment